வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)

தலை வாசலை தலை குனிந்து 
வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் 
நடை இருக்கும். அங்கும்  
இரண்டு பக்கமும் நீண்ட திண்ணை இருக்கும் 
வழக்கம்போல் இடது பக்கம் இருக்கும் 
திண்ணை அகலம் குறைவாக இருக்கும்.
அதில் ஒரு வாளி நிறைய தண்ணீர் வைத்திருப்பார்கள்.
பக்கத்தில் ஒரு சொம்பும் இருக்கும் 
வீட்டிற்க்குள்  நுழைபவர்கள் தங்கள் பாதங்களை 
சுத்தம் செய்துகொண்ட பின்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும். 

நடைபகுதியும் ஓடுகள் வேயப்பட்ட பகுதியாகும்.
ஆனால் அது உயரமாக இருக்கும். 
உணவு உண்டபின் மதிய வேளையில் வலப்புறம் 
இருக்கும் நீளமான திண்ணையில் படுத்து
ஒரு பகல் தூக்கம் போட்டு எழுந்திருக்கலாம்.

 நடையை ஒட்டி ஒரு பெரிய அறை இருக்கும் 
அதன் மேல்பகுதியில் ஜன்னல்இருக்கும்.
அதற்க்கு மரக்கதவு அமைக்கப்பட்டிருக்கும்
அந்த அறைக்கு வாசல் கூடத்தின் உட்புறம் இருக்கும்.
அந்த அறையில்தான் வைக்கோல் கதிர்கள் அடுக்கிவைக்கப்பட்டு
 நன்றாக வெய்யிலில் காய வைக்கப்பட்ட நெல்மணிகள் 
மேல் வழியாக கொட்டப்பட்டு சேமிக்கப்படும். 
தேவைப்படும்போது நெல்மணிகளை வெளியே எடுத்து 
அரவை இயந்திரங்களுக்கு கொண்டு சென்று அரிசியாக்கி 
 உபயோகப்படுத்துவார்கள்.
தவிடு மாடுகளுக்கு உணவாகும் 
உமியை நெருப்பிலிட்டு கருக்கி,கற்பூரம் போன்றவற்றை 
சேர்த்து பல் துலக்க பயன்படுத்துவார்கள் 

அந்த காலத்தில் வெளியில் வேலைக்கு 
செல்பவர்கள் கிராமங்களில் இல்லை 
எனவே வீட்டு  செலவிற்கு அவ்வப்போது 
நெல்லை விற்று காசாக்கி
அதைக்கொண்டு  வீட்டிற்கு தேவையான
மளிகை சாமான்களை வாங்குவது உண்டு.

அந்த காலத்தில் நான்குவிதமான நெற்பயிர்கள்தான் பயிரிடப்படும்
கிச்சிலி சம்பா,வயக்கொண்டா ,சிறுமணி  கார்
 சம்பா அரிசியை விசேஷங்களுக்கும் மட்டும் பயன்படுத்துவார்கள். 
காரரிசியைதான் தினசரி உணவிற்கு பயன்படுத்துவார்கள் 
சிவப்பாக இருக்கும். இனிப்பாக இருக்கும். 

நடையை தாண்டி உள்ளே சென்றால் பெரிய கூடம் இருக்கும்
அது நான்கு புறமும் தூக்கி உயரமாக கட்டப்பட்டு 
தளம் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பக்கமும் ஜன்னல்கள் இருக்கும்.
நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும்.
தரை நன்றாக காவி கலர் பார்டர் கட்டி மழ  மழவென்று போடப்பட்டிருக்கும்.
வீட்டில் நடக்கும் விசேஷங்கள் எல்லாம் கூடத்தில்தான் நடக்கும்.
கூடம் பெரியதாக இருந்ததால் கல்யாண கூடம் என்று அழைக்கப்பட்டது யாரும் சத்திரம் என்று எங்கும் செல்வதில்லை. 

கூடத்தில் மேலே ஜன்னல் ஓரமாக 
ஒரு ஓரத்தில் குருவிகள் கூடு கட்டி வாழும்.
ஆனந்தமாக க்ரீச் அன்று கூவி கொண்டு 
அவைகள் பறந்து திரிவது
பார்க்க இன்பமாக இருக்கும். 


அதன் பக்கத்திலேயே அதை ஒட்டி உயரம் குறைந்த அளவில்
 மற்றொரு கூடம் இருக்கும். அதில் அலமாரிகள் இருக்கும் .அலமாரிகள் கூட 
 கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். 
கூடத்திற்கு நேராக  பின் கட்டு ஒன்று இருக்கும். 
அதில் திறந்தவெளி தாழ்வாரம் இருக்கும். 
 அதைத்தாண்டி புழக்கடைக்கு செல்லும் வழி இருக்கும்.  

வீட்டின் பின்புறம் தோட்டம் இருக்கும். 
வாழைமரம், பழ செடிகள், காய்கறி தோட்டங்கள் எல்லாம் இருக்கும்.
வீட்டிற்கு தேவையான் அனைத்து காய்கறிகளும் வீட்டிலேயே பயிரிடுவார்கள். 
விஷேஷங்களுக்கு மட்டும்தாம் வெளியில் சந்தையிலிருந்து காய்கறிகளை வாங்குவார்கள். 

கூடத்திலிருந்து வலது பக்கம் போனால் சமையல்கட்டு வரும். 
அதற்கிடையில் ஒரு நடை இருக்கும். 
அங்குதான் ஆண்டு முழுவதற்கும் தேவையான 
அனைத்துஉணவுபொருட்களும் சேமித்து வைக்கப்படும். 

அதைதாண்டி உள்ளே சென்றால் ஒரு மூலையில் கிணறு இருக்கும்
கிணற்றுக்கு ஒரு பக்கம் சமைலறை மறுபக்கம் குளியலறை  இருக்கும் 
கிணற்றில் ராட்டினம் பொருத்தப்பட்டிருக்கும் 
தேங்காய் நாரினால் செய்யப்பட்ட  கயிறால் தண்ணீர் சேந்தி எடுத்து கொள்ளலாம். 
தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் குடம் குடமாக 
 ஊற்றிக்கொண்டு குளிப்பதே ஒரு தனி சுகம் 
குளிர்காலத்தில் கிணற்றுநீர் கதகதப்பாக இருக்கும். 
கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும். 

சில கிணற்று நீர் உப்பு கரிக்கும்
சில கிணற்று நீர் சுவையாக இருக்கும். 
அந்த காலத்தில் தெரு குழாய்கள் கிடையாது.
இது போன்ற நல்ல  குடிநீர் கிடைக்கும் கிணற்றிலிருந்து 
பெண்கள் இடுப்பின் குடங்களை சுமந்துகொண்டு 
குடிப்பதற்கு குடிநீர் எடுத்து செல்வார்கள்.அதுதான் பெண்களுக்கு 
ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடம்  

தரையில் மண் அடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். 
விறகுகளை உபயோகித்துதான் சமையல்  
அடுப்பு பக்கத்திலேயே சாதம் வடிக்க ஒரு கட்டை பொருத்தப்பட்டிருக்கும் 
சாதம் வெந்த உடனேயே அதை துளைகள் உள்ள மூடியால் மூடி 
 வடிகட்டியின் மீது வைத்து விட்டால் சிறிது  நேரத்தில் 
கஞ்சி முழுவதும் வடிந்துவிடும்
சாதம் மல்லிபூ போல் உதிர் உதிராக இருக்கும். 
வடிகட்டிய கஞ்சியில் சிறிது மோர்,மற்றும் 
உப்பு சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும். 

அடுப்பு பக்கத்திலேயே நீண்ட மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் அம்மி குழவி பொருத்தப்பட்டிருக்கும்.
 சமையலறையின் ஒரு பகுதியில் மாவு அரைப்பதற்கு உரல் மற்றும் கொழுவியும் இடித்து போடி செய்தல் போன்றவைகளுக்கு இரண்டு பகுதிகளாக உரலும் அமைக்கப்பட்டிருக்கும் கீழ்பகுதி தரையில்
பொருத்தப் பட்டிருக்கும். மேல் பகுதி எடுத்து வைக்கும்படியாக அமைக்கபட்டிருக்கும் .
உரலில்தான் அனைத்து பொருட்களும் இடித்து தூளாக்கப்படும் ,
நெல் குத்தி அரிசியாக்கப்படும். கைகுத்தல் அரிசியில்தான் முழு சத்துக்களும் உள்ளது. 
அதற்க்கு மரத்தால் செய்யப்பட்ட உலக்கை பயன்படுத்தப்படும். 
இவைகளையெல்லாம் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். 
ஒரு பகுதியில் அதன் பக்கத்தில் பாத்திரங்கள்
கழுவ  வசதி இருக்கும் அதிலிருந்து வெளியேறும் நீர் புழக்கடையில் உள்ள செடிகளுக்கு போய் சேரும். 

அதன் பக்கத்தில் குடிநீர் பாத்திரங்களில்நிரப்பி  வைக்கப்பட்டிருக்கும். 

அதன் பக்கத்தில் வித விதமான வருடம் முழுவதும் 
பயன்படுத்தும் வகையில் ஊருகாய் ஜாடிகள் வைக்கப்பட்டிருக்கும்.

 இறைவனின் படங்களை வைத்து வழிபடுவதற்கு மேடை அமைக்கப்பட்டிருக்கும். 
எந்த உணவை உண்பதற்கு முன் அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்த பிறகே உண்ணும் வழக்கம் அந்த காலத்தில் உண்டு.
அதை தவிர கர்ப்பிணிகள்,மற்றும் வயதானவர்கள் நின்று கொண்டு சமையில் செய்ய சிறு மேடை அமைத்து அது குமிட்டி எனப்படும் கரியை பயன்படுத்தும் அமைக்கபட்டிருக்கும். (இன்னும் வரும்)

2 கருத்துகள்:

  1. இந்தக் காலத்தில் உள்ளவற்றை நினைத்து பார்க்கும் போது ...ம்... ...ஸ்... ..ஸ்.. ..ஸ்.. (பெருமூச்சு தான்)

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அந்த காலத்தில் மக்கள் ஒவ்வொன்றையும்
    தெளிவாக சிந்தித்து அமைத்து
    ஆனந்தமாக அமைதியாக மகிழ்ச்சியான
    நிறைவான திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தனர்

    இக்காலத்தில் ஏராளமான வசதிகள் இருந்தும்,
    யாருக்கும் எதிலும் திருப்தியில்லை.
    உள்ளத்திலும் அமைதியில்லை.
    நாம் வாழும் உலகத்திலும் அமைதியில்லை.

    பதிலளிநீக்கு