செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இன்று ஆசிரியர் தினம்

இன்று ஆசிரியர் தினம் 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் 
என்பது முதுமொழி


கற்காதவன் முகத்தில் இருக்கும் இரு கண்கள் 
இரு புண்கள் போன்றது என்பார்  திருவள்ளுவர் 

மாக்களாக இருக்கும் மனித குலத்தை 
மனிதர்களாக்குவது கல்வி  

அதற்க்கு காரணமாக விளங்கிய மற்றும் விளங்கும் 
ஆசிரியர்களை போற்றுவோம் 

தாயும் தந்தையுமே உலகம் என்றிருந்த குழந்தைகளை
பள்ளிக்கு வந்ததும் நீ விஞ்ஞானியாக,மருத்துவராக 
,சிறந்த மனிதனாக விளங்குவாயாக என்று
ஆசிகள் வழங்கும் ஆசிரியர்களை போற்றுவோம் 

ஆன்மீகத்தில் செல்லும் வழி காட்டி ஆண்டவனை உணர,
அடைய வழி காட்டிய குருமார்களை  போற்றுவோம் 

அன்பு,நேர்மை, உண்மை, பரிவு, பாசம்,நேசம்,வீரம்,கடமை என 
பல உயரிய சிந்தனைகளை குழந்தைகளின் மனதில் ஊட்டி 
அவனை மாமனிதனாக சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக 
உயர்த்திய ஆசிரியர்களை போற்றுவோம் 

ஒரு காலத்தில் எழுத்தறிவிக்கும் ஆசிரியர்கள் 
அதை பணியாக செய்தனர் 

இன்றோ அது ஒரு தொழிலாகிவிட்டது.
பள்ளி நடத்துபவருக்கும்,அதில் பணி  புரியும் 
ஆசிரியர்களுக்கும் பணம் கொட்டும் இயந்திரம் 

முற்காலத்தில் கற்பித்தலை தவிர எந்த பணியையும் 
மேற்கொள்ளாத ஆசிரியர்கள் இன்று கற்பித்தலை
பகுதி நேர தொழிலாக கொண்டு மற்ற வேலைகளில்
கவனம் செலுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர். 

தொலைகாட்சிகளிலும்,ஊடகங்களிலும் அவர்களின் நடத்தைகள் 
அலசப்பட்டு ஒரு சிலர் தவறு செய்வதால் இன்று 
அந்த சமூகமே கேலிக்குரிய பொருளாக சித்தரிக்கபடுகிறது.
ஒருகாலத்தில் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய 
மனிதர்களாக வாழ்ந்து வந்த ஆசிரியர்கள் 
இன்று தங்கள் மதிப்பை இழந்துவிட்டனர்.

அரசுகள் கல்விக்காக கோடிகணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றன. தனியார் நிறுவனங்களும் அதை விட பன்மடங்கு இந்த தொழிலில் முதலீடு செய்கின்றன. கல்வி கற்கும் குழந்தைகள்  ஒரு பக்கம் அதிகரித்தாலும் பள்ளிக்கு செல்லாமல் பாதியிலே பள்ளியை விட்டு விலக நேரிடும் குழந்தைகள் கூட்டமும் பெருகிக்கொண்டே போகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இன்றைய சூழலில் பல ஆசிரியர்கள் குடி போதையில் பள்ளிக்கு வருவது, பள்ளிக்கு வராமல் இருப்பது ,வந்தாலும் பாடங்களை ஒழுங்காக நடத்தாமல் இருப்பது, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருவது, குழந்தைகளை கடுமையாக உடல்,மனம் பாதிக்கும் அளவிற்கு தண்டனை அளிப்பது,மாணவர்களுக்கு அளிக்கும் அரசு உதவிகளை அபகரிப்பது போன்ற குற்ற செயல்களும் அதிகரித்து வருதல்  போன்ற புகார்கள் பரவலாக ஊடகங்களின் தினம் செய்திகளாக   வெளி வருகின்றன. 

மாணவர்களிடம் ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் எதிர்பார்க்கும்,பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாங்கள் முதலில் அதை கடைப்பிடித்து  மாணவர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்கவேண்டும் என்ற உண்மையை வசதியாக இன்றுமறந்து விட்டனர்.

இன்றும் ஒழுக்கமான, அன்பான, பண்பான, நேர்மையான, சுயநலமற்ற ஆசிரிய மணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நல்ல எதிகாலத்தை மாணவர்களுக்கு காட்டி கொடுக்கிறார்கள். அவர்களை மனம் திறந்து பாராட்டுவோம், போற்றுவோம். மற்றவர்களும் அதே போல் நடந்து கொண்டு ஆசிரியர் பணி சிறக்க வேண்டுவோம்.   

1 கருத்து: