செவ்வாய், 1 அக்டோபர், 2013

காந்தி பிறந்த நாள்.

காந்தி பிறந்த நாள்.(2.10.2013)

 காந்தி பிறந்த நாள்.

வழக்கமான சடங்கு
படத்திற்கு பூமாலை
சாராயக்கடைகளுக்கு விடுமுறை
மாலை 5 மணி வரை.

வெள்ளை ஆடை வெளியே
லஞ்சம், வஞ்சம் நிறைந்த
உள்ளம்  உள்ளே.

என்னை பற்றி படம் எடுத்தார்கள்
அதில் நடித்தவர் ஒரு அன்னியர்.

அதில் என்னைப் போல் நடிக்கக் கூட
 நம் நாட்டு மக்களில் ஒருவர்கூட இல்லை

அந்த அளவிற்கு என்னை மறந்துவிட்ட
உங்களுக்காக என் வாழ்நாளை
வீணாக்கியதர்க்காக வெட்கப்படுகிறேன்.

காந்தி பிறந்த மண்
இன்று கள்ளும்  சாராயமும்
ஆறாய்  ஓடும் சாக்கடையாகிவிட்டது

சத்தியமே என் வாழ்வின்
உயிர்  மூச்சாய்  கொண்டு
வாழ்ந்தேன்

இன்று அசத்தியமே
ஆட்சி செய்கிறது.

ராம ராஜ்ஜியம் அமைக்க
நான் கனவு கண்டேன்
இன்றோ ராவணன்கள்தான்
நம் நாடெங்கும்
சுற்றி திரிகிறார்கள்.

நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற
காதி இயக்கத்தை தொடங்கினேன்
இன்றோ அவர்கள் கதியோ
கவலைக்கிடமாகிவிட்டதே !

பொது பணத்தை
கொள்ளையடிக்கின்றார்
கணக்கு கேட்டால் காந்தி கணக்கு
என்று கிண்டல் செய்கின்றார்.  .

அதிகார வர்க்கத்தை பணியச் செய்ய
உண்ணா நோன்பு மேற்கொண்டேன்.

இன்றோ வயிறு புடைக்க உண்டுவிட்டு
உண்ணா நோன்பு என்று
கேலிக்கூத்தாக்குகிறார்

வறியவருக்கு வாழ்வில்
வளம் இல்லை

வன்முறையில் ஈடுபடுவோர்
வளமாக வாழ்கின்றார்

சுதேசி தொழில்களை
அழித்தொழிக்கின்றார்

அந்நிய தொழில்களுக்கு
அடைக்கலம்  தருகின்றார்.

வெள்ளையர்களிடமிருந்து பெற்ற விடுதலை
இன்று தறுதலைகளின் கைக்கு போய்விட்டது.

ஆண்டுதோறும் என் பிறந்தநாள் கொண்டாடும்
தலைவர்களே ,என் கொள்கைகளை மட்டும்
செயல்படுத்த மறுப்பதேனோ? 

1 கருத்து: