யாரையும் முட்டாள் என்று வசை பாடாதீர்.
அகந்தை கொள்ளாதீர்
அழிவை நாடாதீர்.
யார் முட்டாள்?
யார் அறிவாளி?
எல்லாம் அறிந்தவர்
எவரேனும் உண்டோ
இந்த பிரபஞ்சத்தில்?
எல்லாம் அறிந்தவர் எவருமில்லை
அதுபோல் ஏதும் அறியாதவர்
இவ்வுலகத்தில் இல்லை
கற்றவர் சபையில்
கல்லாதவன் மூடன்
மூடர்கள் மத்தியில்
கற்றவன் அறிஞன்
படித்ததினால் அறிவு பெற்றோர்
பாரினில் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும்
பாரினில் உண்டு என்றான் ஒரு கவிஞன்
ஏதோ ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டு
அகந்தை மேலிட்டு
மற்றவர்களையெல்லாம்
வாதிட்டு மடக்கி
அடிமை செய்தோரும் உண்டு
அவர்கள் ஒன்றும் அறியாத
பாமரனிடம் வாயை கொடுத்து
வாங்கி கட்டிக்கொண்டு
அசடு வழிந்ததும் உண்டு.
தன்னிடம் தோற்றவரின் காதினை
அறுத்தெறிந்த ஒரு புலவன்
அருணகிரிநாதரிடம் தோற்றுபோனான்
தன் காதை அறுக்க அவர்
தாள் பணிந்தவனை
தண்டிப்பது எம் நோக்கமல்ல
புலவர்களை இழிவு செய்தல்
தமிழுக்கு செய்யும் இழுக்கு
என்றான் அந்த முருகன்
அருள் பெற்ற வள்ளல்.
உம் தமிழை தமிழுக்கு தா என்றார்.
அவர்தான் வில்லி பாரதம்
அளித்த வில்லி புத்தூரார்.
ஒட்டக்கூத்தனும்
அகந்தை கொண்டு அலைந்தான்
வாதில் தோற்றவர்களை
சிறையில் அடைத்து மகிழ்ந்தான்.
அவனை கண்டாலே அலறி
ஓடினார்கள் புலவர்கள்.
இப்படியும் சிலர்ஆறறிவு
பெற்றும் மக்களாக வாழாமல்
மாக்களாக வாழ்ந்தவர்களும்
வரலாற்றில் காணலாம்
ஒரு ஏற்றம் இறைக்கும்
விவசாயி பாடிய 'மூங்கில் இலை
மேலே தூங்கும் பனி நீரே என்ற
பாடலை முடிக்க தெரியாமல்
தத்தளித்த பெரும்புலவரையும்
இந்த உலகம் கண்டிருக்கிறது.
தமிழால் உயர்ந்த அவ்வை பாட்டி
ஒரு மாடு மேய்க்கும் பாலகனாக
வந்த முருகபெருமான்
கேட்ட கேள்விக்கு
பதிலளிக்க முடியாமல்
திணறியது
அனைவரும் அறிந்ததே.
இப்படியாக ஏராளமான
சம்பவங்கள் சரித்திரத்தில் உண்டு.
யாரையும் முட்டாள்
என்று வசை பாடதீர்.
நீங்கள் ஓசையின்றி
முட்டளாக்கப்படுவீர்
உங்கள் கவனக்குறைவால்
அகந்தை கொண்டவன்
ஒருநாள் கந்தை துணி போல்
கசக்கி எறியப்படுவான்
வீதியில்
போற்றி புகழ்ந்து அவனை மகிழ்ச்சியில்
ஆழ்த்திய அதே உலகம்
அவனை புழுதியில் தள்ளி
தூற்றி இகழும்
என்பதை மறவாதீர்.
பல அசிங்கங்களை
கந்தை துணி துடைத்து
அழுக்காவதைபோல் அவர்கள் வாழ்வும்
களங்கப்பட்டு காணாமல் போவார்கள்
பிறர் மீது கொண்ட,பாசமோ
அல்லது,மோகமோ, பேராசையோ
அல்லது அழுக்காறோ,
அகந்தையோ,
மூட நம்பிக்கையோ
உங்களை முட்டாளாக்க
24 மணி நேரமும் உங்களை சுற்றி
காத்துக் கிடக்கின்றன
என்பதை மறவாதீர்கள்.
பணிவினால் கிடைக்கும்
உயர்வு காலத்தால்
நிலைத்து நிற்கும்
அகந்தையினால் பெற்ற உயர்வு
நின்று நிலையாமல்
காகித கோட்டைபோல் சரிந்துவிடும்
ஒரு சிறு காற்று வீசினால்கூட போதும் .
உண்மை உண்மை... உணர வேண்டிய உண்மை...
பதிலளிநீக்குஉண்மையை உரைக்கின்றேன்
நீக்குநாள்தோறும்
உணர்வாரும் இல்லை
உகப்பாரும் இல்லை
இந்தஉலகில்.