பேராசை என்னும் புதைகுழி
ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன
அருமையான கதை.
ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு,
பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு
டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார்.
வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு,
100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது.
அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார்.
(அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட
அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும்
விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த
வழியில் ஒருவன் வருகிறான்.
இந்த நோட்டைக் கண்டு,
,இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து,
மிகவும் சந்தோஷமடைகிறான்.
அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான்.
இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான்,
அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த
ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.
சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு
அது விழுந்த இடத்திலேயே கிடந்தது.
அந்த வழியாக ஒருவன் வந்தான்.
இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில்
எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............
அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------
--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.
பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்
நன்றி-தகவல்-KN Ramesh