புதன், 21 நவம்பர், 2012

ஒரு கழுதை/ /ஒரு முதியவன்/ஒரு சிறுவன்.





ஒரு கழுதை/
/ஒரு முதியவன்/ஒரு சிறுவன்.

ஒரு ஊரில் ஒரு முதியவன் இருந்தான் 
அவனிடம் ஒரு கழுதை இருந்தது
அவனிடம் அவன் பேரன் ஒரு சிறுவன் இருந்தான்

சரி அவர்களுக்கு என்ன ஆயிற்று?
அதற்குள் பயப்படவேண்டாம்
ஒன்றும் ஆகவில்லை. 

அவர்களின் வயிற்ருக்கே சோறு பத்தவில்லை.
நாட்டில் வறுமை. இந்த அழகில் இந்த அழகான 
கழுதையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சரி அதை சந்தைக்கு சென்று ஒரு விலைக்கு 
தள்ளி விட்டு  அதில் வந்த காசை கொண்டு 
வயிற்றை கழுவலாம் என்று முடிவு செய்தார்கள். 

கழுதையை இடுப்பில் வைத்துக்கொண்டா செல்லமுடியும் ?

இரண்டு பேரும் கழுதையை ஓட்டிக்கொண்டு 
சந்தைக்கு நடந்து சென்றனர்

வழியில் சில பொறுக்கிகள் ஒரு குட்டி சுவற்றின் மீது
 உட்கார்ந்துகொண்டு அந்த பையனை பார்த்து 
ஏண்டா முட்டாள் வயதான பெரியவரை நடத்தி கூட்டி கொண்டு செல்கிறாயே,அவரை கழுதை மேல் உட்கார வைத்து கொண்டு  செல்லக்கூடாதா? என்று அவனை உசுப்பினார்கள்.

உடனே அவன் கிழவனை கழுதை மேல் 
உட்காரவைத்து கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்

அடுத்த ஊரில் அதே போல் சில பொறுக்கிகள் 
ஒரு மரத்தடியில் இவர்கள் செல்வதை பார்த்து அவர்களை அழைத்தனர்.
அழைத்தது மட்டுமல்லாமல் கிழவனிடம், ஏய் கிழவா, சிறிய பையன் நடக்கு முடியாமல் நடந்து வருகிறான் ,அவனை நடக்க விட்டு விட்டு நீ வயதில் பெரியவன் ,நீ கழுதை மேல் பவனி வருகிராயோ ? என்று மிரட்டினர்.

உடனே கிழவன் தான் கழுதையிலிருந்து இறங்கி கொண்டு பேரனை கழுதைமேல் உட்கார வைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்.

அடுத்த ஊர் வந்தது. அங்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கொண்டிருந்த 
சில 'இது எப்படி இருக்கு பார்ட்டிகள்'  கழுதை பொதி சுமப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்டது. அதில் பையனை மட்டும் உட்கார வைத்துகொண்டு நீ ஏன் நடந்து வருகிறாய்? நீயும் அதன் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு சவாரி செய்ய வேண்டியதுதானே என்று தூபம் போட்டனர். 

உடனே இருவரும் கழுதைமேல் ஏறி
 உட்கார்ந்துகொண்டு சந்தை நடக்கும் ஊரை நெருங்கினர்.

ஏற்கெனவே கழுதைக்கு பயங்கர பசி .
நடந்து வேறு சோர்ந்து போயிருந்தது கிழவனும் 
அதன் மீது உட்கார்ந்த உடன் சிறிது தூரம் சென்றதும் 
மயங்கி விழுந்தது. விழுந்த அதன் உடலை
 மண்மாதா பெற்றுக்கொண்டாள் .
அதன் உயிரை அதை படைத்தவன்
 பெற்றுக்கொண்டான். 

இருவருக்கும் ஆதாரமாக விளங்கிய 
அந்த கழுதை உயிரை மாய்த்து கொண்டதால் 
அவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் நின்றனர்.

அப்போதும் ஒரு சோம்பேறி கூட்டம் 
அவர்களின் கதையை கேட்டுக்கொண்டு
அனுதாபம் தெரிவித்துவிட்டு அகன்றுவிட்டனர் 
இரங்கல் கூட்டம் நடத்தி விளம்பரம் தேடிவிட்டு 
அடுத்த கூட்டத்திற்கு இரங்கல் வாழ்த்து பாட சென்றுவிடும்
 தற்கால அரசியல் வியாதிகளைப்போல் .

இந்த கதையை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். 
அப்போது இந்த கதையில் உள்ள முக்கியமான ஒரு பொருள் பொதிந்த,வாழ்க்கைக்கு தேவையான கருத்து ஒன்று 
இதில் பொதிந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளும் வயதில்லை 

என் வாழ்க்கையில் வாலிப பருவத்தை அடைந்து 
இந்த உலகை நான் பல பிரச்சினைகளை 
எதிர் கொள்ள ஆரம்பித்த பின் ஒரு நாள் 
இந்த கதை என் நினைவுக்கு வந்தது.

நம்மில் அனைவரும் நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் 
நாம் பிறரின் ஆலோசனைகளையே எதிர்பார்த்துக்கொண்டு,
கடவுள் நமக்கு கொடுக்கப்பட்ட அறிவை பயன்படுத்துவதே கிடையாது. இதனால் நாம் பலவிதமான அவமானங்களுக்கும் 
இழப்புகளுக்கும் ஆளாகிய பின்பும் நாம் பாடம் கற்றுக்கொள்வதில்லை..நம்முடைய இந்த கையாலாகாத்தனத்தை, அறிவீனத்தை, முட்டாள்தனத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும்
கூட்டம் நம்மை சுற்றி வலை விரித்து காத்துக்கொண்டிருக்கிறது.
அவர்கள் விரிக்கும்வலையில் நாம் சுலபமாக விழுந்து 
நம்மை நாம் அழித்து கொள்கிறோம் அல்லது 
அவர்களின் ஆயுள் கைதிகளாக வலம் வருகின்றோம்
 இது தேவையா?

நாம் வழியில் வருவோர் போவோரின் 
ஆலோசனைகளை கேட்டுக்கொண்டு 
அதை ஆராயாமல் அதை செயல்படுத்திக்கொண்டே 
போனோமானால் இப்படித்தான் எல்லாவற்றையும்
இழந்து நடுத்தெருவில் நிற்கவேண்டியிருக்கும் 
என்பதை உணர்ந்தேன். 

அன்றிலிருந்து யார் எதை சொன்னாலும்
எனக்கு எது சரியென்று படுகிறதோ
அதைதான் எத்தனை தடங்கல்கள் வந்தாலும்
 உறுதியாக மேற்க்கொள்ளுவது என்றுமுடிவெடுத்தேன்

வாழ்க்கையின் எண்ணற்ற சோதனைகளை கடந்தேன்
வேதனைகளை தாங்கிக்கொண்டு உறுதியாக நிற்கிறேன் என்பது கலப்படமற்ற உண்மை.  

2 கருத்துகள்:

  1. அனுபவங்கள் பலவற்றை கற்றுக் கொடுக்கும்...

    பதிலளிநீக்கு
  2. அனுபவங்களிலிருந்து பாடம்
    கற்றுக்கொள்வதற்குள் ஆயுளில் பெரும் பகுதி
    கழிந்து விடுகிறது.
    வேண்டுமானால் அடுத்த
    பிறவிக்கு பயன்படலாம்
    மனிதனாக பிறந்தால்

    பதிலளிநீக்கு