ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பெண்ணே என் கண்ணே கண்ணின் மணியே


முகத்தில் அமிலம் 
ஊற்றப்பட்ட பெண் மரணம்
செய்தி?


செய்தி கேட்டதும்  நெஞ்சம் 
பதை பதைக்கிறது

இறைவா ஏன் இந்த சோதனை?
ஏன் தொடருகிறது 
இது  போன்ற வேதனை. ?

பெண்ணே என் கண்ணே 
கண்ணின் மணியே 


சிவனில் பாதியாய்
உன்னை மனிதர் வணங்குகிறார் 
கோயிலில் சூடம் ஏற்றி

தெருவிலோ உன் அழகு முகத்தை 
கண்டால் உன்னை சுவைக்க
நினைக்கின்றார்  சில பாதகர்கள் 

ஒரே பார்வையால் 
உன்னை புணருவதாக
கற்பனையில் படம் 
ஓட்டுகிறார்கள் தங்கள் மனதில் 
சிலர் புண்ணாக்குகள் 
உன் உடலை புண்ணாக்குகின்றன 

தகுதியற்ற அக்கருங்காலிகளை
நீ ஏற்க மறுத்தால் அமிலம் 
ஊற்றி சிதைக்கின்றார் இந்நாட்டில் 

நெஞ்சை உருக்கும்  
இந்த கோர சம்பவங்கள்
நாள்தோறும் தொடருகிறதே
இந்திய திருநாட்டினிலே 

இதை தடுப்பாருமில்லை 
பாதகம் செய்தவருக்கு 
தண்டனை கொடுப்பாருமில்லை. 

பெண்ணே நீ இல்லாது 
இந்த உலகம் இயங்கிடுமோ?
பெண்ணே நீ இல்லாது உயிர்கள்தான்
இவ்வுலகில் தோன்றி பெருகிடுமோ? 

அறிவு தெய்வம்  நீ கோயிலில் 
கலைகளை அள்ளித்தரும் கலைவாணி நீ 
அரக்கர்களை அழிக்கும் காளியும் நீ 
பண்டிகை நாட்களில் மட்டும்

செல்வதை தரும் இலக்குமியும் நீ 
இந்த உலக மாந்தர்களின் இலக்கும் நீ 
நீயும் அவர்களின் பேச்சை நம்பி
அவர்களிடம் தங்குகிறாய்
அவர்கள் செய்யும் அநீதிகளுக்கு 
துணையாயும் இருக்கிற்றாய்
என்னே உன் தத்துவம் 
எனக்கு புரியவில்லை?  

அழகு பெட்டகமே உன்னை ரசிக்க 
இந்த மானிடர்க்கு மனதில்லை 
உன்னை வேட்டையாடி புசிக்க 
மட்டுமே விரும்புகிறது வயது 
வேறுபாடு காணாமல் 

பெண்ணிற்கு பெற்றோர் காவல் 
பருவ வயது வரும் வரை 

பருவம் வந்து மணந்தபின் 
கணவன் காவல்

வயதான பின் தன் 
குழந்தைகள் காவல் 

திக்கற்றோர்ர்க்கு தெய்வமே துணை 
என்று வகுத்து தந்தனர் நம் முன்னோர். 

காலம் மாறியது. களங்களும் மாறியது. 
பெண்ணே இன்று உனக்கு 
வீட்டிலும் பாதுகாப்பில்லை 
வெளியிலும் பாதுகாப்பில்லை 
யார் மூலம் நீ நிர்மூலம் ஆவாயோ 
அந்த இறைவனே அறிவான். 


தவறு செய்பவர்களை 
தடுத்து காப்பு போட  
காவல் துறை இருந்தும் 

சட்ட புத்தகங்களை 
மேற்கோள் காட்டி நீதிபதிகளும் உண்டு 
தண்டனை தர நீதிமன்றங்களும் உண்டு

அரக்க மனம் கொண்ட 
மனித மிருகங்களை சிறையில் அடைக்க 
சிறைசாலைகளும் உண்டு இந்நாட்டில் 
இருந்தும் என்ன செய்ய ?

சிறையில் உள்ளோரை விட சிறைக்கு செல்லாமல் 
பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்க 
வாய்ப்பை நாடி சுற்றி திரியும் பாதகர்கள் நிறைந்த  
நாடாகிவிட்டது  இன்றைய பாரதம்

பள்ளியில் கல்வி பெற ஆசிரியர்களிடம் 
பெண்ணை அனுப்பினால் அங்கும் பாதகர்கள் 
சிலர் கலவியை பற்றி போதிக்கிறார் 
போதிசத்துவன் உதித்த இந்நாட்டில் 

அன்று பாஞ்சாலிக்கு ஏற்பட்ட கதி இன்றும் தொடருகிறது.
அவளை கண்ணன் வந்து காப்பாற்றியதாக 
இன்னும் கதை விட்டுகொண்டிருக்கிறது 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறது
இந்த ஒழுக்கம் கேட்ட சமூகம்.   

பஞ்சமா பாதகத்தில் ஈடுபடுகிறார்கள் பாதகர்கள்
எழுத்தில் மட்டும் அரங்கேறிய இந்த வன்முறைகள் 
பெண்களை துன்புறுத்தும் காட்சிகள் அதிலும்
 பெண்களே பெண்களை இழிவு செய்யும் காட்சிகள் 
இன்று படமாய் ஒலி ஒளி காட்சிகளாக தினமும் 
மக்கள் மத்தியில் 24 மணி நேரமும் 
வலம் வருகின்றன கைபேசியில்,
மக்கள் ஒழுக்கத்திற்கு உலை வைக்கும் 
தொலை காட்சிகளில் 

மரத்து போன மனித உள்ளம் கண்டு ரசிக்கிறது 
தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே 
என்று மனதிற்குள். நடிகர்களும் நடிகைகளும்
போட்டி போட்டு நடிக்கின்றார் அக்காட்சிகளில் 
வெட்கமில்லாமல். கோடி கோடியாய் காசை அள்ள 

இன்று எல்லாம் நடிப்பாய் போய் விட்டது
நடிப்பவர்கள் நாடாளுகிறார்கள்.நடிப்பவர்கள் 
சமூகத்தில் மெச்சப்படுகிறார்கள்.ஆனால் 
பாதிக்கபடுபவர்களோ துன்பத்திலும் 
துயரத்திலும் துடிக்கிறார்கள்.மடிகிறார்கள். 

சம்பவம் நடந்த பின் 
ஆறுதலும் தேறுதலும் 
சொல்ல கூட்டம் 
அலை மோதுகிறது

ஆர்பாட்டங்கள் அனுதினமும்
அது பாட்டிற்கு நடைபெறுகிறது.

 காவல் துறையும் ஊடகங்களும் 
ஆளும் அரசுகளும் அளவளாவி 
அறிக்கை விட்டுவிட்டு 
அடுத்த செய்திக்காக 
காத்திருக்கின்றன 

அவலங்களை தடுக்க எதையும் 
செய்ய இயலாமல் வேடிக்கை 
பார்க்கும் இந்த மனித சமூகமும்கூடத்தான் 

இறைவா என்று மாறும் 
இந்த அவல நிலை?
உன் படைப்புகள் படும் துன்பங்களை
நீ காணுகிறாய் அனுதினம்

ஆனால் மௌனம் சாதிக்கிறாய் 
அது ஏன்?
அதுதான் 
எனக்கு புரியவில்லை. 


Pic. courtisy-google images 
 
 

2 கருத்துகள்:

  1. கடவுள் என்ற செய்வார் பாவம். மனிதனாய் பிறந்தும், விலங்குகளாய் வாழும், மனிதர் நிறைந்த பூமியாகி விட்டது இது. வக்கிர புத்திக்கு விலங்கிட்டுப் பயனென்ன. விசாரனை நடத்தி ஆவதென்ன. சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும். பாரபட்சமின்றி செயல்படவும் வேண்டும்.பொது மக்கள், மற்றும் குடும்பத்தார் முன்னிலையில், இவ்வக்கிர புத்திக் காரர்கள் தூக்கிலிடப் படவேண்டும். இனி இவ்வகை நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, குடும்பத்தில் அன்பு பெருக வேண்டும்.
    இந்த அவசர கால உலகில், ஒரு குடும்பத்திற்குள்ளேயே, ஒருவருக்கு ஒருவர் புரிதல் இன்றி, ஒருவரை ஒருவர் அறியாமலே, அந்நியர் போல் வாழ்வது தவிர்க்கப் பட வேண்டும்.
    அன்பும், பாசமும் பெருகினால்தான் இதுபோன்ற வன் செயல்கள் நிகழாது என்று எண்ணுகின்றேன் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உலகம் வாழ உங்கள்
      எண்ணம் அனைவரின் மனதில்
      வலு பெறட்டும்
      உங்களை போன்ற ஆசிரியர்களின்
      பங்குதான் இதில் முதன்மை பெறவேண்டும்.

      ஒழுக்கமில்லா மாணவர்கள்
      நம் நாட்டின் எதிர்காலத்தை
      சிதைத்துவிடுவார்கள்.

      இப்போதே அந்த அபாய அறிவிப்புகள்
      ஒலிக்கதொடங்கிவிட்டன

      நீக்கு