ஞாயிறு, 31 மே, 2015

இறைவன் நமக்கு அளித்த உயிர் எதற்காக?

இறைவன் நமக்கு அளித்த உயிர் எதற்காக?

ஜடமாய் கிடந்த நமக்கு 
இறைவன் நம் மீது கருணை கொண்டு 
உயிர் தந்தான் உயர்வான வாழ்க்கை  வாழ்ந்திட 


அற  வழியில் பொருளீட்டி 
தன்னலம் கருதாது வாழ்ந்து 
அன்போடு அனைவருடன் பழகி 
ஆனந்தம் அடைவீர் என்றான் இறைவன் 

அந்தோ பரிதாபம் !
இன்று  நடப்பதென்ன ?

இந்த பூமியில் அன்புமில்லை பண்புமில்லை, 
ஒழுங்குமில்லை 
ஒழுக்கமும் இல்லை 
எங்கு பார்த்தாலும் ஒரே அவல ஓலம்தான் 
விண்ணிலும் மண்ணிலும். 

மானிட பிறவியின் நோக்கமே 
தன்னை அறிந்துகொண்டு தன் 
தலைவனை அறிவதற்கே என்பதை 
மறந்து போனது இந்த மானிடம்.

பிறரை சுரண்டி சொத்து சேர்ப்பதும், 
இன்பம் தரும் இயற்கையை மாசுபடுத்துவதும் 
துன்பம் தரும் செயற்கையில் மூழ்கி அழிவதும்தான் 
இவன் தேடிய வழி 

யாருடனும் இசைந்து வாழான் 
எதனுடனும் அனுசரித்து போகான் 

அனைவரிடமும் பகைமை அதனால் 
எங்கும் அமைதியின்மை 
உள்ளத்தில் அமைதியில்லை 
அதனால் உலகினிலும் 
அமைதியில்லை 

தன்னை அடக்க வழியறியாமல் உலகில் திரியும் போலி 
காவி துறவிகளிடம் அமைதி பற்றி பாடம் கேட்க அலைகின்றார் 
அந்தோ பாவம் ! இருவரும் சேர்ந்து கூட்டாக 
இவ்வுலகில் ஆட்டம் போட்டு அழிகின்றார். 

கூட்டம் சேர்த்துக்கொண்டு 
கூப்பாடு போட்டு ஆர்பாட்டம் செய்தால் 
அனைத்து பிரச்சினைகளும்  தீர்ந்து விடும் என்று 
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் 
கும்பல் பெருகிவிட்டது இந்நாட்டில்.

அதனால் ஆதாயம் அடைந்தவர்கள்
கூட்டம் போட்டவர்கள்  மட்டுமே 
கூடியவர்களின் பிரச்சினைகள்  
எதுவும்  தீர்ந்தபாடில்லை. இதுநாள் வரை. 

நாவில் இருக்குதடா நயம் என்றார் அறிவுள்ளோர்.
நாவின் மூலம் நட்புறவை வளர்த்து நன்மை அடையாமல்  
மக்களிடையே நஞ்சை விதைத்து நாசமாய்ப் போகின்றார் 

உழைப்பவர்களின் நலனுக்காக உரக்க பேசுகின்றார் 
ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவன் உதிரத்தை சுரண்டி 
கொழுக்கின்றார் .

பிறப்பு முதல் இறப்பு வரை ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள் 
மதத்தின்  பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் 
இது போதாதென்று வர்த்தகத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால் 
அம்மம்மா !போதுமடா சாமி ! எதற்காக பிறந்தோம் என்று 
நினைக்க தோன்றுகிறது.

மனதில் உரம் உள்ளவன் அனைத்தும் சரியாகும் 
என்று தொடர்ந்து முயற்சி செய்கிறான் 

உரமில்லா கோழை மனம் கொண்டவன் 
உரம் இல்லா பயிர்கள் 
செத்து மடிவதைபோல் 
தன்னை மாய்த்து கொள்கிறான். 

அரிதாய் கிடைத்த உயிரை 
அழித்துக் கொல்வது   மடமை.

அது இறைவன் நமக்கு அளித்த கொடை 
இந்த உடல் உயிருக்கு ஆடை 

உயிர் இறைவனின் உடைமை 
அதை நன்றாக காத்து 
நம்மைமேம்படுத்திக்கொள்வது 
நம்  அனைவரின் கடமை, 
உண்மையும் புளுகும்

உண்மையும் புளுகும் 

உண்மைதான் கடவுள்
பொய் அந்த கடவுளை மறைக்கும்  திரை

உண்மையை காண வேண்டுமென்றால்
பொய் என்னும் திரை விலக வேண்டும்.

உள்ளத்தில் உண்மை என்னும் ஒளி
எப்போதும் இடைவிடாமல்
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது.

அது வெளியிடும் ஒளியைக் கொண்டுதான்
மனத் திரையில் பொய்கள் நாட்டியமாடுகின்றன

நாம் அனைவரும் அந்த நிழல் வடிவங்களை
உண்மையென்று நம்பிக்கொண்டு நாட்களை
கடத்திக் கொண்டிருக்கிறோம்.

உண்மையை உண்மையால்தான்
அடையமுடியும்.

பொய்க்கு அந்த வாய்ப்பு என்றும் கிடையாது.

ஆனால் நாம் இவ்வுலகில் கால் வைத்த
கணம் முதல் பிணமாகும் வரை உண்மையே
பேசுவதும் கிடையாது மற்றவர்களையும்
பேச விடுவதும் கிடையாது.

காலையில் கண் விழித்தது முதல்
இரவில் கண்மூடும் வரை பொய்களையே
அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்கள்
சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டு விட்டோம்.

அதனால் உண்மை என்ற ஒன்று இருப்பதையே
மறந்து விட்டோம்.

நம் தவறை பிறர் காணாமல் இருக்க பொய்
பேச தொடங்கிய நாம் அது தொடர்கதையாக
மாற அனுமதித்து உண்மையை தலை தூக்க விடாது
செய்துவிட்டோம்.

தவறுகள் செய்வது மனித இயல்பு.
அதை ஏற்றுக்கொண்டு உணர்ந்து மீண்டும் அந்த
தவற்றை செய்யாது இருக்க முயற்சி செய்தால்
உண்மை உள்ளிருந்து வெளிப்பட்டு நம்
வாழ்வை வளமையாக்கும்.


சனி, 30 மே, 2015

அனைத்து தீமைகளின் ஆணி வேர் எது?

அனைத்து தீமைகளின் ஆணி வேர் எது?

இந்த உலகில் யாரும் சுகமாக இல்லை .
அப்படி சில பேர்கள் சுகமாக இருந்தாலும் 
அந்த சுகம் நிலைப்பதில்லை 

அப்படி நிலைத்தாலும் அதை சிலர் நிலைக்க 
விடுவதில்லை. 

இந்த நிலை இந்த உலகம் தோன்றிய நாள்முதல் 
அப்படியேதான் இருக்கிறது. 

இதில் மாற்றம் எதுவுமில்லை. 

ஒரு சிலர் முயற்சி செய்து 
வாழ்வில் முன்னேறுகிறார்கள். 

ஆனால் இன்று பலரோ குறுக்கு வழியில் 
அதை அடைய முயற்சி செய்கிறார்கள். 

அனைத்திற்கும் அடிப்படை காரணம் 
சுயநலம்தான். 

என்னதான் நேர்மையைப் பற்றி வாய் கிழிய 
பேசினாலும் தனக்கென்று வரும்போது 
நேர்மை அடங்கி ஒடுங்கி காணாமல் 
போய்விடுகிறது. 

நேர்மையாக வாழ நினைப்பவர்கள் 
அனைவராலும் சிறுமைப் படுத்தப் படுகிறார்கள். 

சமுதாயம் அவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று 
முத்திரை குத்தி  மூலையில் தள்ளிவிடுகிறது. 

சுயநலம்தான் ஒவ்வொரு மனிதனையும் 
லஞ்சம் கொடுக்கச் சொல்கிறது. சட்ட விதிகள் 
கட்டுப்பாடுகளை மீறச் செய்கிறது. 

சுயநலம்தான் மற்றவர்களின் உழைப்பை 
சுரண்ட வைக்கிறது. 

குறுக்கு வழியில் பணக்காரன் ஆகியவன் 
மற்றவர்களை அடிமைப்படுத்தி அவர்களை சுரண்டி 
அவர்களை தொடர்ந்து தன்  கட்டுப்பாட்டிலேயே 
வைத்துக் கொள்கிறான். 

இந்த கூட்டத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், 
மற்றும் பணக்காரர்கள்,சமூக  விரோதிகள் அடங்குவர். 

இவர்கள் தங்களை நிலை நிறுத்துவதற்காக 
என்ன  வேண்டுமானாலும் செய்பவர்கள். எதை வேண்டுமானாலும் 
காரணம் காட்டுவார்கள். 

அனைத்திற்கும் காரணம் ஜாதிதான் என்பார்கள் சில நேரம் 
சில நேரங்களில் ஆளும் கட்சிதான் காரணம் என்பார்கள்.
சில நேரங்களில் மதவெறி அவர்களுக்கு கை கொடுக்கும்.  

ஆனால் தங்கள் ஆதாயத்திற்காக யார் கூட வேண்டுமானாலும் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். அப்பாவி மக்கள் அவர்கள் 
கூறுவதை உண்மை என்று நம்புவார்கள் 


சாமானிய மனிதர்களுக்கு இவர்கள் செய்யும் 
தந்திரங்கள் .  புரியாது 

வாய் சொல்லில் வீரர்களாக விளங்கும் இவர்கள் 
விரிக்கும் வலையில் விழுந்த உழைக்கும் வர்க்கம் 
தாங்கள் பிழைப்பதர்க்கே இவர்கள்தான் காரணம் என்று நம்பி 
சிந்திக்கும் திறனை இழந்ததுதான் அனைத்திற்கும் காரணம். 

உணர்ச்சிகளுக்கு  அடிமையான அடித்தட்டு மக்கள் 
எது உண்மை எது பொய் என்று சிந்திக்கும் நிலை 
வரும்போதுதான் அவர்களுக்கு உண்மையான 
வாழ்வு மலரும். 

அதுவரை. ......

வெள்ளி, 29 மே, 2015

விலை கொடுத்து வினையை வாங்கி வீணாய் போகாதீர்.

விலை கொடுத்து வினையை வாங்கி 
வீணாய் போகாதீர். 

முக நூலில் வந்த பதிவு.

ஒரு நாள் இரவு முழுவது எனது மகள் வாந்தி எடுத்தாள்.கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் எடுத்தாள்... காலை 3 மணிக்கு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றேன்.உணவு ஒவ்வாமை என்று மருத்துவர் கூறி ஊசி போட்டார்.நான் காலை விடிந்ததும் மனைவியிடம் நேற்று என்ன வெல்லாம் சாப்பிட்டால் என்று கேட்டதில் இரவில் மேகி நூடுல்ஸ் தின்றாள் என்பதை அறிந்து கொண்டேன் ..நேராக மருத்தவரிடம் சென்று கேட்டேன் .நூடுல்ஸ் தின்பதால் ஏன் இவளவு பெரிய ஒவ்வாவமை வருகிறது அப்படி என்ன பிரச்னை என்றேன் . மருத்துவர் என் நண்பர் என்பதால் அவர் இந்த விளக்கத்தை சொன்னார்.இவர்கள் பாக்கெட்டில் குறிப்பிட பட்டுள்ள குரிபீடுகளுக்கும் ,அதில் வைத்துள்ள பொருளிற்கும் சம்பந்தம் இல்லாமலே தாயரிகின்றனர்.இவை அதிக நாள் கேட்டு போகாமல் இருக்க ,சுவை அதிகமாக இருக்க இப்படி வேதி பொருள்கள் கலக்க படுகின்றன .சாண்டிறதால் பெறுவதோடு சரி அதற்கு பிறகு அதை கடைபிடிபதில்லை .அதனால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது.மேலும் இந்த மேகி நூடில்சில் மோனோசோடியம் குளுடாமேட் உப்பு அதிகமாக உள்ளது என்றார் .
சரி மோனோசோடியம் குளுடாமேட் உப்பு என்றால் என்ன என்பதை தற்போது பார்ப்போம்
துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.
எப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா? மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.
மோனோசோடியம் குளுடாமேட் ஒரு சுவை கூட்டி. 1909ல்தொடங்கியது இதன் அறிமுகம். அறிமுகமான நாள் முதல் அதைவெல்லஆளே இல்லை - மார்கட்டில்.அறிமுகம் ஜப்பானில். அகில உலக சாப்பாட்டுப்பிரியர்களும் அடிமை இதற்கு. முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத்தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள்.
அமொரிக்காவில், "பொதுவாக பாதுகாப்பான பொருள் பட்டியலில்" உப்பு, மிளகு, வினிகர் ஆகியவற்றுடன் மோனோசோடியம் குளுடாமேட்டும் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனிலும் மோனோசோடியம் குளுடாமேட்பாதுகாப்பான உணவுப்பட்டியலில் வருகிறது.
1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின் முகத்திரை கிழிந்தது. சீனஉணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல், உடலில்மதமதப்பு, உடலின் மேல் பகுதியில் இறுக்கம் ஆகிய உபாதைகளைஉணர்ந்தனர். “சீன உணவக உபாதை” என அதற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம் குளுடாமேட்டே காரணம் எனமுடிவு கட்டப்பட்டது. ஆயினும் அதை நிரூபிக்க முடியவில்லை.
ரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில், மோனோசோடியம் குளுடாமேட்நியூரான்களை(மூளைத்திசுக்களை)த் தூண்டி சுவையை அதிக அளவில்உணரச்செய்கிறது. ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்சிமீர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகலாமென எச்சரித்துள்ளார்.
மோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில் மோனோசோடியம்குளுடாமேட் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல், “மோனோசோடியம் குளுடாமேட்ஒரு வயதிற்குட்பட்டகுழந்தைகுளுக்கு ஏற்றதல்ல” எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்,எச்சரிக்கையாய் இருங்கள். மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை “இயற்கை சுவைகூட்டி” என்றும்குறிப்பிட்டிருப்பர். ஏமாந்து விடாதீர்.
உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை. மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்பட்ட உணவின்மற்றொரு ஆபத்து- சுவைகூட்டிகள் நாம் உண்ணும் உணவின் அளவைஅதிகரித்து உடல் எடையைக் கூட்டும் - கவனம். எனவே, மோனோசோடியம்குளுடாமேட் போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே உடலுக்குஉகந்தது.
"மோனோசோடியம் குளுடாமேட்" என்பது இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற சிறிய பாத்திர முத்திரையுடன்) விற்கப்படும் ஒரு பொருள். கவனமா இருங்க!
இது நான் ஓராண்டிற்கு முன்பே தெரிந்து கொண்டது .இதை இப்போதுதான் உத்திர பிரச்தேச அரசாங்கம் கண்டு பிடித்து அங்கே இன்று மேகி நூடுல்ஸ் இன்று தடை செய்ய பட்டுள்ளது..
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 'மேகி' நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகளில் அதிகமான அளவு இருக்கிறது என்று அறிவியலாளார்கள் தெரிவித்துஉள்ளனர். கண்டறியப்பட்ட பின்னர் டெல்லியில் உள்ள தரநிர்ணய அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது உணவில் ருசி மற்றும் மணத்தை அதிகரிக்கும் ரசாயனப்பொருள், அதிக அளவில் கலக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மேகி நூடுல்ஸ் உணவு பண்டத்தை தயாரிக்கும், பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே' மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் உத்தரபிரதேசம் முழுவதும் 'மேகி' நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள் திரும்பபெற இன்று உத்தரவிடப்பட்டு உள்ளது .ஆனால் தமிழகத்தில் இன்னும் நூடுல்ச்கள் விற்பனைகளில் உள்ளது
-கலைவாணன் சங்கரநாராயணன்