அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11)
அந்த காலத்தில் வீடுகளில்
ஒரு கலை நயம் இருக்கும்
எதை செய்தாலும்
அதில் ஒரு வேலைப்பாடு இருக்கும்
வீட்டிற்குள் நுழையும்போதே படிக்கட்டுக்கள் இருக்கும்
அந்த படிக்கட்டுக்களின் இரு புற சுவர்களிலும் ஒரு டிசைன் இருக்கும்
பெரும்பாலும் யானையின் தலையும் தும்பிக்கையும்
இருப்பதுபோல் வடிவமைத்திருப்பார்கள்
பார்க்க அழகாக இருக்கும்
வீட்டில் நுழையும்போதே
இரண்டு பக்கமும் திண்ணைகள் இருக்கும்
இடது புறம் இருக்கும் திண்ணை அகலம் குறைவாகவும்,
வலது புறம் இருக்கும் திண்ணை
அகலமாகவும் விசாலமாகவும் இருக்கும்
திண்ணைகளுக்கு மேலே விளக்குகள் வைப்பதற்கு
இரண்டு முக்கோண வடிவில் அல்லது அழகிய
வேலைப்பாடுகளுடன் கூடிய பரைகள் இருக்கும்
அதில் தினமும் அதிகாலையிலும்,
மாலையிலும் விளக்குகள் ஏற்றுவார்கள். .
அதைத்தவிர இடது பக்கத்தில் கொஞ்சம் பெரிய அளவில் பரை இருக்கும்.
அதில் வாசலை பெருக்கி சுத்தம் செய்தவுடன் கோலம் போட
கோலமாவு கிண்ணம் போன்றவற்றை வைத்திருப்பார்கள்.
திண்ணைகளின் இரண்டு பக்கமும் உட்கார்ந்துகொண்டு
சாய்ந்து படுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கும்
அதைத்தவிர சுவற்றின் ஓரம் படுக்கும் போது
தலையணைக்கு பதிலாக தலை வைத்து படுக்க
நீளமாகமேடை அமைக்கப் பட்டிருக்கும்.
அதில் வசதியாக அமர்ந்து சாய்வு மேடையில் சாய்ந்து கொண்டு
குட்டி தூக்கம் போடலாம். புத்தகம் படிக்கலாம்
,சிறிது ஓய்வெடுக்கலாம்
இடது பக்கம் உள்ள திண்ணையில் வீட்டிற்கு வருபவர்களை
உட்காரசொல்லி அளவளாவலாம்.
தூக்கம் வந்தால் துண்டை விரித்து
திண்ணையில் சுகமாக தூங்கலாம்.
நன்றாக காற்றுவரும்.
காற்று வராவிட்டாலும் உடல் வேர்க்காது.
அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது.
பனைஓலை விசிறிகள்தான்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து விசிறினால்
ஜில்லென்று காற்றுவரும்.
மேலும் பனை ஓலையிலிருந்து
நல்ல வாசனை வேறு வரும்.
கைகளுக்கும் நல்ல உடல்பயிற்சி
வீட்டிற்கு புதியவர்களோ, வழிபோக்கர்களோ வந்தால்
அந்த திண்ணையில் தங்கி இளைப்பாறலாம்.
வீட்டில் விசேஷம் என்றால் பலபேர் அங்கு
உட்கார்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருக்கலாம்.
அந்த காலத்தில் திருமணம் போன்ற நாட்களில்
வீட்டு திண்ணைகளில்தான் விடிய விடிய சீட்டு கச்சேரி நடக்கும்
சீட்டாடுபவர்களை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்
அவர்களை சுற்றி உட்கார்ந்து கொண்டிருக்கும்
நாதசுரம் வாசிப்பவர்கள் அவர்களின்
குழுவுடன் உட்கார்ந்து
இசை மழை பொழிவார்கள்
இப்படியாக பலவிதமாக திண்ணைகள்
அந்த காலத்தில் பயன்பட்டன
வீட்டு வாசலின் முன்புறம் நாட்டு ஓடுகளால்
செய்யப்பட்ட கூரை வேயப்பட்டிருக்கும்
அது மர சட்டங்களின் மேல் சதுர ஓடுகள் பரப்பப்பட்டு
அதன் மேல் ஓடுகள் அழகாக வேயப்பட்டிருக்கும்
செங்கல் நிறத்தில் அது தனி அழகை கொடுக்கும்
வெய்யில் காலத்தில் வெயிலின் தாக்கமே இருக்காது.
மழை காலத்தில் தண்ணீர் அதன்மீது விழுந்து
அழகாக வரிசையாக குழாயிலிருந்து நீர் ஊற்றுவதுபோல்
பார்க்க ரம்யமாக இருக்கும். மழை நின்றவுடன்
நீர் சொட்டு சொட்டாக சொட்டிகொண்டிருக்கும்.
ஓடுகளின் இடையே தேள்கள் குடித்தனம் செய்யும்.
பல ஆண்டுகளுக்கு பிறகு உடைந்த ஓடுகளை மாற்றி,
ஓடுகளிடையே தங்கியுள்ள குப்பைகள் பறவைகளின் எச்சங்கள்
பலவிதமான சிறு பூச்சிகள் , மண் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து
ஓரத்தில் சுண்ணாம்பால் கட்டை கட்டி விட்டால்
வீடு பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கும் (இன்னும் வரும்) . .
.
அற்புதம்!
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குபழைய நினைவுகள் கண் முன்னே தெரிகின்றன...
பதிலளிநீக்குகண் முன்னே கொண்டு வரத்தான்
பதிலளிநீக்குமுயற்சிக்கிறேன். ஏனென்றால்
அவைகளெல்லாம் எதுவும்
இப்போது இல்லை
கனவாகி போய்விட்டது
இருப்பவைகளும் வெறும் காட்சி பொருளாகிவிட்டது
அவைகளில் உயிரோட்டம் இல்லை