வியாழன், 4 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-6)


நான் கவிஞனுமில்லை 
நல்ல  ரசிகனுமில்லை (பகுதி-6)

பள்ளிபடிப்பு  முடிந்து கல்லூரியில் 
சேர சென்னை வந்தேன்
முதலில் பாலிடேக்னிக்கில் 
சேர முயற்சி செய்தேன் 
ஆனால் அங்கு கணக்கில் மதிப்பெண் குறைவாக உள்ளது
இடம் கிடைப்பது கஷ்டம் என்றார்கள்
சிபாரிசு  கடிதம் பெற்று சேர்க்க முயன்றபோது
இன்னும் 14வயது பூர்த்தி செய்ய வில்லை என்று கூறி 
விண்ணப்பத்தினை நிராகரித்துவிட்டார்கள் 

இறுதியில் அரசு கல்லூரியில் pre-university course ல் சேர்ந்தேன். 
அதை பாஸ் செய்தவுடன் B.com.
படிக்கலாம்  என்ற எண்ணம். 
ஆனால் விதி அங்கும் விளையாடியது

மொழிப்பாடமாக ஹிந்தியை எடுத்துக்கொண்டுவிட்டேன்.
ஏதோ  பிராத்மிக் வரை படித்திருக்கிறோமே ,
சமாளித்துக்கொள்ளலாம் என்று அங்கு வகுப்புக்கு போனால் 
அனைவரும் இந்திகாரர்கள்.
வகுப்பும் முழு இந்தியில் நடத்தப்பட்டது. 
ஒன்றும் புரியவில்லை
இறுதியில் தட்டு தடுமாறி காலத்தை ஓட்டினேன்.
இந்தி நோட்ஸ்களை வாங்கி அதை உருபோட்டு 
எப்படியோ இந்தியை பாஸ் செய்துவிட்டேன். 

ஆனால் மற்றபடி,பௌதிகம்,ரசாயனம், கணக்குகள் 
போன்ற இனங்களில் என் ஜம்பம் சாயவில்லை 
கணக்கில் மீண்டும் மீண்டும்  தோற்றுபோனேன் 
மூன்றாவது முறைதான் Pre-university தேர்வு பெற்றேன். 

என்னுடைய பட்டதாரி ஆகும் கனவு தகர்ந்தது.
 நீ ஒரு முட்டாள் நீ எதற்கும் லாயக்கில்லை 
என்ற பட்டத்தை மட்டும் பெற்றுக்கொண்டு 
சென்னை தேர்வாணைய குழு தேர்வு எழுதி என்னுடைய 18 வது 
வயதில் அரசு பணியில் சேர்ந்துவிட்டேன். 
பணியில் சேர்ந்த பிறகு அந்த பணியே கதி என்று கிடந்தேன்.

எட்டு ஆண்டுகள் கழித்து அஞ்சல் வழிகல்வி
மூலம் என்னுடைய B.com கனவை நிறைவேற்றிக்கொண்டேன்.
பிறகு cost accountant course படிக்க முயற்சி செய்தேன்
அது கனவாகவே போய்விட்டது.

அதற்குள் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டேன்.
குறைந்த சம்பளம். குடும்ப பாரம் என்னை அழுத்தியது.
இருந்தும்  நான் படிப்பதை விடவில்லை.
பழைய புத்தக கடைகளுக்கு போய் நிறைய புத்தகங்களை வாங்கி 
அவைகளை படித்து என் அறிவை வளர்த்துக்கொண்டே.
இருந்தாலும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும்
என்ற என் மனதில் தணியாத ஆர்வத்தால் நூலகத்திலிருந்து
தேர்ந்தெடுத்து  புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.
தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தையாவது 
படிக்காமல் இருக்கமாட்டேன் 
இரவு 12மணிக்குதான் படுப்பேன். .

ஒரு காலகட்டத்தில் ஆன்மீக புத்தகங்களை ஏராளமாக 
படித்தேன் .சித்தர்  பாடல்கள், ஆன்மீக  பெரியோர்களின் வாழ்க்கை சரிதங்கள் 
கவிதைகள், தமிழ் நூல்களில், பாரதி, திருக்குறள், திருமந்திரம், பகவத்கீதை, மகாத்மா காந்தியின் நூல்கள் ,ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூல்கள் என ஏராளமாக படித்தேன் 
என்  வாழ்வில் நான் பட்ட துன்பங்களுக்கும் தொடர்ந்து வரும்
ஏமாற்றங்களுக்கும் அவை  மருந்தாக அமைந்தன. (இன்னும் வரும்) 
 
 

1 கருத்து:

  1. நல்ல புத்தகங்கள் - /// துன்பங்களுக்கும் தொடர்ந்து வரும் ஏமாற்றங்களுக்கும் அவை மருந்தாக அமைந்தன. /// - உண்மை...

    பதிலளிநீக்கு