ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பெண்ணே என் கண்ணே கண்ணின் மணியே


முகத்தில் அமிலம் 
ஊற்றப்பட்ட பெண் மரணம்
செய்தி?


செய்தி கேட்டதும்  நெஞ்சம் 
பதை பதைக்கிறது

இறைவா ஏன் இந்த சோதனை?
ஏன் தொடருகிறது 
இது  போன்ற வேதனை. ?

பெண்ணே என் கண்ணே 
கண்ணின் மணியே 


சிவனில் பாதியாய்
உன்னை மனிதர் வணங்குகிறார் 
கோயிலில் சூடம் ஏற்றி

தெருவிலோ உன் அழகு முகத்தை 
கண்டால் உன்னை சுவைக்க
நினைக்கின்றார்  சில பாதகர்கள் 

ஒரே பார்வையால் 
உன்னை புணருவதாக
கற்பனையில் படம் 
ஓட்டுகிறார்கள் தங்கள் மனதில் 
சிலர் புண்ணாக்குகள் 
உன் உடலை புண்ணாக்குகின்றன 

தகுதியற்ற அக்கருங்காலிகளை
நீ ஏற்க மறுத்தால் அமிலம் 
ஊற்றி சிதைக்கின்றார் இந்நாட்டில் 

நெஞ்சை உருக்கும்  
இந்த கோர சம்பவங்கள்
நாள்தோறும் தொடருகிறதே
இந்திய திருநாட்டினிலே 

இதை தடுப்பாருமில்லை 
பாதகம் செய்தவருக்கு 
தண்டனை கொடுப்பாருமில்லை. 

பெண்ணே நீ இல்லாது 
இந்த உலகம் இயங்கிடுமோ?
பெண்ணே நீ இல்லாது உயிர்கள்தான்
இவ்வுலகில் தோன்றி பெருகிடுமோ? 

அறிவு தெய்வம்  நீ கோயிலில் 
கலைகளை அள்ளித்தரும் கலைவாணி நீ 
அரக்கர்களை அழிக்கும் காளியும் நீ 
பண்டிகை நாட்களில் மட்டும்

செல்வதை தரும் இலக்குமியும் நீ 
இந்த உலக மாந்தர்களின் இலக்கும் நீ 
நீயும் அவர்களின் பேச்சை நம்பி
அவர்களிடம் தங்குகிறாய்
அவர்கள் செய்யும் அநீதிகளுக்கு 
துணையாயும் இருக்கிற்றாய்
என்னே உன் தத்துவம் 
எனக்கு புரியவில்லை?  

அழகு பெட்டகமே உன்னை ரசிக்க 
இந்த மானிடர்க்கு மனதில்லை 
உன்னை வேட்டையாடி புசிக்க 
மட்டுமே விரும்புகிறது வயது 
வேறுபாடு காணாமல் 

பெண்ணிற்கு பெற்றோர் காவல் 
பருவ வயது வரும் வரை 

பருவம் வந்து மணந்தபின் 
கணவன் காவல்

வயதான பின் தன் 
குழந்தைகள் காவல் 

திக்கற்றோர்ர்க்கு தெய்வமே துணை 
என்று வகுத்து தந்தனர் நம் முன்னோர். 

காலம் மாறியது. களங்களும் மாறியது. 
பெண்ணே இன்று உனக்கு 
வீட்டிலும் பாதுகாப்பில்லை 
வெளியிலும் பாதுகாப்பில்லை 
யார் மூலம் நீ நிர்மூலம் ஆவாயோ 
அந்த இறைவனே அறிவான். 


தவறு செய்பவர்களை 
தடுத்து காப்பு போட  
காவல் துறை இருந்தும் 

சட்ட புத்தகங்களை 
மேற்கோள் காட்டி நீதிபதிகளும் உண்டு 
தண்டனை தர நீதிமன்றங்களும் உண்டு

அரக்க மனம் கொண்ட 
மனித மிருகங்களை சிறையில் அடைக்க 
சிறைசாலைகளும் உண்டு இந்நாட்டில் 
இருந்தும் என்ன செய்ய ?

சிறையில் உள்ளோரை விட சிறைக்கு செல்லாமல் 
பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்க 
வாய்ப்பை நாடி சுற்றி திரியும் பாதகர்கள் நிறைந்த  
நாடாகிவிட்டது  இன்றைய பாரதம்

பள்ளியில் கல்வி பெற ஆசிரியர்களிடம் 
பெண்ணை அனுப்பினால் அங்கும் பாதகர்கள் 
சிலர் கலவியை பற்றி போதிக்கிறார் 
போதிசத்துவன் உதித்த இந்நாட்டில் 

அன்று பாஞ்சாலிக்கு ஏற்பட்ட கதி இன்றும் தொடருகிறது.
அவளை கண்ணன் வந்து காப்பாற்றியதாக 
இன்னும் கதை விட்டுகொண்டிருக்கிறது 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறது
இந்த ஒழுக்கம் கேட்ட சமூகம்.   

பஞ்சமா பாதகத்தில் ஈடுபடுகிறார்கள் பாதகர்கள்
எழுத்தில் மட்டும் அரங்கேறிய இந்த வன்முறைகள் 
பெண்களை துன்புறுத்தும் காட்சிகள் அதிலும்
 பெண்களே பெண்களை இழிவு செய்யும் காட்சிகள் 
இன்று படமாய் ஒலி ஒளி காட்சிகளாக தினமும் 
மக்கள் மத்தியில் 24 மணி நேரமும் 
வலம் வருகின்றன கைபேசியில்,
மக்கள் ஒழுக்கத்திற்கு உலை வைக்கும் 
தொலை காட்சிகளில் 

மரத்து போன மனித உள்ளம் கண்டு ரசிக்கிறது 
தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே 
என்று மனதிற்குள். நடிகர்களும் நடிகைகளும்
போட்டி போட்டு நடிக்கின்றார் அக்காட்சிகளில் 
வெட்கமில்லாமல். கோடி கோடியாய் காசை அள்ள 

இன்று எல்லாம் நடிப்பாய் போய் விட்டது
நடிப்பவர்கள் நாடாளுகிறார்கள்.நடிப்பவர்கள் 
சமூகத்தில் மெச்சப்படுகிறார்கள்.ஆனால் 
பாதிக்கபடுபவர்களோ துன்பத்திலும் 
துயரத்திலும் துடிக்கிறார்கள்.மடிகிறார்கள். 

சம்பவம் நடந்த பின் 
ஆறுதலும் தேறுதலும் 
சொல்ல கூட்டம் 
அலை மோதுகிறது

ஆர்பாட்டங்கள் அனுதினமும்
அது பாட்டிற்கு நடைபெறுகிறது.

 காவல் துறையும் ஊடகங்களும் 
ஆளும் அரசுகளும் அளவளாவி 
அறிக்கை விட்டுவிட்டு 
அடுத்த செய்திக்காக 
காத்திருக்கின்றன 

அவலங்களை தடுக்க எதையும் 
செய்ய இயலாமல் வேடிக்கை 
பார்க்கும் இந்த மனித சமூகமும்கூடத்தான் 

இறைவா என்று மாறும் 
இந்த அவல நிலை?
உன் படைப்புகள் படும் துன்பங்களை
நீ காணுகிறாய் அனுதினம்

ஆனால் மௌனம் சாதிக்கிறாய் 
அது ஏன்?
அதுதான் 
எனக்கு புரியவில்லை. 


Pic. courtisy-google images 
 
 

சனி, 23 பிப்ரவரி, 2013

யாரையும் முட்டாள் என்று வசை பாடாதீர்.



யாரையும் முட்டாள் என்று வசை பாடாதீர்.



அகந்தை கொள்ளாதீர் 
அழிவை நாடாதீர். 

யார் முட்டாள்?
யார் அறிவாளி? 

எல்லாம் அறிந்தவர் 
எவரேனும் உண்டோ 
இந்த பிரபஞ்சத்தில்?

எல்லாம் அறிந்தவர் எவருமில்லை 
அதுபோல் ஏதும்  அறியாதவர் 
இவ்வுலகத்தில் இல்லை 

கற்றவர் சபையில் 
கல்லாதவன் மூடன்
மூடர்கள் மத்தியில் 
கற்றவன் அறிஞன்

படித்ததினால் அறிவு பெற்றோர் 
பாரினில்  உண்டு 

பாடம் படிக்காத மேதைகளும் 
பாரினில் உண்டு என்றான் ஒரு கவிஞன்

ஏதோ ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டு 
அகந்தை மேலிட்டு 
மற்றவர்களையெல்லாம் 
வாதிட்டு மடக்கி
அடிமை செய்தோரும் உண்டு


அவர்கள் ஒன்றும் அறியாத 
பாமரனிடம் வாயை கொடுத்து 
வாங்கி கட்டிக்கொண்டு 
அசடு வழிந்ததும் உண்டு. 


தன்னிடம் தோற்றவரின் காதினை 
அறுத்தெறிந்த ஒரு புலவன் 
அருணகிரிநாதரிடம் தோற்றுபோனான்

தன் காதை அறுக்க அவர் 
தாள் பணிந்தவனை 
தண்டிப்பது எம் நோக்கமல்ல 
புலவர்களை இழிவு செய்தல் 
தமிழுக்கு செய்யும் இழுக்கு
என்றான் அந்த முருகன் 
அருள் பெற்ற வள்ளல்.

உம் தமிழை தமிழுக்கு தா என்றார். 
அவர்தான் வில்லி பாரதம்
அளித்த வில்லி புத்தூரார். 

ஒட்டக்கூத்தனும் 
அகந்தை கொண்டு அலைந்தான் 

வாதில் தோற்றவர்களை
சிறையில் அடைத்து மகிழ்ந்தான்.
அவனை கண்டாலே அலறி 
ஓடினார்கள் புலவர்கள். 

இப்படியும் சிலர்ஆறறிவு 
பெற்றும் மக்களாக வாழாமல் 
மாக்களாக வாழ்ந்தவர்களும் 
வரலாற்றில் காணலாம் 

ஒரு ஏற்றம் இறைக்கும் 
விவசாயி பாடிய 'மூங்கில் இலை 
மேலே தூங்கும் பனி நீரே என்ற 
பாடலை முடிக்க தெரியாமல் 
தத்தளித்த பெரும்புலவரையும் 
இந்த உலகம் கண்டிருக்கிறது. 

தமிழால் உயர்ந்த அவ்வை பாட்டி 
ஒரு மாடு மேய்க்கும் பாலகனாக 
வந்த முருகபெருமான்
கேட்ட கேள்விக்கு
பதிலளிக்க முடியாமல் 
திணறியது 
அனைவரும் அறிந்ததே. 

இப்படியாக ஏராளமான 
சம்பவங்கள் சரித்திரத்தில் உண்டு.

யாரையும் முட்டாள் 
என்று வசை பாடதீர்.

நீங்கள் ஓசையின்றி 
முட்டளாக்கப்படுவீர் 
உங்கள் கவனக்குறைவால்

அகந்தை கொண்டவன் 
ஒருநாள் கந்தை துணி போல் 
கசக்கி எறியப்படுவான்
வீதியில்


போற்றி புகழ்ந்து அவனை மகிழ்ச்சியில்
ஆழ்த்திய அதே  உலகம் 
அவனை புழுதியில் தள்ளி 
தூற்றி இகழும் 
என்பதை மறவாதீர். 


பல அசிங்கங்களை 
கந்தை துணி துடைத்து 
அழுக்காவதைபோல் அவர்கள் வாழ்வும் 
களங்கப்பட்டு காணாமல் போவார்கள் 

பிறர் மீது கொண்ட,பாசமோ 
அல்லது,மோகமோ, பேராசையோ 
அல்லது அழுக்காறோ, 
அகந்தையோ,
மூட நம்பிக்கையோ 
உங்களை முட்டாளாக்க
24 மணி நேரமும் உங்களை சுற்றி 
காத்துக் கிடக்கின்றன 
என்பதை மறவாதீர்கள். 


பணிவினால் கிடைக்கும் 
உயர்வு காலத்தால் 
நிலைத்து நிற்கும்

அகந்தையினால் பெற்ற உயர்வு 
நின்று நிலையாமல் 
காகித கோட்டைபோல் சரிந்துவிடும் 
ஒரு சிறு காற்று வீசினால்கூட  போதும் . 



வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சீரழிக்கும் சினிமாவும் சீர்கெட்ட அரசியலும்


சீரழிக்கும் சினிமாவும் 
சீர்கெட்ட அரசியலும்



இந்த பூமியில் இயக்குனர்களும்,
பாடலாசிரியர்களும், நடிகர்களும்,
நடிகைகளும். மக்களை 
மிருகங்களாக்கி
கொண்டிருக்கிறார்கள்.


திரைப்படங்களில் 
வன்முறைதீயை மூட்டி 
அதில் காம ரசத்தை காய்ச்சி 
மக்களுக்கு கொடுத்து 
காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் அதை போதை 
தரும் மதுவோடு சேர்த்து அளித்து 
பாமர மக்களை மயக்கி 
நாட்டை கொள்ளை 
அடித்து கொண்டிருக்கிறார்கள். 

உடகங்கள் ஊழலை 
வெளிச்சம் போட்டு காட்டுகின்றன 
நாள்தோறும் தவறாது.
தங்கள் பைகளை நிரப்பிக்கொள்ள

சராசரி மனிதன் வானை முட்டி 
அதை தாண்டி அண்ட வெளிக்கு 
வெளியில் சென்றுவிட்ட 
விலைவாசியை நினைத்து வாழ 
வழிதெரியாதுபட்டினியை மறக்க 
பாட்டிலை நாடுகின்றான். 

என்ன செய்ய? 

வியாழன், 21 பிப்ரவரி, 2013

விழித்துகொள்ளுங்கள்


விழித்துகொள்ளுங்கள்
 
அகந்தையை அழிக்காமல் 
ஆன்ம ஞானம் கிடைக்காது 

அகந்தை இருக்கும்வரை 
மனம் பிறரை அடிமைப்படுத்த நினைக்கும் 

அகந்தை இருக்கும்வரை
மனம் பிறர் மீது ஆதிக்கம்
செலுத்த நினைக்கும் 

அகந்தை இருக்கும்வரை 
மனதில் ஆசைகள் 
வளர்ந்துகொண்டே போகும்

ஆசைகள் இருக்கும் வரை 
அதை நிறைவேற்ற ஓய்வில்லாமல்
உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும்

ஒரு ஆசை நிறைவேற்றப்பட்டதும் 
அடுத்த ஆசையை நோக்கி மனம் ஓடும். 

ஆசைகளை நோக்கிய பயணத்தில் 
வாழ்நாள் கழிந்து போகும்

ஆசைக்கு குறுக்கே வருபவர் மீது 
வெறுப்பும் சினமும் உண்டாகும். 

வெறுப்பும் சினமும் நம்மை 
அழிவு பாதைக்கு செலுத்தி
நம் வாழ்க்கையை 
அமைதியற்றதாக செய்து விடும். 

தீய ஆசைகள் மனிதனை 
பாவக்குழியில் தள்ளிவிடும்

சுற்றங்களை அழித்துவிடும். 
நோயில் தள்ளிவிடும். 

அளவுக்குமேல் 
பொருள் சேர்ந்தால் 
அதை பாதுகாப்பதிலேயே 
வாழ்நாள் போய்விடும். 
அதை அனுபவிக்கவும் முடியாது 

தீய வழியில் சேர்த்த செல்வம் 
இருக்கின்ற செல்வதையும் 
சேர்த்து தீயை போல் அழித்துவிடும். 

அற வழியில் சேர்த்த 
செல்வம்தான் இன்பம் தரும் 

சேர்த்த செல்வத்தில்
தனக்கு பயன்பட்டது போக  
இல்லாதவர்க்கு இயன்ற அளவு 
தருமம் செய்ய வேண்டும்.

தர்மம் செய்வது என்பது 
இயல்பான குணமாக அமைய வேண்டும். 

பலனை எதிர்பார்த்து செய்வது 
ஏமாற்றத்தை தான் அளிக்கும். 

உதவி  செய்தால் 
நன்றியை எதிர்பார்க்கக்கூடாது. 

செய்த உதவியை
 உடனே மறந்துவிடவேண்டும் 

இல்லையேல் உதவி பெற்றவர்கள் 
நமக்கு எதிரிகளாகிவிடுவர்

செல்வம் நிலையாது. 
அது இடம் மாறிக்கொண்டே இருக்கும். 
அதை பிடித்து வைக்க முடியாது. 
அது ஒரு அளவுக்கு மேல் பயன்தராது. 

அதை பூட்டி வைப்பது 
கொள்ளையர்களுக்கு அளிக்கவே. 

பிறருக்கு பயன்பாடா செல்வம் 
எப்படியாவது கொள்ளை போய்விடும். 

எப்படி என்று 
எல்லோருக்கும் தெரிந்ததுதான்

வங்கியில் இன்டர்நெட் கணக்கு 
வைத்திருப்போர் இன்று மிக சுலபமாக
பல லட்சங்களை சில நிமிடங்களில் 
ஏமாந்து போகிறார்கள்

வங்கிகணக்கிலிருந்து எடுத்த பணம் 
வங்கியை விட்டு வெளியே வருவதற்குள்  கொள்ளையடித்து விடுகிரார்கள்.

பலபேருக்கு எடுத்த பணம்
பயன்படுவதில்லை.

பல ஆயிரக்கணக்கான மக்களை
ஒரு சிலர் மிக சுலபமாக ஆசைகாட்டி பல கோடி ரூபாய்களை ஏமாற்றி எடுத்துக்கொண்டு 
தலைமறைவாகி விடுகிறார்கள். 

பிறகு வாழ்நாள் முழுவதும் 
கொள்ளை போன செல்வதை நினைத்தே
மக்கள் இன்று மாண்டு போகிறார்கள். 

எனவே சம்பாதிப்பதில் 
கண்டிப்பாக தர்மம் செய்யுங்கள். 
அது உங்களை மட்டும் காக்காது 
உங்கள் சந்ததியையும் காக்கும்

பிறரை ஏமாற்றுபவன் 
தானும் ஏமாந்துபோவான். 
அவன் செய்த தீவினை அவனை 
பல பிறவிகள் தொடரும். 

பணிவாக இருங்கள்.
உங்களை பிணிகள் அணுகாது. 

சினம் கொள்வதால்தான். 
மனம் கெடுகிறது.
உடல் நலம் கெடுகிறது. 

இன்று தடுக்கி விழுந்த 
இடமெல்லாம் மருத்துவமனைகள்.

மனிதர்கள் பணம் தேடுவதில் 
நோய்வாய் படுகிறார்கள். 
சேர்த்த பணம் முழுவதும்
மருந்துகளுக்காகவும்,
மருத்துவ பரிசோதனைகளுக்காகவும்,
மருத்துவ சிலவுக்காகவும் அழிந்து போகிறது. 

அன்பு இல்லாமையே
அனைத்திற்கும் காரணம் 

பெற்றோரிடம் அன்பு இல்லை
உற்றோரிடமும் அன்பு இல்லை 
தன்னை சுற்றியுள்ளோரிடமும் அன்பில்லை

அன்பே சிவம் 
அன்பில்லாத வழிபாடுகள் 
வெறும் கூப்பாடுகள்.
அது யார் காதிலும் விழாது 
அதனால் எந்த பயனும் இல்லை.

சொல்லில் செயலில் 
நேர்மை இல்லை. 
நேர்மை இல்லையேல் 
வாழ்வதில் எந்த பயனில்லை. 

விலங்குகளுக்கும்
மனிதர்களுக்கும் எந்த பேதமும் இல்லை.
உருவத்தில் தவிர. 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தமிழ்தாத்தா உவே சாமிநாத ஐயரை பற்றி எந்த தமிழனுக்கு தெரியும்


U.Ve. Swaminatha Iyer

தமிழ்தாத்தா உ வே சாமிநாத ஐயரை பற்றி
எந்த தமிழனுக்கு தெரியும்?

அரசு பராமரிக்கும் தமிழ்த்தாத்தாவின் வீடு பூட்டி கிடக்கிறது -
அதை மீண்டும் திறப்பார் இல்லையா என்று
சில உள்ளங்கள் புலம்புகின்றன-
செய்திகள் வந்தன நாளேடுகளில் -
அரசுக்கு கோரிக்கை


இன்றைய தமிழனுக்கு
தமிழை பற்றி என்ன தெரியும்?

தகுதியில்லாதவர்களை
தலைமேல் தூக்கி
வைத்துக்கொண்டு ஆடுவான்

டாஸ்மாக் கடையில்
20000 கோடி ரூபாய் அளவிற்கு
குடித்து தமிழ்நாடு அரசுக்கு
வருவாய் சேர்ப்பான்

நடிகர்களுக்கு கோயில்  கட்ட
அவர்களின் படங்களை பார்க்க,
கட்டவுட்டுகளுக்கு
பாலபிஷேகம் செய்ய
காசு கேளுங்கள்
பல லட்சங்கள்
ஒரே நாளில் சேர்ந்துவிடும்

கட்சி துவங்கி
காசு கேளுங்கள்
கல்லா நிறையும்

தமிழை பற்றி தமிழனே
கவலைப்பட்டதில்லை.

தமிழை வைத்து பிழைப்பு நடத்தி
லட்சக்கணக்கில் சம்பாதித்தும்
கவிஞர்களும் புலவர் பட்டம்
பெற்றவர்களும், எழுத்தாளர்களும்
தமிழ் தாயில் மடியில்
காலசுவட்டில் சுவடுகள் தெரியாமல்
மறைந்து போன சுவடிகளை
தேடி பிடித்துஅச்சில்
ஏற்றி அனைவரும் பயனுற உய்ய வகை
செய்த தமிழ் தாத்தா ஊ வே சாமிநாத ஐயரை பற்றி
 பற்றி கவலைப்பட அவர்களுக்கு எது நேரம்?

அவரை பற்றியே அறியாத தமிழ் இனம்
அவர் வாழ்ந்த வீட்டை பற்றியா
கவலைப்படப்போகிறது?

நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த
காந்தி தாத்தாவையே இந்தசமூகம் மறந்துவிட்டது.

தினம் தினம் அவர் முகத்தை
மக்களுக்கு கரன்சி நோட்டில் காட்டியும்
அவரை நோக்குவார் இல்லை.
அந்த நோட்டு என்ன நோட்டு
என்றுதான் பார்க்கின்றார்.
அதன் மதிப்பை மட்டும் பார்க்கின்றார்
மதித்து போற்றவேண்டிய காந்தி மகானின்
கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு.

வங்கியில் பணி செய்வோர் அது நல்லநோட்டா
அல்லது கள்ள நோட்டா என்று மட்டும்தான் பார்க்கின்றார்

ஒரு அரசு ஒரு நினைவாலயம் ஏற்படுத்தினால்
அடுத்து வரும் அரசு அதை கவனிக்காமல் விடுகிறது
அனேக காரணங்களினால்

தமிழன் என்றும் தமிழால் ஒன்று பட்டதில்லை
மற்ற மொழி பேசுபவர்கள் போல்.

எதிர்காலத்திலும் ஒன்றுபடப்போவதில்லை

அவன்தான் மொழி,ஜாதி, இனம், மதம்,ஏழை,பணக்காரன்,அரசியல் என்று சுக்குநூறாக உடைந்து கிடக்கிறான். உடைந்து போன கண்ணாடி துண்டுகள்போல்

ஒரு அரசு நிறுவனமே செயல்படாமல் உள்ளது
 என்றால் யாரை குறை சொல்வது?

அதை பராமரிக்கும் அரசு துறையில் உள்ள அதிகாரிகளின்
மெத்தன போக்கா அல்லது தமிழார்வமே இல்லாத
அதன் துறை தலைவரா?

தமிழ் தாய் அவ்வப்போது தன் புதல்வர்களை
இவ்வுலகிற்கு அனுப்பி தன்னை பாதுகாத்து கொள்வாள்

பாரதி வந்தான் சென்ற நூற்றாண்டில்
ஒரு புயலை கிளப்பிவிட்டுப்போனான்.

அவன் அடிசுவட்டை பின்பற்றி
ஒரு பெரும்படையே வந்தது தமிழைக்காக்க
.
யாரிடமும் தமிழை காக்க  கையேந்தாதீர்.

முருகபெருமான் அளித்த தமிழ் அகத்தியன்,தொல்காப்பியன், சேக்கிழார்,திருமூலர், அருணகிரிநாதர்திருவள்ளுவர்,ஆழ்வார்கள்
,நாயன்மார்கள்,கம்பர் என எண்ணற்ற .தெய்வீக புலவர்களால் வளந்த தமிழ்

என்றும் இளமை குன்றாது,வளமை குன்றாது வாழும்
பெருமைஉடைத்தது

கவலை வேண்டாம்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

பயம் எதனால் ஏற்படுகிறது?(பகுதி-2)


பயம் எதனால் ஏற்படுகிறது?(பகுதி-2)

பயம் மனம் சம்பந்தப்பட்டது.

பயம் இரண்டை மட்டும் நாம்
சார்ந்திருப்பதால்தான் உண்டாகிறது.

ஒன்று இந்த உடலை
மற்றொன்று நம் உடமைகளை.

ஏனெனில் இந்த உடலின்மூலம்தான்
மனம் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுகிறது.

அந்த உடலுக்கு ஏதாவது ஆகிவிட்டால்
அதனால் ஒன்றும் செய்ய இயலாது போகும்.

அதனால்தான் அது எப்போதும் உடலை பற்றியே கவலைப்பட்டுகொண்டிருக்கிறது.
அதை வளர்க்க, அதை பாதுகாக்க என
வாழ்நாள்முழுவதும் அது ஓயாமல் நேரத்தையும் ,உழைப்பையும், பணத்தையும்,செலவிட்டுக்கொண்டிருக்கிறது.

அதற்க்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற
அச்சத்தில்தான் அது கணக்கற்ற
பாதுகாப்புக்களை நாடுகிறது.

மனிதர்களின் அமைப்புகளும்
இதே வகையில்தான் தன் பாதுகாப்புக்கு பிறர் அச்சுறுத்தலாக விளங்குவார்களோ என்று எண்ணி அஞ்சி ஒருவர் மீது தொடர்ந்து விரோதமும் வெறுப்பும் பாராட்டி அமைதி இழந்து தவிக்கின்றன.

அப்போதும்  அனைத்தும் தன் கண் முன்
தவிடுபொடியாவதை.பலமுறை அது கண்ணுற்று
அந்த நினைவுகள் நீங்க இயலா பதிவாக
மனதில் பதிந்துவிடுகின்றன.

எனவேதான் மரணம் அனைத்திற்கும்
முற்றுபுள்ளி வைத்துவிடும் என்றுதான்
அது பயப்படுகிறது. .

இரண்டாவது மனம் இன்பத்தை பொருள்கள்,
உடைமைகள், உறவுகள் என
பல புறப்பொருள்கள் மூலம் தேடுகிறது.

அவைகளை இழந்துவிடுவோமோ ,
அதனால் வரும்  இன்பத்திற்கு பாதிப்பு   வந்துவிடுமோ
என்று தொடர்ந்து பயம் மனதை வாட்டிகொண்டிருக்கிறது.

கடவுள் நம்பிக்கை உள்ளவன்
இறைவனிடம் அதற்க்கு பாதிப்பு இல்லாமல்
இருக்க வேண்டிக்கொள்கிறான்.

இல்லாதவன் தன்  அறிவின்
துணையை நாடுகிறான்.

இரண்டும் இல்லாதவர்கள்.
எதைபற்றியும் கவலைப்படுவதில்லை.

எனவே அனைத்து துன்பங்களுக்கும்
காரணம் உடல் மீது வைத்திருக்கும் பற்றும்
உடமைகள் மீது வைத்திருக்கும் பற்றும்தான்
காரணம் என தெள்ள தெளிவாக தெரிகிறது.

ஆனால் எந்த பற்றையும்  விடமுடியவில்லையே?
எப்படி பயத்திலிருந்து விடுபடுவது?

கையில் எண்ணை பிசுக்கை நீக்க
சோப்பை பயன்படுத்துகிறோம்.
கையில் ஒட்டியுள்ள பெயிண்டை போக்க
கெரொசினை பயன்படுத்துகிறோம்.

 கெரோசின் துர்நாற்றத்தை போக்க
சோப்பை பயன்படுத்துகிறோம்.

சோப்பு நாற்றத்தைபோக்க தயிர் அல்லது
மோரை உபயோகிக்கிறோம்.

இப்படியாக ஒவ்வொரு பற்றை நீக்க
ஏதாவது ஒரு புதிய பற்றை பிடித்துக் கொள்ளுகிறோம்.

இது நீண்டு கொண்டே போகிறது.
இதற்க்கெல்லாம் எப்படி தீர்வு காண்பது?

(இன்னும் வரும்)

திங்கள், 4 பிப்ரவரி, 2013

பயம் எதனால் ஏற்படுகிறது?


பயம் எதனால் ஏற்படுகிறது?

இந்த உலகத்தில் பயம் என்ற உணர்ச்சிக்கு
ஆட்படாதவர்கள் யாருமில்லை

ஏன் தேவர்கள் கூட அசுரர்களை
கண்டு பயப்படுகிறார்கள்.

ஏன் தெய்வங்கள் கூட அவர்களை விட
அதிக சக்தியுள்ள தெய்வங்களை கண்டு பயப்படுகின்றன

சிலர் மற்றவர்கள் முன்னாள் பயமில்லாமல்
இருப்பதுபோல் நடிப்பார்கள்
ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதாவது
ஒரு பயம் ஒளிந்துகொண்டிருக்கும்.

பயத்திற்கு முக்கியமான
காரணம் பற்றுதான்

ஒரு பற்று இருந்தாலே பயம்

மனிதர்களை போல் கணக்கற்ற பற்றுக்களை
வைத்திருப்பவன் பயந்துதான் ஆகவேண்டும்.

பற்றுகள் அதுவாக வருவதில்லை

நாம்தான் அவைகளை பற்றிகொள்ளுகிறோம்

நம் உடல் பற்றி எரியும் வரை
அவைகளை நாம் விடுவது கிடையாது.

ஆனால் நாமெல்லாம் சொல்லிகொள்வது
பற்றுக்கள் நம்மை பற்றிக்கொண்டிருக்கின்றன என்று.

பற்றுக்கு முக்கிய காரணம் நான் என்ற எண்ணமும்
எனது என்ற எண்ணமும்தாம் அடிப்படை காரணங்கள்

அதிலிருந்துதான் புற்றுநோய் போல் கணக்கிலடகா

பற்றுகள் நம்மை பற்றிக்கொண்டு நம்மை வாட்டி வதைக்கின்றன.

பற்றுக்கள் நம்மை ஒருமுறை பற்றிக்கொண்டால்
அதிலிருந்து விடுபடுவது அரிது

பற்றுகளினால் நாம் சில இன்பங்களையும்
எண்ணற்ற துன்பங்களையும் அனுபவிக்கின்றோம்.

இந்த இன்பங்கள் எல்லாம் நிலைத்து நிற்பவையும் அல்ல
நீடித்து இன்பம் தருபவையும் அல்ல

இப்படி பலமுறை துன்பப்படும் நாம் எந்த பொருளின்மீதும் பற்றுகளை விடுவதில்லை.

இவைகளுக்கெல்லாம் ஊற்றுகண்ணான மனமும்
உடலும்தான் காரணம் என்பதை யாரும் அறிவதில்லை.

பயம் ஏற்படுவதர்க்கு அடிப்படைக்காரணம்
இந்த மனம் மற்றும் உடல் மூலம் அனுபவித்து வரும்
இந்த நிலையற்ற இன்பங்களை மரணத்தின்
மூலம் நாம் இழந்துவிடுவோம் அல்லது
பிறரால் அபகரிக்க
ப்பட்டுவிடும் என்ற பயம்தான் காரணம்.

இதற்க்கான காரணத்தை கண்ட புத்தன்
ஆசைகள்தான் துன்பத்திற்கு  காரணம் என்றான்

ஒரு சித்தர் ஒருநாள் அழியபோகும்
இந்த உடலை நான் என்று எண்ணும் வரையிலும்,
அதேபோன்று அழியக்கூடியவையும்,
பிறரால் களவாடபடக்கூடிய
பொருட்கள்மீதும் ஆசை வைக்கும்வரை
 பயம் நீங்காது என்றார்.

ஆனால் இந்த அறிவுரைகளை
யார் கேட்கின்றார்கள்?

நாங்கள் இப்படியே பிறந்ததுமுதல்
இறக்கும்வரை பயந்துகொண்டேஎங்கள்
வாழ்க்கையை தொலைப்போம் என்று
கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார்கள்

பின்னர் எப்படி பயம் போகும்?
(இன்னும் வரும்)
  .