ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

முதியோர் தினம்



முதியோர் தினம்

முதியோர் தினம்
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்
முதல் நாள் முதியோர் தினம்
காதலர் தினம் கொண்டாடும்
காளையர் கன்னியர் தங்கள்
எதிர் காலத்தை நினைத்து 
முதியோர் தினமும் கொண்டாடுங்கள்

முதியோரை மதியாதார்
வாழ்ந்தும் வாழாதார்

நீங்கள் நன்றாக வாழ 
வாழ்த்து பெறுங்கள் அவர்களிடம்

அவர்களோடு அன்பாய் பேசுங்கள் 
ஆதரவாய் உதவிகள் செய்யுங்கள் ;

முதிய வயதிலும் ஆட்டம் போடும் சில இளசுகள்
பழைய நினைவுகளை மட்டும் அசை போடும் சில பெரிசுகள் ;

சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைகளை போல சிலர்
சில முதியோர்கள் கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்டுகள் ;
அவர்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்

கிராமபோன் ரெகார்டுகள் தனக்குதானே
கீறல் போட்டு கொள்வதில்லை
அதை பயன்படுத்தியவரின் 
கவனக்குறைவுதான் மனதில் கொள்ளுங்கள்

முதிய வயதிலும் முயற்சி செய்து 
வெற்றி படிகளில் ஏறி மகிழ்ந்தோரும் உண்டு ;

அயற்சியினால் அல்லல்பட்டு 
தளர்ச்சி அடைந்தோரும் உண்டு
இளமையில் நெறி கெட்டு  அலைந்தவன்
தறி கெட்ட வாழ்க்கை வாழ்ந்து
முதுமையில் துன்பத்தில் சாகிறான்
;

இளமையில் தப்பாட்டம் போட்டவன்
முதுமையில் தள்ளாட்டம்தான் போடவேண்டும் ;

ஒழுக்கத்தோடு வாழ்ந்தவன் 
முதுமையில் புழுக்கமில்லாமல் இருக்கிறான் ;

முதுமையிலும் மன முதிர்ச்சி அடையாதவன்
அதிர்ச்சிகளைத்தான் பரிசாக பெறுகிறான்

கால்கள் இருந்தும் நடக்காதவன் 
முதுமையில் நடைபிணமாகிறான்

உலகத்தை அன்போடு நேசிக்க தெரிந்தவன்
யாரிடமும் எதற்கும் யாசிக்க நேர்வதில்லை

பொறுமையை கடைப்பிடிக்கும் முதியோர்கள்
போற்றப்படும் காலம் வந்தே தீரும்

முதிய வயதில் குறைவாக உண்பது
 நோயில்லா வாழ்வை தரும் ;

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது
நாம் துன்புறாமல் இருக்கும் வழி

அகந்தை உள்ள முதியோர்கள் அனைவராலும்
கந்தை துணிபோல் ஒதுக்கபடுவார்கள்

பண்பாடுகளை காக்கும் முதியோர்களின்
 மனம் புண்படாது காப்பது நம் கடமை

அவர்கள் மண்ணில் மறையும்வரை
 நம் கண்போல் வைத்து காப்பாற்ற வேண்டும் ;

முதியோர்கள் அனுபவங்கள் 
நம் நாட்டிற்கு என்றும் தேவை

அவர்களுக்கு செய்யும் சேவை 
என்றும் வளப்படுத்தும் நம் வாழ்வை

அவர்களின் கடந்த கால நிகழ்வுகள்
 நிகழ் கால வாழ்விற்கு பாடங்கள்

அதை உணரா உள்ளங்கள் ஒரு நாள்
 செல்லத்தான் வேண்டும் முதியோர் இல்லங்கள் .;

பெற்றோர்களிடம் நன்றி மறந்தவர்கள் 
பன்றியை விட கீழானவர்கள் 

இளமையில் இந்த உடலை 
முறைப்படி பராமரிக்காதவன்
முதுமையில் காணாமல் போவான் ;

இறைவன் கொடுத்த இந்த
உடலில் இஷ்டப்படி வாழ்ந்தவன்
முதுமையில் கஷ்டப்பட்டுதான் போவான் ;

உடலும் உள்ளமும்
உறுதியாக இருந்தால்தான்
கடலும் வானமும் போல் 
இறுதிவரை மகிழ்ச்சியாக வாழலாம் ;

முதுமையிலும் தொடர்ந்து 
அறிவை வளர்த்து கொள்பவனும்
அயராது உழைப்பவனும் 
என்றும் சோர்வடைவதில்லை

ஒழுக்கமிலா பெற்றோரின் பிள்ளைகள்
முதுமையில் சோகத்தைதான் பரிசாக தருவார்கள் ;

தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக
தன் நிகழ்காலத்தை தொலைத்த முதியோர்களே
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு
 படிப்போடு பண்பையும் ஊட்டி இருந்தால் பிழைத்தீர்கள்

ஏனென்றால் பண்பில்லா வாழ்வு
முட்கள் நிறைந்த காடு
அதில் தீய விலங்குகளும்
 தீயவர்களும்தான் இருப்பார்கள் .

இவையெல்லாம் இரு தரத்தாரும்
மனதில் கொள்வீர்
ஒருவரை ஒருவர் மதித்து
இன்றும் என்றும் இன்பமாய் வாழ்ந்திடுவீர் .

1 கருத்து:

  1. முதியோர் நிலை விளக்கும் அருமையான பதிவு!
    என்னுடைய :வேர்களை மறவா விழுதுகள்"
    http://www.esseshadri.blogspot.in/2012/04/blog-post_12.html மற்றும் "வரம் வாங்கி வந்தால்தான்"
    http://www.esseshadri.blogspot.in/2012/09/blog-post.html முடிந்தால் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்! நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு