வெள்ளி, 23 நவம்பர், 2012

தமிழும் தமிழ்புலவர்களும்


தமிழும் தமிழ்புலவர்களும் 

சுந்தர கவிராயர்

மரமது மரத்திலேறி.....                இந்தப் பாடல் தனிப்பாடல் திரட்டில் காணப்படுவது.
                இதை இயற்றியவர் சுந்தர கவிராயர் என்பவர். 
  இந்தப் பாடலில் பதினோரு இடங்களில்'மரம்' என்னும் சொல் வரும்.

 ஒவ்வொரு ;மரம்' என்னும் சொல்லும் ஒவ்வொரு வகையான மரத்தைக்   குறிக்கும். அரசமரம், மாமரம், வேலமரம், வேங்கை மரம் என்றவாறு குறிக்கும்.  அழகிய பாடல். 
                இதை அந்தக் காலங்களில் விடுகவியாகச் சொல்வது வழக்கம்.

                  மரமது மரத்தி லேறி மரமதைத் தோளில் வைத்து
                  மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
                  மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
                  மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெ டுத்தார் 


     
                  இதன் பொருள்:

                  மரமது - அரசமரம் -அரசன்
                  மரத்திலேறி - மாமரம் - மா -குதிரையையும் குறிக்கும்-குதிரையிலேறி
                  மரமதைத்தோளில்வைத்து - வேலமரம்-வேல்;வேலைத் தோளில் தாங்கி
                  மரமது -அரசன்
                  மரத்தைக் கண்டு - வேங்கைமரம் - வேங்கை=புலி; புலியைக் கண்டு
                  மரத்தினால் மரத்தைக்குத்தி - வேலினால் வேங்கையைக்குத்தி
                  மரமது வழியே சென்று -அரசன் வந்த வழியே திரும்பிச சென்று
                  வளமனைக்கு ஏகும்போது - அரண்மனைக்குச்செல்லும்போது
                  மரமது கண்ட மாதர் - அரசனைக் கண்ட மாதர்
                  மரமுடன் - ஆலமரம் - ஆல்
                  மரம் - அத்தி
                  மரமுடன் மரம்=ஆல்+அத்தி=ஆலத்தி
                  எடுத்தார்.

                  இப்போது பொருளைச் சேர்த்துப் படித்துக்கொள்ளுங்கள்.
                அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான்.  அங்கு அவன் ஒரு வேங்கைப்புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்தவழியே திரும்பி தனது அரண்மனைக்குச்சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் மன்னனைக் கண்ட மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி )எடுத்து வரவேற்றனர்

நன்றி-மூல பதிவு. 
கடாரத் தமிழ்ப் போரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee

2 கருத்துகள்: