வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

மண்ணிலிருந்து வந்த நாம் ...

மண்ணிலிருந்து வந்த நாம் ...


மண்ணிலிருந்து வந்த நாம்
நம்மை முளைக்க வைத்த
மன்னவனை அறியாது போனால்
மீண்டும் மண்ணுக்குள்தான் போகவேண்டும்.

எம்மதமும் சம்மதம் என்று மேடையிலே
முழங்குவது இவ்வுலக வழக்கு.

ஆனால் பாடையிலே போகும்வரை
தன் மதமே உயர்ந்ததென்று தன்
பாதையில் வருவோரையெல்லாம்
அழித்தொழிப்பதே பலரின் இலக்கு

எத்தனை சாத்திரங்கள் படித்தாலும்
உடல் என்னும் பாத்திரத்தில் உள்ள
குடலை நிரப்ப யாரிடமாவது
பிச்சை எடுத்துதான் ஆகவேண்டும்
அல்லது  பிடுங்கித்தான் தின்ன வேண்டும்.

எல்லாவற்றையும் அவன் இலவசமாக
கொடுக்கையில் இவன் எல்லாம்
அனைத்தையும் தானதாக்கிக் கொள்கிறான்.

எதிர்த்தவரை கொல்கின்றான் .காலன்
அவனை எந்நேரமும் கொல்ல காத்திருக்கின்றான்
என்பதை அறியாமல்.

ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு
இரையாவது இந்த உலகத்தின் விதி.
சில கண் முன்னே நடக்கும்
பல கண்களுக்கு புலப்படாமல் நடக்கும்

இந்த உண்மையை அறியாது
பிதற்றி திரிபவன் எண்ணையில்லாது
எரிந்து கண நேரமே ஒளி சிந்தி
அழியும் சாம்பலாகும்
விளக்கு திரி   போன்றவன்.

புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு
கோளை விண்ணில் செலுத்த
விண்கலம் தேவை

உலக ஆசைகளிலிருந்து விடுபட்டு
மனம் அமைதி  அடைய
உடல் என்னும் விண்கலம் தேவை.

கோளை  செலுத்திய பின்
விண்கலம் புவி மீது விழுந்துவிடும்.

அது போல் உலக  ஆசைகளிலிருந்து
விடுபட்டபின் இந்த உடலும்
மண்ணில் விழுந்து விடும்

தாவரங்கள் விதைகளை உற்பத்தி செய்யும் வரை 
மீண்டும் மீண்டும் முளைக்கத்தான் செய்யும்.

ஆசைகள் இருக்கும் வரை உயிர்கள்
மீண்டும் பிறக்கத்தான் செய்யும்.

இன்ப துன்பங்களை
அனுபவிக்கத்தான் செய்யும்.

அண்டத்தை படைத்த ஈசனும்
பல்லுயிர்களை படைத்து அவைகளின்
இதயத்தில் உறையும்  ஈசனும் ஒன்றே.

அவனை அறிந்த பின்தான்
அனைத்தும் ஒன்றே என்று அறிய இயலும் .

அதை விடுத்து அவன் படைப்புகளை
கூறாய்வு செய்து கொண்டிருந்தால்
கூற்றுவனுக்கு மீண்டும் மீண்டும்
இரையாவதை தவிர்க்க இயலாது.

விண்ணிலே ஒளி வீசும் விண் மீன்களுக்கும்
புவியில் வாசம் செய்யும் பல்லுயிர்க்கும்
ஆன்மா ஒன்றே என்பதை உணராதுபோனால்
உள்ளத்தில் அன்பென்னும் பயிர் விளையாது.

உள்ளத்தில் அன்பிருந்தால்
சொல்லிலும் செயலிலும் இன்பம் பரவும்
விருப்பு வெறுப்பென்னும் அம்புகள்
வெளிப்பட்டால் வேதனைகள்தான் மிஞ்சும்.

  

2 கருத்துகள்:

  1. அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்.. அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்.." என்ற ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. அந்த காட்சியில் நடித்தவனும், அந்த பாடலை எழுதியவனும் ,அந்த பாடலை பாடியவனும் அந்த காட்சியை பார்த்த பலரும் இன்று இல்லை.மனதில் உள்ள கோடிக்கணக்கான நினைவுகளில் இதுவும் ஒன்று. நினைவுகளற்ற நிலையில் மட்டும்தான் நினைவுகளை தோற்றுவிக்கும் அந்த சக்தி/இறைவன்/உண்மை புலப்படும். அதுவரை மனம் போடும் தூண்டில்களிலிருந்து நாம் தப்ப முடியாது.

    பதிலளிநீக்கு