ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

காகங்கள் உணர்த்தும் பாடம்


காகங்கள் உணர்த்தும் பாடம்


இந்த இரண்டு காகங்களும் உணர்த்தும் கருத்து என்ன?
ஒரு காகம் வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒரு காகம் தரையை பார்த்துக்கொண்டிருக்கிறது
இரு நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவன் சிறை கம்பிகளின் வழியாக
முதல் காகத்தை போல் வானத்தை பார்த்துகொண்டிருந்தான்.
ஆஹா இந்த வானம் எவ்வளவு அழகாக இருக்கிறது.
இந்த நட்சத்திரங்கள் எவ்வளவு அழகாக
ஒளி வீசி கொண்டிருக்கின்றன.
இந்த இரவு எவ்வளவு அமைதியாக இருக்கிறது
என்று ரசித்து கொண்டிருந்தான்.
மேலும் மாபெரும் தலைவர்கள் நம் நாட்டிற்காக
சிறை சென்றதும் பல தியாகங்கள் புரிந்ததும்
அவன் நினைவிற்கு வந்தது.
அவன் தான் சிறையில் இருப்பதை பற்றி கவலைப்படவில்லை.

ஆனால் மற்றொருவனோ இரண்டாவது காகத்தை போல்
தரையை பார்த்துகொண்டிருந்தான்.
அவன் மனதிலோ தான் சிறைக்கு வந்துவிட்டோமே
தன் குடும்பம் என்ன ஆகுமோ,
தன் வாழ்க்கையோ இந்த சிறையிலேயே முடிந்து விடுமோ,
இனிமேல் தனக்கு எதிர்காலமே இல்லையோ
என்றெல்லாம் கவலைப்பட்டு கொண்டு
அமைதிஇல்லாமல் தவித்து கொண்டிருந்தான்


இருவரும் சிறையிலும் அடைக்கபட்டிருந்தாலும்
ஒவ்வொருவரின் மனநிலையில் வேறு வேறு சிந்தனைகள்.
ஒன்று நேர்மறை சிந்தனை மற்றொன்று எதிர்மறை சிந்தனை.


எங்கிருந்தாலும்,எந்த நிலைக்கு வந்தாலும்
நம் நம்பிக்கையை தளரவிடக்கூடாது.
வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள
மனதை பழக்க வேண்டும்
அப்போதுதான் தோல்விகளையும் வெற்றி படிக்கட்டுகளாக
மாற்ற முடியும் 
நீங்கள் எப்படி?நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் 

அண்ணலும் அண்ணாவும்


அண்ணலும் அண்ணாவும்
அண்ணல் மகாத்மாகாந்தியின் 
படம் ரூபாய் நோட்டில் 
இல்லையென்றால்
அது செல்லாது.
பேரறிஞர் அண்ணாவின் பெயரை பயன்படுத்தாமல்
தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது.
உண்மையே பேசி நாட்டிற்கு 
சுதந்திரம் பெற்று தந்தார் காந்தி அன்று
பொய்களை பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்
 நாட்டை ஆளுபவர்கள் இன்று
அந்நியனை அடிபணியவைக்க அமைதி வழியில்
உண்மையிலேயே உண்ணா நோன்பு 
மேற்கொண்டார் காந்தி அன்று
சுய விளம்பரத்திற்காக வயிற்றை  முன்பே நிரப்பிக்கொண்டு 
உண்ணா நோன்பு மேற்கொண்டு கேலி கூத்தாக்கிவிட்டனர் இன்று
காமராஜர் காட்டிய வழியில் செல்ல மறுத்த
காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்தது.
அண்ணா காட்டிய வழியில் சென்ற கழகம் 
ஆட்சியில் தொடர்ந்து இருக்கிறது.

முதியோர் தினம்முதியோர் தினம்

முதியோர் தினம்
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்
முதல் நாள் முதியோர் தினம்
காதலர் தினம் கொண்டாடும்
காளையர் கன்னியர் தங்கள்
எதிர் காலத்தை நினைத்து 
முதியோர் தினமும் கொண்டாடுங்கள்

முதியோரை மதியாதார்
வாழ்ந்தும் வாழாதார்

நீங்கள் நன்றாக வாழ 
வாழ்த்து பெறுங்கள் அவர்களிடம்

அவர்களோடு அன்பாய் பேசுங்கள் 
ஆதரவாய் உதவிகள் செய்யுங்கள் ;

முதிய வயதிலும் ஆட்டம் போடும் சில இளசுகள்
பழைய நினைவுகளை மட்டும் அசை போடும் சில பெரிசுகள் ;

சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைகளை போல சிலர்
சில முதியோர்கள் கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்டுகள் ;
அவர்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்

கிராமபோன் ரெகார்டுகள் தனக்குதானே
கீறல் போட்டு கொள்வதில்லை
அதை பயன்படுத்தியவரின் 
கவனக்குறைவுதான் மனதில் கொள்ளுங்கள்

முதிய வயதிலும் முயற்சி செய்து 
வெற்றி படிகளில் ஏறி மகிழ்ந்தோரும் உண்டு ;

அயற்சியினால் அல்லல்பட்டு 
தளர்ச்சி அடைந்தோரும் உண்டு
இளமையில் நெறி கெட்டு  அலைந்தவன்
தறி கெட்ட வாழ்க்கை வாழ்ந்து
முதுமையில் துன்பத்தில் சாகிறான்
;

இளமையில் தப்பாட்டம் போட்டவன்
முதுமையில் தள்ளாட்டம்தான் போடவேண்டும் ;

ஒழுக்கத்தோடு வாழ்ந்தவன் 
முதுமையில் புழுக்கமில்லாமல் இருக்கிறான் ;

முதுமையிலும் மன முதிர்ச்சி அடையாதவன்
அதிர்ச்சிகளைத்தான் பரிசாக பெறுகிறான்

கால்கள் இருந்தும் நடக்காதவன் 
முதுமையில் நடைபிணமாகிறான்

உலகத்தை அன்போடு நேசிக்க தெரிந்தவன்
யாரிடமும் எதற்கும் யாசிக்க நேர்வதில்லை

பொறுமையை கடைப்பிடிக்கும் முதியோர்கள்
போற்றப்படும் காலம் வந்தே தீரும்

முதிய வயதில் குறைவாக உண்பது
 நோயில்லா வாழ்வை தரும் ;

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது
நாம் துன்புறாமல் இருக்கும் வழி

அகந்தை உள்ள முதியோர்கள் அனைவராலும்
கந்தை துணிபோல் ஒதுக்கபடுவார்கள்

பண்பாடுகளை காக்கும் முதியோர்களின்
 மனம் புண்படாது காப்பது நம் கடமை

அவர்கள் மண்ணில் மறையும்வரை
 நம் கண்போல் வைத்து காப்பாற்ற வேண்டும் ;

முதியோர்கள் அனுபவங்கள் 
நம் நாட்டிற்கு என்றும் தேவை

அவர்களுக்கு செய்யும் சேவை 
என்றும் வளப்படுத்தும் நம் வாழ்வை

அவர்களின் கடந்த கால நிகழ்வுகள்
 நிகழ் கால வாழ்விற்கு பாடங்கள்

அதை உணரா உள்ளங்கள் ஒரு நாள்
 செல்லத்தான் வேண்டும் முதியோர் இல்லங்கள் .;

பெற்றோர்களிடம் நன்றி மறந்தவர்கள் 
பன்றியை விட கீழானவர்கள் 

இளமையில் இந்த உடலை 
முறைப்படி பராமரிக்காதவன்
முதுமையில் காணாமல் போவான் ;

இறைவன் கொடுத்த இந்த
உடலில் இஷ்டப்படி வாழ்ந்தவன்
முதுமையில் கஷ்டப்பட்டுதான் போவான் ;

உடலும் உள்ளமும்
உறுதியாக இருந்தால்தான்
கடலும் வானமும் போல் 
இறுதிவரை மகிழ்ச்சியாக வாழலாம் ;

முதுமையிலும் தொடர்ந்து 
அறிவை வளர்த்து கொள்பவனும்
அயராது உழைப்பவனும் 
என்றும் சோர்வடைவதில்லை

ஒழுக்கமிலா பெற்றோரின் பிள்ளைகள்
முதுமையில் சோகத்தைதான் பரிசாக தருவார்கள் ;

தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக
தன் நிகழ்காலத்தை தொலைத்த முதியோர்களே
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு
 படிப்போடு பண்பையும் ஊட்டி இருந்தால் பிழைத்தீர்கள்

ஏனென்றால் பண்பில்லா வாழ்வு
முட்கள் நிறைந்த காடு
அதில் தீய விலங்குகளும்
 தீயவர்களும்தான் இருப்பார்கள் .

இவையெல்லாம் இரு தரத்தாரும்
மனதில் கொள்வீர்
ஒருவரை ஒருவர் மதித்து
இன்றும் என்றும் இன்பமாய் வாழ்ந்திடுவீர் .

காந்தி ஜெயந்தி


காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி
ஆண்டுதோறும் அக்டோபர்  2-ம் நாள்
 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை 
 காந்தி ஜெயந்தியாக கொண்டாடுவார்கள்
அவரின் படத்திற்கும் சிலைகளுக்கும்
பக்தி சிரத்தையுடன்  மலர்கள் தூவி 
மாலைகள் சார்த்தி நேர்மைக்கு பெயர் போன 
மகாத்மா காந்திக்கு நேர்மையற்ற வழியில் ஊர் பணத்தை
கொள்ளையடித்து ஊர் மெச்ச விழா கொண்டாடுகிறார்கள்
ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள்
எல்லோரையும் கதர் கட்ட செய்து
நெசவாளர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் காந்தி அன்று
கதர் வாரியங்களை மூடிவிட்டு வெளிநாட்டு
துணிகளை தாராளமாக விற்க அனுமதித்து
இங்குள்ள பரம ஏழை நெசவாளர்களின் வாழ்வை
அழித்துவிட்டனர் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இன்று
காந்தி குல்லா அணிந்து இன்றொருநாள் மட்டும்
வேஷம் கட்டுகிறார்கள் கோடிகணக்கான நெசவாளர்களின்
வாழ்க்கையை அழித்துவிட்டு அவர்களை
தற்கொலை செய்ய விட்டுவிட்டு
அவர்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்திய
காந்தி மகான் பிறந்த நாளை கொண்டாடுகிறார்களே ,
யாரை ஏமாற்றுவதற்க்காக.?
கள்ளை ஒழிக்க வாழ்நாள் முழுவதும்
போராடிய காந்தி எங்கே ?
பட்டி தொட்டி எலலாம் அரசு செலவிலே
மதுக்கடைகள் திறந்து நாட்டு மக்களின் வாழ்வை
நாசமாக்கும் தற்போதைய அரசியல்வாதிகள் எங்கே ?
ராம ராஜ்ஜியம் வர வேண்டும் என்று விரும்பினார் காந்தி 
அரசியல்வாதிகளே ஆனால் நீங்கள் ஊழல் சாம்ராஜ்யத்தை
நிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டீர்கள் 
உண்மைக்கும் ,நேர்மைக்கும்
சின்னமாய் விளங்கும் காந்தி மகான்
படம் போட்ட ருபாய் நோட்டை
சாட்சி வைத்தே லஞ்சம் வாங்கி ஊழல் செய்து
மாறி மாறி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில்
ஏறி இறங்கும் இவர்கள் காந்தி பிறந்த நாள் விழா
கொண்டாட அருகதை உண்டா ?
இரண்டு கதர் துணிகளுடன்
எளிமையாக வாழ்ந்த அந்த மகான் எங்கே ?
கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள
சொத்துக்களுடனும்வெளி நாட்டு வங்கிகளில்
கோடிக்கணக்கில் பணம் போட்டு விட்டு
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில்
பத்து காவலர்கள் நவீன பாதுகாப்பு ஆயுதங்களுடன்
புடை சூழ பவனி வந்து நொடிக்கொரு தரம் 
பொய்களை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி
கொழுக்கும் தற்கால அரசியல்வாதிகள் எங்கே ?
ஏற்கெனவே காந்தியின் அனைத்து கொள்கைகளுக்கு
சமாதி கட்டியாகிவிட்டது 
கிராம பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிட்டது
சிறுதொழில்கள் சிறுமைபடுத்தப்பட்டுவிட்டன
சுதேசிகள் பரதேசிகளாகிவிட்டார்கள்
இன்னும் எதற்கு நீங்கள் தேசப்பிதாவிர்க்கு விழா எடுக்க வேண்டும் ?
காந்தியின் கொள்கைகளை நம்மை விட
மேலை நாட்டினர் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்
மார்டின் லூதர் கிங்கும் , நெல்சன் மண்டேல்லாவுமே இதற்க்கு சான்று
நம் நாட்டு மக்களுக்கு மேலை நாட்டை
சேர்ந்தவன் படம் எடுத்து காந்தியை பற்றி
புரியவைக்க வேண்டியிருக்கிறது .என்ன கொடுமை ?
அது சரி காந்தி யார் என்று கேட்கிறீர்களா?
ருபாய் நோட்டில் ஒரு படம் அச்சிடபட்டிருக்கும் அவர்தான் காந்தி.


பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க எளிய வழி

பிளாஸ்டிக் பயன்பாடுகளை 
குறைக்க எளிய வழி

சென்ற நூற்றாண்டின் அதிசய கண்டுபிடிப்பு பிளாஸ்டிக்
அது தன்னை நிரந்தரமாக மக்களை கவர்ந்துவிட்டது 
அது மக்களோடு மக்களாய் கலந்துவிட்டது 
கருவறையிலிருந்து கல்லறை வரை 
அது மனிதர்களோடு பிரயாணம் செய்து 
அவர்களோடு உறவாடுகிறது.

இன்று உண்மையான மணமுள்ள  மலர்களை விட வண்ண வண்ண 
மணமற்ற பிளாஸ்டிக் மலர்களே அலங்கார பொருளாக் பயன்படுகிறது
உலோக பாத்திங்களை விட பிளாஸ்டிக் டப்பாக்களே 
அதிக அளவில் மக்களால் வாங்கப்படுகின்றன

இவ்வளவு செய்யும் அது மக்களுக்கு தீராத தலைவலியை தரும் 
என்று கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது

அது நுழையாத துறையே கிடையாது. 
மக்கள் அதற்க்கு அடிமையாகிவிட்டார்கள் 

எப்படி புகை பிடிப்பவன் புகை பிடித்தால் தனக்கும் சுற்றி இருப்பவர்க்கும் 
புற்று நோய் வரும் என்று தெரிந்திருந்தும் புகையை உள்ளே இழுத்து வெளியே தள்ளி இன்புறுகின்றானோ அதைபோல்தான்.பிளாஸ்டிக்கும் புற்றுநோய் தரும் 
என்று தெரிந்தும் மக்கள் அதை வெறுப்பதில்லை

மாறாக குழந்தை பிறந்தவுடன்  அந்த காலத்தில் தன் விரலைதான் சூப்பும் 
ஆனால் இன்றோ அதன் வாயில் நிப்பிளை சொருகிவிடுகிரார்கள் 
அதுவும் அந்தநிப்பிள்  தன் தாயினுடையது என்று நம்புகிறது 
எப்படி பசுவுக்கு முன் செத்த கன்றுக்குட்டியின் உடலில் வைக்கோலை 
அடைத்து வைத்து  அது அதன்கன்று என்று ஏமாற்றி பாலை 
கறக்கிறார்களோ அதுபோலதான்  இந்த செயலும்.

இன்று அதிகமாக பிளாஸ்டிக் மெல்லிய பைகளும், 
தண்ணீர் பாகேட்டுகளும், குடிக்க பயன்படுத்தும் 
குவளைகளும் பயன்படுத்தப்படுகின்றன. 
எல்லா இடங்களிலும், எல்லா மனிதர்களாலும்
 பயன்படுத்தப்படுகின்ற இந்த பொருட்கள் பயன்பாடு 
முடிந்தவுடன் கண்ட இடங்களில் வீசி எறியப்படுகின்றன .

அவைகள்தான் இன்று பெருமளவில் நம் நாடு முழுவதும் 
குவிந்து போய் சுகாதார கேடுகளையும்,
சுற்று சூழல் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டன

அதனால்தான் இப்போது எங்கு பார்த்தாலும் 
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைக்கப்படவேண்டும் 
என்று பேசப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக, பிளாஸ்டிக் குவளைகளுக்கு பதிலாக மண்ணால்
செய்யப்பட்ட குவளைகளை பயன்படுத்தினால் 
பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறையும் 
சுற்று சூழலுக்கு ஆபத்து ஏற்படாது. 
மண்பாண்ட தொழிலாலர்களுக்கும் வேலை வாய்ப்பு  ஏற்படும்.
அவர்களின் வாழ்வும் மலரும். 
உதாரணத்திற்கு  ஐஸ்கிரீம், தயிர்,பாயசம் ,குடிநீர்,போன்றவற்றை 
கொடுப்பதற்கு மண்ணினால் செய்யப்பட்ட குவளைகளை பயன்படுத்தலாம்.

உணவு விடுதிகளில், நடைபாதை கடைகளில், அரசு மதுக்கடைகளில், 
அரசு துறை விழாக்களில், அரசு அலுவலகங்களில், 
,எங்கெல்லாம் குவளைகள் பயன்பாடு இருக்கிறதோ 
அங்கெல்லாம். இதை செயல்படுத்தினால் 
பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக குறையும். 

அரசு இதை கவனத்தில் கொண்டு ஆணை பிறப்பித்து
இந்த திட்டத்தை செயல்படுத்தினால். நல்ல பயன் கிடைக்கும்.

 திருமணம் போன்ற விழாக்களில் விருந்துகளில்
 இதை முதலில் செயல்படுத்த தொடங்கினால் 
மற்றவர்களும் இந்த முறையை பயன்படுத்த தொடங்குவர் என்பது நிச்சயம்.  

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)
அந்த காலத்தில் தெருவில் 
சாக்கடைகளை  விடுவதும் கிடையாது 
இந்த காலம் போல் சாக்கடையின்
பக்கத்திலேயே உணவு கடைகளை திறந்து 
சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்றதும் கிடையாது
மக்களும் அவைகளை தின்றுவிட்டு நோயில்
படுத்ததும் கிடையாது 
ஏன் கிராமங்களில் 
பொதுவாக உணவு விடுதிகளே கிடையாது 

பொதுவாக வீட்டின் பின்புறம்தான் சாக்கடைகள் இருக்கும். 
சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து 
வெளியேறும் தண்ணீர் பின்பக்கத்தில் உள்ள 
செடி கொடிகளுக்கு போகும்.வீட்டிற்கு தேவையான
காய்கறி செடிகள் பின்புறம் நன்றாக செழித்து வளரும்.
ரசாயன் உரம் என்று ஒன்று அக்காலத்தில் கிடையாது
எல்லாம் இயற்கை உரம்தான்
காய்கறிகளும் சுவையாக இருக்கும்

 வீடுகளில் கழிவறைகளே கிடையாது 
அதனால் கொசுக்களும் ஈக்களும் அங்கு கிடையாது 
ஆனால் இன்று கழிவறை மேலேதான் வீடுகளை கட்டிக்கொண்டு அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களை சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம். 
கொசுக்கடிகளினால் தினமும் துன்புருகின்றோம். 

வீட்டின் பின்னே கொஞ்ச தூரம் தள்ளி குப்பை
 கொட்டுவதற்காக பள்ளம் வெட்டப்பட்டு 
அதில்தான் அனைத்து குப்பைகளும், மாடுகளின் சாணம் 
,மற்ற கழிவுகளெல்லாம் கொட்டப்படும்
சாணத்தின் மேல்புறம் கதிரவனின் சூட்டினால் காய்ந்துவிடும். .
ஈரமாக் இருக்கும் உட்புறத்தில் பூச்சிகளும் புழுக்களும் சுகமாக வாசம் செய்யும்.  
தோட்டத்தில் இருக்கும் பறவைகளும், கோழிகளும் குப்பையை நன்றாக கிளறி கொடுத்து அவைகளை நன்றாக மக்க செய்வதுடன் அவைகளின் வயிறையும்  நன்றாக நிரப்பிக்கொள்ளும் 
தன் குஞ்சுகளுக்கும் அதே நேரத்தில் பயிற்சியையும் கொடுத்துவிடும். 

அந்த காலத்தில் எல்லாம் மக்கும் குப்பைகள்தான். 
மக்காத  குப்பைகள் என்று ஒன்றும் கிடையாது
ஏனென்றால் உணவுகளை சாப்பிடுவது ஏதாவது ஒரு இலைகளில்தான். 
வருடத்திற்கு ஒருமுறை அந்த பள்ளத்தில் சேரும் மொத்த  குப்பைகளும்
பின்புறத்தில் உள்ள மரங்களிலிருந்து கழிக்கப்பட்ட இலை மற்றும் தழைகளும் 
பயிரிடும்நிலத்திற்கு கொண்டு சென்று உரமாக பயன்படுத்தப்படும். 
இக்காலத்தைபோல் ரசாயன் உரங்களோ ,பூச்சி மருந்துகளோ நம் நாட்டில் கிடையாது 
நிலங்களில் பறவைகள் அங்கு பறக்கும் பூச்சிகளை தின்று விடும். 
பயிர்களை அழிக்கும் எலிகளை பாம்புகள் தின்றுவிடும்.
அப்படியும் எலிகள் அதிகமாக இருந்தால் இருளர்கள் பிடித்து விடுவார்கள். 
வரப்புகளில் முளைக்கும் புற்களும்,வைக்கோலும்தான் மாடுகளுக்கு உணவு அதை தவிர எள்ளு பிண்ணாக்கும், கடலை பிண்ணாக்கு, வீட்டில் மிகுந்த உணவு பொருட்கள், தவிடு போன்றவைதான் அவைகளுக்கு உணவு. பால் மிகவும் சுவையாக் இருக்கும். அதிலிருந்து எடுக்கப்படும் நெய்யின் நறுமணம் இக்கால மக்களுக்கு தெரியாது. 

இன்று நிலங்களும் இல்லை பயிர்களும் இல்லை அதனால் மாடுகள்  
காகிதங்களையும்  சினிமா போஸ்டர்களையும்  தின்கின்றன. 
அதனால் அது கொடுக்கும் பாலில் விஷத்தன்மை நிறைந்ததாக இருக்கின்றது. அது பல நோய்களை மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் தருகின்றன .

பசுக்களை இயற்கையாக கருவூட்டல்தான் நடக்கும் இக்காலதைபோல் போல் செயற்கை கருஊட்டலோ, ஊசி போட்டு மாடுகளை சித்ரவதை செய்யும் முறைகள் கிடையாது. 

பாதாம்  மரத்தின் இலைகளை பறித்து அதை நன்றாக வெயிலில் உலர்த்தி  சணல் சாக்கு பைகளில் வைத்திருப்பார்கள்.  அதைபோல்தான் ஆல மரத்தின் இலைகளையும்.மந்தாரக் கொடியின் இலைகளையும் .வீட்டில் உள்ள வயதான பெண்மணிகள்  காலை வேலைகளை முடித்து விட்டு உணவு உட்கொண்டபின், தினம் கொஞ்சம் இலைகளை தண்ணீர் தெளித்து ஈரமாக்கி வைத்திருப்பார்கள். பிறகு அவைகளை பிரித்து அடுக்கி ஒரு கல்லை அதன்மீது வைத்திருப்பார்கள். 
அது நன்றாக படிந்து இருக்கும் .பிறகு அவைகளை கொண்டு வட்ட  வடிவமாக இலைகளை, விளக்குமாறு ஈர்க்குகளை இரண்டாக பிளந்து வைத்துக்கொண்டு அதைகொண்டு ஒருவொருக்கொருவர் அளவளாவிக்கொண்டே அழகாக  இலைகளை வட்ட வடிவமாக தைப்பார்கள். 
அந்த காலத்தில் இலைகளை தைத்து சில ஏழை குடும்பங்கள் வயிற்றை கழுவியதும் உண்டு

சாப்பிடும் முன் கை கால்களை கழுவிக்கொண்டு இலைகளை நீர் தெளித்து சுத்தம் செய்தபின்தான் உணவு உண்பார்கள்.அதனால் வயிற்றுபோக்கு போன்ற வியாதிகள் அவர்களை அண்டியதில்லை. குடிநீரை வடிகட்டியோ அல்லது காய்ச்சியோதான் அருந்துவார்கள்

இக்காலம்  காலம் போல் எந்த தண்ணீரையும் அது  தூய்மையானதா என்பதை ஆராயாதும், கண்ட இடங்களில் அசுத்தமான சூழ்நிலைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் உண்டு விட்டு பலவிதமான நோய்களை தானாகவே வரவழைத்துக்கொண்டு துன்புறுகின்றனர் (இன்னும் வரும்) 
.  

நதிகளா -இல்லை யாரும் கேட்க நாதியற்று போய் விட்ட நங்கைகளா?

நதிகளா -இல்லை 
யாரும்  கேட்க நாதியற்று 
போய் விட்ட நங்கைகளா? 

நதிகளை பெண் தெய்வங்களாக 
வழிபடும் சமூகம் இந்து சமூகம் 
தினமும் காலையில் குளிக்கும்போது 
நதிகளின்பெயரை சொல்லி 
குளியலை தொடங்குவோர் பல பேர்
ஏனென்றால் நதிகள் நம்முடைய
பாவங்களை ஏற்று 
நம்மை பரி சுத்தர்களாக ஆக்குகின்றன 
என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன

சாத்திரங்கள் உண்மையோ அல்லது 
பொய்யோ என்பது வேறு விஷயம்
அது அவரவர்களின் நம்பிக்கையை பொறுத்தது 
அதுஆத்திகன்  குளித்தாலும் நாத்திகன்  குளித்தாலும் 
அவன் உடம்பில் உள்ள அழுக்கை நீக்குகிறது 

ஆத்திகனின் நம்பிக்கையை
 நாத்திகன் கேலி செய்தால் 
ஆத்திகர்கள் அவன் மேல் பாய்கிறார்கள். 
ஆனால் உண்மையில் ஆத்திகர்களை விட 
நாத்திகன் எவ்வளவோ மேல் சில விஷயங்களில் மட்டும்

உடனே நான் நாத்திகன் என்று
முடிவு எடுத்து விடாதீர்கள். 
நாத்திகனாயினும்  ஆத்திகன் ஆயினும் 
வீடு கட்ட மணலை நதிகளிலிருந்து அனுமதி பெற்றோ
அல்லது அனுமதியில்லாமலோ 
எடுத்துதான் பயன்படுத்தியாகவேண்டும் 

குடிநீருக்கும், விவசாயம் செய்வதற்கும், 
மீன் பிடிப்பதற்கும், போக்குவரத்துக்கும்,
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் 
நதி நீர்தான் பயன்படுகிறது 
என்று அனைவரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் 
.
நிலைமை அப்படி இருந்தும் ஆபத்தான கழிவுகளை
வெளி விடும் பெரிய தொழிற்சாலைகளும், லட்சக்கணக்கான
மக்கள் வெளியிடும் அனைத்து  கழிவு நீரும் நதியில்தான் விடப்படுகின்றன. 

இந்துக்கள் ஒரு படி மேலாக சென்று எரிந்த,
எரிந்து கொண்டிருக்கும்
பிணங்களை சொர்க்கம் போவதாக நினைத்துகொண்டு 
ஆற்றில் விட்டு அதை அசிங்கப்படுத்துவதுடன் 
அதன் புனித தன்மையையும்  கெடுக்கிறார்கள்

இந்த அழகில் தினமும் கங்கா மாதாவிற்கு
விளக்கேற்றி பூஜைகள் வேறு செய்கிறார்கள். 
இவர்களின் பூஜையை கங்காமாதாவோ, 
மற்ற நதிகளோ நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது  என்பது சத்தியம் 
இப்படி இவர்கள் செய்யும் துரோகம்தான் 
இன்று மனிதர்களின் உடலில் ரோகங்களாக   வெளிப்பட்டுகொண்டிருக்கிறது. 

அதற்க்கு பரிகாரமாக சம்பாதித்த காசனைத்தையும்
லட்சக்கணக்காக  சிலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில மருத்துவமனைகளே இருந்த  நம் நாட்டில் கல்விக்கூடங்களை விட அதிக  அளவில் காளான்கள் போல் சிறிதும் பெரிதுமாக முளைத்துவிட்டன மருத்துவமனைகள் 

இன்று எங்கு பார்த்தாலும் மருத்துவ மனைகள். மக்களை பிடுங்கி தின்கின்றன.
இதில் பாதிக்குமேல் போலி மருத்துவர்கள் , அவர்கள் பயன்படுத்துவது போலி மருந்துகள் .போலி உபகரணங்கள் 
இவர்களை தவிர மாந்திரீகர்கள்,ஜோசியர்கள், சாமியாடிகள், குறி சொல்பவர்கள், பேய் விரட்டுபவர்கள் ,இப்ப்ராடானந்தாக்கள்,லாட்ஜில் ரூம் போட்டு பணம் பறிக்கும் வைத்தியர்கள் ,தொலைகாட்சி பேட்டி வைத்தியர்கள்,  என மக்களிடமிருந்துய் பணம் பறிக்கும் கும்பல்கள் ஏராளம்ஏராளம்.
 மக்கள் அவர்களிடம் மாறி மாறி சென்று ஏமாறுவதில் தாராளம் 

 இனியாவது மக்கள் திருந்தாவிடில் அவர்கள் இந்த உலகில் வாழும் காலம் முழுவதும் நோயாளி களாகத்தான் இருப்பார்கள். இந்த உலகில் இன்பமான வாழ்க்கை அமையாது 
மேலுலகில் சென்றாலும் நரகத்தின் கதவுகள்தான் அவர்களை வரவேற்கும். 

இதை உணர்ந்து இனிமேலாவது நதிகளை மாசு படுத்தாதீர்கள். 

அணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு

அணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு 

இந்த உலகத்தில் உள்ள 
அனைத்து பொருட்களும்
அணுக்களின் சேர்க்கையே 
அவைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் 
ஒரு சக்தி அவைகளை 
ஒன்றோடொன்று ஈர்த்து ஒரு வடிவமாக ஆகிறது 
பிறகு அந்த வடிவம் அவைகள் ஒன்றாக 
இருக்கும் வரை ஆட்டம் போடுகிறது 

அவைகளில் ஈர்ப்பு வலுவிழக்கும்போது 
அவைகள் பிரிந்து மீண்டும் அணுக்கலாகிவிடுகின்றன 
இதே விதிதான் அனைத்து நிகழ்வுகளுக்கும் 

அது உயிரினங்களாக  இருக்கலாம்
,உலோகமாக இருக்கலாம்,
விண்மீன்களாக இருக்கலாம்
அல்லது கோல்களாக இருக்கலாம்
 ஏன் வெறும் பாறைகளாக இருக்கலாம்.
இல்லை, நீர், நெருப்பு காற்று நீர் 
அனைத்திற்கும் இதே விதிதான்.
 
ஒன்று சேரும்போது வடிவம்
 பிரியும்போது இருந்த வடிவம் அழிந்துவிடுகிறது  
இப்படியே அண்டத்தில் இது போன்ற செயல்கள் தொடர்ந்து
தொய்வின்றி நடந்து கொண்டிருக்கிறது. 

அதுபோலதான் மனதில் எண்ண அணுக்கள் 
ஒன்றிணைத்தால் செயல்கள்.
ஒன்றிணையாவிட்டால் செயலற்ற  தன்மை. 
அவ்வளவுதான்.

இந்த ரகசியத்தை  ஒரு விஞ்ஞானி கண்டுகொண்டான். 
அணுக்கள்  சேர்வதும் பிரிவதும் இயற்கையாக நடைபெறுவதை 
நாம் செயற்கையாக  செய்து பார்த்தால் என்ன என்று முயற்சி செய்தான்,
அணுவை பிளந்தான். பார்த்தால் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் 
அதி பயங்கர சக்தி ஒளிந்து கொண்டிருப்பதை தெரிந்துகொண்டான்.

கத்தி  கண்டிபிடிக்கப்பட்டது. அது சமையலறையில் 
காய்கறிகளை வெட்டி துண்டாக்க பயன்படுகிறது
கசாப்பு  கடைக்காரன் கையில் பிராணிகளின் 
தலையை வெட்ட பயன்படுகிறது
போர் வீரனின் கையில் தன் சக மனிதர்களையே  எதிரிகளாக 
கண்டு அவன் உயிரை வாங்க பயன்படுகிறது
மருத்துவர் கையில் நோயாளியின் உயிரை காக்க 
அறுவை சிகிச்சை செய்ய பயன்படுகிறது.
எனவே பொருள் ஒன்றுதான் 
ஆனால் அது அதை உபயோகிப்பவர்களின் 
மன நிலையை பொருத்து அதன் செயல்பாடு மாறுகிறது 

அதைபோல்தான் இந்த அணுவை பிளந்த செயலும்
அது அமரிக்கர்களின் கையில் கிடைத்தவுடன் 
லட்சக்கணக்கான அப்பாவி ஜப்பானிய மக்களை
கொன்று குவிக்க பயன்பட்டது 

அணு விஞ்ஞானிகள் அதை அணு உலை நிறுவி 
மின் சக்தி உற்பத்தி செய்கின்றனர்.
மருத்துவத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கும்  பயன்படுத்தப்படுகிறது
உணவுகலை  பாதுகாக்கும் தொழில் நுட்பத்திற்கு பயன்படுகிறது. 
ஆகையால் அணுவின் மீது அணுவளவும் குற்றம் இல்லை 
அதை பயன்படுத்துபவர்களின் நோக்கத்தை  பொறுத்தே 
அது குற்றமாக கருதப்படவேண்டும். 

இன்று அதன் பயன்பாட்டை விட அது வெளியிடும்
கதிரியக்கம் மற்றும் ஆபத்தான கழிவுகளை பற்றிதான் 
ஒரு சாரார் பெரிது படுத்தி போராடுகிறார்கள்.

மனிதனுக்கு அழிவு என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று 
போராடுபவர்களுக்கும் அந்த போராட்டத்தை 
ஏற்காதவர்களுக்கும் தெரியும்.  
ஒரு ஆபத்திலிருந்து தப்பினால் அது போல் கணக்கற்ற  
ஆபத்துக்கள் நம்மை கொண்டு செல்ல காத்து கொண்டு 
 நம் முன்னேயும் பின்னேயும்  மேலயும் நாம் நிற்கும் 
நிலத்திலேயும்  இவ்வுலகில் இருக்கின்றன என்பதை 
அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் 

இந்த பிரச்சினைக்கு அனைவரும் 
கூடி பேசி விவாதித்து விரைவில் 
ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்
.

எதை எடுத்தாலும் தள்ளி போட்டுக்கொண்டே போவது 
பிரச்சினைகளை மேலும் சிக்கலாக தான் 
உதவும் சிக்கலை தீர்க்க உதவாது.
நம்முடைய அண்டை மாநிலங்களால்
நமக்கு ஏற்ப்படும் நதி நீர் பங்கீடு பிரச்சினைகள் போல   

வன வளமும் நீர் வளமும் அதிகரிக்க சில யோசனைகள்

வன வளமும் நீர் வளமும் 
அதிகரிக்க சில யோசனைகள்

தமிழ் நாட்டில் ஏராளமான  
மலைகள் உள்ளன 
இரண்டு மலைகளுக்கும் 
இடையே பள்ளத்தாக்குகள் உள்ளன 
மழை காலத்தில் பெய்யும் 
மழை அப்படியே வழிந்து 
ஒன்றுக்கும் பயனில்லாமல் 
வீணாகி போய் கொண்டிருக்கிறது 

அது போன்ற பள்ளதாக்குகளில் இருபக்கங்களிலும் 
அங்கிருக்கும் மண்ணையும் கற்களை கொண்டே
 தடுப்பணைகள் அமைத்தால் அந்த தண்ணீர் வெளியேறாமல் 
அங்கேயே தேங்கி நிற்கும். அரசுக்கு எந்த செலவும் கிடையாது 

அதனால் மரங்களும் செடிகளும் கொடிகளும்
அங்கு அதிக அளவில் .வளரும்.
மண் அரிப்பு தடுக்கப்படும் 
கோடைகாலத்தில் விலங்குகளுக்கு  
தண்ணீர் பஞ்சம் வராது.
பறவைகளும் மற்ற
உயிரினங்களும் பல்கி பெருகும். 

தடுப்பணைகளின் உயரத்தை 
அதிகரிக்க செய்தால் 
குடிநீருக்கு கூட அந்த தண்ணீரை
 உபயோகிக்கலாம் 
ஏன் விவசாயத்திற்கு கூட 
பயன்படுத்தி கொள்ளலாம் 

மூலிகை பண்ணைகள் அமைக்கலாம் 
மக்களை அப்புறப்படுத்தி 
அந்த இடங்களில் 
நீர்த்தேக்கங்களை கட்டுவதை விட 
இது போன்ற மிக குறைந்த செலவில்  
பல தடுப்பணைகளை கட்டுவதால் 
பெரிய அளவில் மழை நீர் சேமிக்கப்படும் 
சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.
மக்களுக்கும் பயன்படும். 

வன துறையினர் இந்த திட்டத்தினை
செயல்படுத்தினால்
 நல்ல பயனைக்  கொடுக்கும் 
 என்பதில் சந்தேகமில்லை 

சனி, 29 செப்டம்பர், 2012

மழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்

மழை நீர் சேகரிப்பு திட்டம்-
அரசுக்கு சில யோசனைகள்
தமிழ் நாட்டின் முதல்வர் அறிமுகப்படுத்திய
மழை நீர் சேகரிப்பு திட்டம் முன்னோடியான நல்ல திட்டம்.

ஆனால் அது செயல்படுத்தப்பட்ட வேகம் 
வழக்கம்போல் அரசுத்துறைகள்
இலக்கு நிர்ணயித்து பணிகளை 
குறிப்பிட்ட காலத்திற்கும் முடிக்க வேண்டும்
என்று திணிக்கப்பட்டதால் உரிய பலனை தரவில்லை. 

அடுத்து வந்த அரசு அந்த நல்ல திட்டத்திற்கு 
ஊக்கமும் ஆக்கமும் அளிக்காமையால்
இன்று கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்கு மட்டும் 
தொடர்ந்து செயல்படாத ஒரு மழைநீர் அமைப்பை நிறுவி 
மக்கள் அனுமதி பெற்றுக்கொள்கின்றனர். 

இன்னும் மக்கள்  அதன் நன்மையை 
உணராததுதான் இதற்க்கு காரணம் 
இன்று ஆழ் துளை கிணறுமூலம்தாம்
 மக்கள் தண்ணீர் பெறுகின்றனர். 
பெரும்பாலான இடங்களில் தண்ணீர் 
சுவையில்லாமல் பலவிதமான உப்புகள்,
சுண்ணாம்பு போன்ற படிமங்கள் கலந்து உள்ளது 
மழை நீரை உரிய முறையில் வடிகட்டி அதை
கிணற்றுக்குள் செலுத்தினால் நீர் மட்டம் உயரும் .
தண்ணீரும் சுவையாக் மாறிவிடும். .

இந்த திட்டம்  மக்கள் திட்டமாக மாற வேண்டும் 

முக்கியமாக எங்கெல்லாம் தண்ணீர்  பஞ்சம் நிலவுகிறதோ,
எங்கெல்லாம் குடிநீர் வெகு ஆழத்திற்கு சென்று விட்டதுவோ,
எங்கெல்லாம் உப்பு தண்ணீராக ,மாறிவிட்டதுவோ 
அந்த பகுதிகளை அரசு ஏற்கெனவே  கண்டறிந்து வைத்துள்ளது.

இந்த மழைக்காலம் தொடங்கும் 
முன் அந்த பகுதிகளில் மட்டும் உடனடியாக 
ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் 
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மக்களே 
மனமுவந்து ஏற்ப்படுத்தி கொள்ளும்வகையில் 
அரசு முனைப்பாக செயல்படவேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால் நல்ல  பயன் கிடைக்கும்.
 மக்கள் குடிநீருக்காக செலவிடும் 
கணிசமாக குறைந்துவிடும்.

 மக்கள் தொகை அதிமாகவும், நெருக்கி கட்டப்பட்ட வீடுகளை 
 கொண்ட இடங்களில் மழை நீர் அமைப்புகள் அமைப்பது வீணே.
 ஏனென்றால் ஒவ்வொரு வீட்டின் கழிவுநீரும் 
கழிப்பிடங்களின் கழிவு நீரும், குடிநீரும். 
தேங்கி ஒன்றாக கலந்து இருப்பதால்
மழை நீர் சேகரிப்பு திட்டம்  அமைக்க இடமே 
இல்லாத பகுதிகளில் இத்திட்டத்தை 
செயல்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை. 

ஆனால் அடுக்கு மாடி கட்டிடங்களில் 
மழை நீர் அதிக அளவில் வீணடிக்கப்படுவதால் 
அங்கு கண்டிப்பாக இந்த அமைப்பை  அமைத்து
 பராமரிக்கும்படி அரசு ஆணையிட்டால்
 பயனுள்ளதாக இருக்கும். 

அதே நேரத்தில் அங்கிருந்து  வெளியேறும் கழிவு நீரை
 சுத்திகரித்து அவர்களே அங்கு பலவிதங்களில்
 பயன்படுத்தும் தொழில்கருவிகளை நிறுவுவது
 கட்டாயமாக்கப்படவேண்டும். 

அதை தவிர அனைத்து குளங்களையும் ஏரிகளையும்.
 இயந்திரங்களை கொண்டு உடன் ஆழப்படுத்தி கரைகளை
 பலப்படுத்தியும் வைத்தால் நிலத்தடி நீர் நிச்சயம் உயறும்.
 தண்ணீர் பஞ்சமும் தீரும் 
  

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)

நம்  பண்டைய  மன்னர்கள்  
நீர்  மேலாண்மையில் நிபுணர்கள் 

மழை காலத்தில் பெய்யும்
நீரை சிறிதும் வீணடிக்காமல் 
மிக பெரிய அளவில் புத்திசாலிதனமாக
 பயன்படுத்தியுள்ளனர்.

மிக பெரிய ஏரிகளை கட்டி அதில் தண்ணீரை சேமித்து 
மதகுகள் கட்டி வருடம் முழுவதும் தண்ணீரை சிறந்த முறையில் 
கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு நீர்பாய்ச்சி
வெற்றிகரமாக  விவசாயம் செய்தனர். 
ஏரிக்கரையின் கீழ் இருக்கும் நிலங்களில் இரண்டு போகமும்.
மிக தள்ளி இருக்கும் இடங்களில் ஒரு போகமும் பயிர் செய்தனர். 

அதை தவிர பல இடங்களில் அனேக குளங்களை வெட்டி
தண்ணீர் ஆண்டு முழுவதும் மக்களுக்கு 
பயன்படும்வகையில் அமைத்திருந்தனர்.
நிலங்களின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப மழைக்காலங்களில் 
பெய்யும் நீர் இந்த குளங்களை நிரப்பிவிடும். 

ஏரிக்க்கருகில் குடிநீர் குளங்களை
பெரிய அளவில் அமைத்தனர். 
அதில் நீர் தாவரங்களை வளர்த்து
,நீர் ஆவியாகாமல் பாதுகாத்தனர் 
மீன்களை விட்டு நீரை சுத்தமாக  வைத்தும்.
ஆண்டு முழுவதும் மக்களுக்கு சுவையான
குடிநீர் கிடைக்க வழி வகை செய்தனர். 
குளத்திற்கு. ஒரு காவலரை நியமித்து
அதை நன்றாக பராமரித்தனர் 

கால் நடைகள் குடிக்கவும்
அவைகளை குளிப்பாட்டவும், 
மற்ற காரியங்களுக்கு தனியாக
குளங்களை வெட்டி வைத்தனர்.

ஏரிகளை நன்றாக பராமரிப்பு
செய்தமையால் ஆண்டு 
முழுவதும் ஏரியில் நீர் இருக்கும்.
நீர் குறையும்போது ஏரிகளை
ஆழப்படுத்தும்  வேலைகளை செய்தனர்.  
அந்த வண்டல் மண்ணை பயிர்களுக்கு
உரமாக பயன்படுத்தினர் 

ஏரிகளில் நீர் நிரம்பி இருந்ததால்
ஊரில் உள்ள அனைத்து 
கிணறுகளிலும் நீர் நிரம்பி வழிந்தது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை 
வரை கிணற்றில் நீர் மட்டம் கையால்
 நீர் மொண்டு கொள்ளும் 
அளவிற்கு இருந்ததை
அந்த கால மக்கள் அறிவர். 

இன்று ஏரிகளும் இல்லை.
அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன, 
ஏரிகளில் நீர் வறண்டதால் கிணறுகளும் வறண்டுவிட்டன
குளங்களும் வறண்டுவிட்டன, நிலத்தில் நீர் மட்டம் 
பல நூறு அடிக்கு சென்று விட்டது. இன்னும் சில இடங்களில் 
எவ்வளவு  ஆழம் சென்றாலும் நீர் கிடையாது. 

நதிகளில் நீரை தேக்கி வைக்கும்
 மணலை எடுத்து
விற்று  நதிகளில் வண்டல் மண்
இல்லாமல் செய்துவிட்டனர். 
மழை காலத்தில் பெய்யும் நீர்
செல்ல வழிகள் இல்லாமையால் 
எல்லா இடங்களிலும் மழை நீர் 
தேங்கி வீணடிக்கப்படுகிறது. 
கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி
 மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர் 
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். 
நதிகளில் மழை நீர் அப்படியே ஓடி கடலில் வீணாகிவிடுகிறது.

இந்த அவல நிலையை தடுப்பதற்கு
எந்த  அரசுகளும் முயற்சி  செய்யாமல்
மற்ற மாநிலங்களோடு மோதல் போக்கை கடைபிடித்தும் 
நீதிமன்றம் சென்று காலத்தை கடத்தியும்
அரசு பணத்தை பாழடித்து கொண்டு வருகின்றன

நாம் மீண்டும் மன்னர்கள் காலத்தில்
கடைபிடிக்கப்பட்ட
நீர் மேலாண்மைக்கு திரும்பினால்  
இந்த பிரச்சினையே  நமக்கு இருக்காது 
நாம் பிறர் கையை எதிர்பார்க்க
வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை
ஆனால் அதை யார் செய்வது?

முற்காலத்து மன்னராட்சி
மீண்டும் மலர்ந்தால்தான் 
இதுபோன்ற நல்ல  காரியங்கள் நடக்கும் 
(இன்னும் வரும்)

அந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -17)


அந்த  நாள்  நினைவிலே வந்ததே (பகுதி -17)

அந்த காலத்தில் மக்கள் இயற்கையான பொருட்களையே 
பயன்படுத்தினார்கள் அது மண்ணோடு மண்ணாகி
மக்கி உரமாகிவிடும். மக்களுக்கு பாரமாக இருக்காது .

இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள்
 உலகம் உள்ளவரை சிரஞ்சீவியாக வாழும் 
என்பது அனைவரும் அறிந்ததே 
ஆனால் அறிந்தும் தவறு செய்வதுதான் 
இந்த கால  பாஷன் 

இன்று எங்கே பார்த்தாலும் குப்பைகள் 
எங்கே திரும்பினாலும் துர்நாற்றம் 
காரணம் அனைவருக்கும் தெரியும்

அதுதான் பார்க்கின்ற இடமெல்லாம் நிற்கின்ற இடமெல்லாம் 
இயற்கையோடு இயந்து இயற்கை உபாதைகளை கழிப்பது
ஒரு இடத்தையும் விடுவதில்லை அவர்கள் 
அதுவும் கோயில்,பள்ளிகள்,மற்றும் சுற்று சுவர்கள் இருந்தால் போதும். 
அதன் அருகில் யாரும் செல்ல முடியாது.
அரசு கட்டி கொடுத்த கழிப்பிடங்கள் உள்ளே நுழைய முடியாத 
அளவிற்கு வழிஎங்கும் அசுத்தம் செய்வது அவர்களின் கேளிக்கை
குளக்கரை, ஏரிக்கரை, நதிக்கரை,ஏன் கடற்கரை, என்று அனைத்து இடங்களிலும் 
ஆடு மாடுகள் போல் கழிவது மக்களுக்கு கை வந்த கலை. 

எப்போது பார்த்தாலும் ஈ கொசுக்கள் தொல்லை 
முன்பெல்லாம் இரவில்தான் கொசுக்கள் கடிக்கும் 
பகலில் இருக்காது. ஆனால் இப்போது 
அதற்க்கு நேரம் காலமே கிடையாது 
அது காலையிலும் கடிக்கும்,பகலிலும் கடிக்கும் ,
இரவிலும் கடிக்கும், தூங்கும்போது கடிக்கும்,
ஏன் நாம் நன்றாக  விழித்து கொண்டிருக்கும்போதே கடிக்கும்.
டெங்கு  கொசு கடித்தால் ஆளையே கொன்றுவிடும்.
அனைவருக்கும் தெரியும்

.இருந்தாலும் கொசு உற்பத்தியில் நம் நாடுதன்னிறைவு 
அடைவதில்  நாம் மும்முரமாக இருக்கிறோமே தவிர 
அதை தோன்றாமல் தடுப்பதில்
அக்கறை காட்டுவதில்லை  
இன்று அது மனிதர்களை விட அதி புத்தி சாலியாகிவிட்டது .
மனிதன் அதை ஒழிக்க,கிரீம்களை பயன்படுத்தினால் 
அவன் தூங்கும்வரை பொறுமையாய் இருந்துவிட்டு 
அவன் தூங்கியவுடன் அவனை கடித்து குதறிவிடுகிறது. 

கொசுவிரட்டிகள் எதற்கும் அது பயப்படுவதே கிடையாது. 
அது சாவதற்கும் அஞ்சுவது கிடையாது. எப்படியாவது 
உயிர் போவதற்கு முன்  ஒரு தீவிரவாதிபோல்  
பல மனிதர்களை கடித்து நோய் கிருமிகளை 
அவன் உடம்பில் செலுத்தி,அவன் ரத்தத்தை உறிஞ்சி  
லட்சக்கணக்கில் முட்டையிட வேண்டும் என்ற 
அதன்குறிக்கோளை அது கட்டாயமாக நிறைவேற்றிவிடும் 
அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது 

இந்த கொசுக்களை வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள்  பல பெயர்களில் 
விஷங்களை காற்றில் பரப்பும் கொசு விரட்டிகளை தயாரித்து கவர்ச்சிகரமாக
விளம்பரம் செய்து காற்றில் பரப்பி நம்மை  நிரந்தர நோயாளிகளாக்கி கொழுத்து வருகின்றன. 

அந்த காலத்தில் மழைகாலங்களில் ஒருவிதமான கொசுக்கள் வரும்
 மாமரம், புளியமரம் பூக்கும் காலத்தில்சின்னஞ்  சிறிய கொசுக்கள் 
வந்து தொல்லை கொடுக்கும் அவ்வளவுதான்.
அந்த காலத்தில் தண்ணீர் தேங்குவது கிடையாது 
எனவே அவ்வளவாக கொசுக்கள் உற்பத்தியாவதில்லை . 

இன்றோ  நாம் நன்றாக போர்த்திக்கொண்டு படுத்தாலும் 
நம் மூக்கின் மேல் வந்தமர்ந்து கடித்து நம் தூக்கத்தை 
குலைக்கின்றன கொசுக்கள் கூட்டம் 

எல்லாவற்றிற்கும்  காரணம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள
கழிவறைகளிருந்து வெளியேறும் கழிவு நீர் தொட்டிகளிளிருந்து 
உற்பத்தியாகும் கொசுக்கள்தான்.
அதற்க்கு ஒரு வலை கட்டிவிட்டால் கொசுக்கள் உள்ளேயே செத்து  போகும். 

ஆனால் பாவம் நம் மக்கள் ஒரே வேளை கஞ்சிக்கே கஷ்டபடுகிறார்கள். 
அவர்கள் எங்கே காசுக்கு போவார்கள்? 
மருத்துவர்களுக்கு வேண்டுமென்றாலும்  ஆயிரக்கணக்கில் அழுவார்கள்
இந்த சின்ன கொசு தடுக்கும் முறைக்கு ஒத்துழைக்கமாட்டார்கள்.
ஒத்து வேண்டுமானாலும் ஓதுவார்கள்  . 

சாக்கடைகளில் குப்பைகளை கொட்டி அதில் சாக்கடை நீர் தேங்கி
கொசுக்கள் உறபத்தியாவதற்கு  நாம்தான் காரணம். 

ஆனால் எதை பற்றியும் நம் மக்களுக்கு கவலையில்லை.
 மக்காத குப்பைகளையும் வேண்டாத அனைத்து பொருட்களையும் 
வசதியாக கழிவு  நீருடன் சாக்கடையில் சேர்த்து 
கொட்டி மகிழ்வது நம் அடிப்படை உரிமை.

அதை யாராவது கேள்வி கேட்டால் உம் வேலையை பார்த்துகொண்டு போ 
என்று சொல்வதும் அவர்கள் அடிப்படை சுதந்திரம்.
 நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பார்கள்.
யார் இவர்களை திருத்துவது? யாராலேயும் முடியாது. (இன்னும் வரும்)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16)

இன்று சுற்று சூழலை பற்றி பேசுவதற்கு பல இயக்கங்கள் 
இருக்கின்றன. அதற்காக பெருமளவில் விளம்பரம்
செய்வதற்கும், வெட்டி பேச்சு பேசுவதற்கும் 
கோடிக்கணக்கான ரூபாய்கள்.சிலவிடப்படுகின்றன 

வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டில் மரம் 
வளர்ப்பதற்காக  கோடிகணக்கான ரூபாய்கள்
உதவியாக பெறப்பட்டு ஏரிகளில் முள்ளுமரங்களையும்
நீலகிரி தைல மரங்களையும் 
நட்டு சாதனை படைத்தன நம் அரசுகள். 

ஏரியில் உள்ள தண்ணீர் நாசமாய் போயிற்று
நிலத்தடி நீர் கெட்டு   போயிற்று. 
இன்று ஏரிகளே போய்விட்டது
நிலத்தடி நீர் வற்றி போனதால்
குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது 
சம்பாதிக்கும் வருவாயில் பெரும்பகுதி 
தண்ணீருக்காக செலவிடும் அவலத்தை
நாம் அடைந்துவிட்டோம்  

மரங்கள் நடுவதற்கு ஒடுக்கப்பட்ட நிதி
பெரும்பகுதி நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், 
அதிகாரிகள் ,என பலபேர் பைக்கு  பணம் போய் சேர்ந்துவிட்டது 
நட்ட செடிகளில் பாதி செத்து விட்டது.பிழைத்த  மீதி 
மரங்களையும் காணோம். அதை யாரோ விறகுக்காக வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்
மரங்கள் குறைந்துவிட்டதால் மழையையும் காணோம். 

ஆனால் அந்த காலத்தில் நடப்பட்ட ஏராளமான 
மரங்கள் சமீப காலம் வரை சாலைகளில்
நிழல் தந்துகொண்டிருந்தன. 
அதில் நல்ல வருவாயும் கிடைத்து வந்தது.

சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று அனைத்து 
மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு  விட்டன. 
ஒரு பக்கம் மரம் நடுகிறோம் என்று ஒரு கூட்டம் முயல்கிறது.
மறு பக்கம் வளர்ச்சி பணிகளை செய்கிறோம் என்று 
அரசே அனைத்து மரங்களையும் வெட்டி சாய்க்கிறது. 

இத்தனைக்கும் பச்சை மரங்களை வெட்டக்கூடாது
என்று சட்டமே உள்ளது. 
பச்சை மரங்களை வெட்ட உரிய அதிகாரிகளின்
அனுமதி பெறப்படவேண்டும் என்ற விதி வேறு
ஆனால் சட்டத்தை மீறுவதுதான் தமிழனின் அடிப்படை 
பண்பாடாகிபோய்விட்ட நிலையில் 
இவையெல்லாம் ஏட்டு சுரக்காயாகயாகத்தான் உள்ளது  

ஆனால் காகங்கள் தான் வேப்ப பழத்தை தின்று
அதன் விதைகளை தன் எச்சத்துடன் உட்காரும் இடம்தோறும் 
இட்டு அவைகள் கணக்கின்றி மரம் நாடு விழாக்கள் பணியை செலவில்லாமல் செய்து வருகின்றன .
அந்த செடிகளை எடுத்து சாலை ஓரங்களில் நட்டாலே  போதும் லட்சக்கணக்கான மரங்கள் நமக்கு  செலவில்லாமல் கிடைக்கும். 

அந்த காலத்தில் ஊருக்கு  ஒரு ஆல  மரம் கண்டிப்பாக இருக்கும் 
 ஊர் விவகாரங்கள் அனைத்தும் அதன் அடியில்தான் நடக்கும்

குளக்கரையில் அரச மரம் இருக்கும். 
கோயில்களில் தல விருஷங்கள் இருக்கும். 

ஏரிக்கரை ஓரங்களில்நிறைய வேர்பிடிப்புள்ள  மரங்கள் இருக்கும்.
ஏரிக்கரைகள் மழை நீரால் அரிக்கப்படாமல் அவைகள் பாதுகாக்கும்.

ஆற்றங்கரை, கால்வாய் ஓரங்களில் தென்னை மரங்களும்,
நீர்  குறைவான இடங்களில்பனை மரங்களும், , மாமரங்களும்,புளிய மரங்களும்,  இன்னும் பல்வேறு பயன் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டு  .
மக்களுக்கு பயன்பட்டு வந்தன.

இலுப்பை மரங்கள்  ஆமணக்கு செடிகள் வளர்க்கப்பட்டு அவைகளின் 
விதையிலிருந்து எண்ணை  எடுத்து கோயில்களில்,வீட்டில் விளக்கெரிக்க பயன்படுத்தினர்

இன்றைய தலைமுறையினருக்கு வேலிகாத்தான் முள்ளு  மரம்தான் தெரியும்
மற்ற மரங்கள் என்னவென்றே யாருக்கும் தெரியாது(இன்னும் வரும்)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)


அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)

 நம்முடைய முன்னோர்களின் 
அறிவும் ,பெருந்தன்மையும் 
பொதுநல நோக்கும் ,
நாம் என்றென்றும்  நினைவில்
வைத்து போற்றத்தக்கவை .
வாழ்வில் நடைமுறையில் 
கொண்டுவரத் தக்கவை 

நம் முன்னோர்கள் நாம் நன்றாக  
வாழ அமைத்து கொடுத்த 
வசதிகள் அனைத்தையும் 
அந்நிய படையெடுப்பால் நம் நாட்டை 
சூறையாடிய தீயவர்களால்
பெரும்பகுதியை இழந்துவிட்டோம்.
பெரும்பகுதி தரை மட்டமாக
அழிக்கப்பட்டன.
விலை மதிப்பற்ற சொத்துக்கள்
மற்றும் கலை பொக்கிஷங்கள்
கொள்ளையடிக்கப்பட்டன

மக்கள் அவரவர் வாழ்விடங்களை 
விட்டு விரட்டப்பட்டனர்,அல்லது கொல்லப்பட்டனர். 
நமது பண்பாட்டுக்  கருவூலங்கள்
சின்னாபின்னாமாக்கப்பட்டன

இயற்கையோடு இயற்கையாக இயைந்து 
இசைபட வாழ்ந்து வந்த நம்  மக்கள்
தங்கள் எண்ணத்திற்கு மாறாக
கலாசாரத்திற்கு மாறாக ,செயற்கையான 
வாழ்வு வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம். 

நாம் நம்முடைய அடையாளங்களை
இழந்து  விட்டமையால் நம் மீது திணிக்கப்பட்ட
போலி அடையாளங்களை நம்முடைய 
அடையாளங்களாக நினைத்துக்கொண்டு 
இன்றைய தலைமுறை வாழ்ந்துகொண்டிருக்கிறது 
வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்வதை விட 
வழுக்கி விழுந்துகொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். 

ஆனால் இன்று நம்மோடு வாழ்பவர்களில் 
சிலர் வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கலாம்  
ஆனால் பெரும்பகுதி மக்கள் பலவிதமான துன்பங்களை 
அனுபவித்து கொண்டு வருகிறார்கள்  என்பதுதான் உண்மை 

பலர் தங்கள் கலாசாரத்தை பற்றிய அடிப்படை 
அறிவு கூட இல்லாமலிருப்பது 
வருந்துதற்க்குரியது 

நாட்டில் நமக்கு ஒவ்வாத கலாச்சாரங்கள்
நாகரீகம் என்ற ,போர்வையில், மத சார்பின்மை என்ற 
போர்வையில் அரசியல்வாதிகளாலும் ,மத கோட்பாடுகள் 
என்ற போர்வையில் மத வெறியர்களாலும் 
மக்கள் மீது திணிக்கப்பட்டு ,அதனால் ஏற்படும் 
மோதல்கள் மூலம் நாட்டை துண்டாடிகொண்டிருக்கிறார்கள் .

இன்று நாட்டில் எந்த பிரிவினரும்
அமைதியாக வாழ முடிய வில்லை
எவர் மூலம் , எந்த வதந்தி மூலம் எந்த பிரச்சினை 
எந்த நேரத்தில் வெடிக்கும் என்ற சூழ்நிலையில் 
மக்கள் ஒரு பக்கம் அச்சத்துடனும் ,பாதுகாப்பற்ற 
உணர்வுடனும் மன நோயாளிகளாக வலம் வருகின்றனர்.

உணர்ச்சிகளுக்கும் ,கவர்ச்சிகளுக்கும்  எளிதில்
மக்கள் அடிமையாகி தங்கள் சிந்திக்கும் திறனை 
இழந்த நிலையில் வன்முறையில் ஈடுபடுகின்றனர். .

ஆனால் அக்காலத்தில் இது போன்ற 
மோசமான நிலைமை இல்லை.
 (இன்னும் வரும்)  

வானமே கூரையாக வாழும் மக்களே


வானமே கூரையாக வாழும் மக்களேவானமே கூரையாக வாழ்கின்ற மக்களே
உங்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதம் யார் ?
ஐந்தாண்டுக்கொரு முறை ஆட்சிகள் மாறும் ;
அமையும் அரசில் சில ஆட்கள் மாறுவார்கள்
அரசுகள் என்றும் உங்களைப்பற்றி
அக்கறைப்படபோவதில்லை ;

உங்களுக்கு வாக்குரிமை இல்லாமையால்
கவலைப்படவும் போவதில்லை

உங்களைப்பற்றி எந்நாளும்
உங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்
சமூகமும் உங்களை பற்றி கவலைப்படபோவதில்லை

நான்கு சுவர்களுக்குள் வாழும் மக்களுக்கே
பாதுகாப்பில்லை ;

உங்களுக்கு எதற்கு  பாதுகாப்பு ?
அது சரி, என்ன இருக்கிறது உங்களிடம்
வைத்து பாதுகாக்க ?

இருக்க வீடு கிடையாது
நடைபாதைகளும் பாழடைந்த கட்டிடங்களும்
மரத்தடிகளும்தான் நீங்கள் வசிக்கும் மாளிகைகள்

உடுக்க நல்ல உடை கிடையாது
குளிக்க ,குடிக்க சுத்தமான நீர் கிடையாது
உண்ண நல்ல உணவு கிடையாது
நோய் வந்தால் மருத்துவ உதவி கிடையாது
கல்வி அறிவு கிடையாது

எல்லாம் இருந்தும் மகிழ்ச்சியற்று வாழும்
மக்களிடையே நீங்கள் எதுவுமே இல்லாமல்
எப்படி மகிழ்ச்சியோடு வாழ்கிறீர்கள் ?
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
கேட்டுக்கொள்ளுகிறோம்

உங்கள் கூட்டத்தில் நல்லவர்களும் உண்டு
நய வஞ்சகர்களும் உண்டு
நாணயமானவர்களும் உண்டு
நச்சு பேய்களும் உண்டு ;

வாழ்ந்து கெட்டவர்களும் உண்டு
வாழ துடிப்பவர்களும் உண்டு

வயதானவர்களும் உண்டு
பக்தர் போல் வேடமிட்டு
 பிச்சை எடுப்போரும் உண்டு
எத்தர்களும் உண்டு ,பித்தர்களும் உண்டு

என்றாலும் நீங்கள் இந்திய குடிமக்கள்
ஒட்டுரிமையில்லாத எங்கும் ஓடவும் முடியாத
சமூக விரோதிகளின் கைப்பாவையாக
சுரண்டப்படும் சமூகம்

இந்நாட்டில் கோடீஸ்வரர்கள் குடித்து கும்மாளமிட
நீங்களோ கால் வயிற்று கூழுக்கு வழியின்றி
பசியினால் தள்ளாடி வாழ்நாளை தள்ளிவிட

வாழ்க சுதந்திரம் .
வாழ்க இந்திய நாடு .

உங்கள் கூட்டம் நாள்தோறும் பெருகிவருவது
காலத்தின் கட்டாயம்
Posted by Picasa