வெள்ளி, 21 டிசம்பர், 2012

இன்று உலகத்தில் காணப்படும் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் ஒன்றுதான்


இன்று உலகத்தில் காணப்படும்
அனைத்து துன்பங்களுக்கும் 
மூல காரணம் ஒன்றுதான்

அதுதான் நான் என்னும் அகந்தை.

அது மனிதனிடம் இருக்கும் வரை
அவனால் நிம்மதியாக இருக்க முடியாது.

அவனால் அவனை சுற்றியுள்ளவர்களும்
நிம்மதியாக இருக்க முடியாது

ஏனென்றால் அகந்தை என்றாலே
மற்றவர்கள் நம் சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டும்,
அடி பணியவேண்டும் எதிர்த்து பேசக்கூடாது
என்ற அடிப்படை மனோபாவம் நிச்சயம் இருக்கும்

அப்படி இருக்கும்போது அவனால்
மற்றவர்களுடனும் எந்தவிஷயத்திலும்
ஒத்து போக முடியாது

அவனை சுற்றியுள்ளவர்களுக்கும்
அகந்தை என்னும் பேய் பிடித்திருப்பதால்
 அவர்களாலும் அவனுடன் ஒத்து போக முடியாது.

பிறகு என்ன உரசல்கள்தான்.

உரசல்கள்தான் வெறுப்பை வளர்க்கின்றன.

வெறுப்புதான் கோபமாக மாறுகிறது.
 கோபம் சிந்திக்கும் திறனை அழித்துவிடுகிறது.
 மனதில் தெளிவு இல்லாமல் செய்து விடுகிறது.
அப்புறம் என்ன ?

கோபப்படுபவன் வலிமை உடையவனாக இருந்தால்
மற்றவர்களை அடித்து நொறுக்குகிறான்,
அல்லது உடலளவிலோ அல்லது
மனதளவிலோ காயப்படுத்துகிறான்.

வலிமை இல்லாவதவானாக் இருந்தால்
அதை அவன் செயலில் வெளிப்படுத்துகிறான்.
எந்த விஷயத்திலும் ஒத்துழைக்க மறுக்கிறான்,
பொறுப்பின்றி செயல்படுகிறான்.

அகந்தை இருப்பதால் அனைவருக்கும்
வாழ்க்கையே எல்லாம் இருந்தும் நரகமாகி விடுகிறது.

இவ்வளவு நடந்தும் மனிதர்கள்
அகந்தையை விடுவதில்லை

அதை விடாபிடியாக பிடித்துகொண்டிருக்கிறார்கள்.
செத்த பாம்பை பயத்தினால்
பிடித்துகொண்டிருக்கும் குரங்கு போல.

பாம்பை பிடித்த குரங்கு பாம்பு இறந்து உலர்ந்து
,காய்ந்து போன பிறகும் அந்த பாம்பு
தன்னை கடித்து கொன்றுவிடுமோ என்று
பயந்து முடிவில் அது அன்ன ஆகாரமில்லாமல்
பட்டினி கிடந்தது மாண்டு போகும்.
அதைபோல்தான் மனிதர்களும்

அகந்தையை விட்டுவிட்டால்
நம்மை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள்
என்ற தவறான எண்ணத்தை மனதில் கொண்டு
அகந்தையை விடாமல். இவ்வுலகை விட்டு
போகும் வரை தானும் துன்பப்பட்டு
தன்னை சுற்றியுள்ளோரையும்
துன்பத்தில் ஆழ்த்திவிட்டுகொண்டு மடிகிறார்கள்.

அகந்தையை விட்டுவிட்டால் கள்ளம்
கபடமற்ற குழந்தைபோல் ஆனந்தமாக இருக்கலாம்,
பிறருக்கும் ஆனந்தம் தரலாம் என்பதை
மனிதர்கள் உணரும் காலம் எப்போது?

2 கருத்துகள்:

  1. அகந்தையை விட்டுவிட்டால் கள்ளம்
    கபடமற்ற குழந்தைபோல் ஆனந்தமாக இருக்கலாம்,

    அற்புதமான வரிகள்...பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
      உங்கள் வலைப்பதிவுகளில் உள்ள படங்களும் தகவல்களும் அருமை.

      நீக்கு