புதன், 1 பிப்ரவரி, 2017

பரம்பொருள் என்றால் என்ன ?

பரம்பொருள் என்றால் என்ன ?

பரம்பொருள்  என்றால் என்ன ? 

ஆன்மீகத்தில் பரம்பொருள்
என்றால் எல்லாம் வல்ல இறைவனை
குறிக்கும் சொல்.

அது எல்லா இடத்திலும் நீக்கமற
நிறைந்திருக்கிறது.

அது அறியாதது எதுவும் இல்லை
அதை அறியாது எதுவும்
சாத்தியப்படுவதுமில்லை.

அதை அறியாதவன் எல்லாம்
தாம் எல்லாம் அறிந்தவன் போல்
தன் அறியாமையை  உலகிற்கு
காட்டிக் கொள்கிறான் (கொல்கிறான் )

அதை அறிந்தவனோ அமைதியாய்
தன் பணிகளை செய்து கொண்டிருக்கிறான்

அதை அறிவதுதான் அறிவு
மற்றவையெல்லாம் மண்டையில்
திணிக்கப்படும்  வெறும்
இரைச்சல் போடும் குப்பைகள்.

எல்லா சாதனைகளும் அமைதியாய்த்தான்
இந்த உலகில்  காலம் காலமாய்
நடந்துகொண்டிருக்கின்றன

உதாரணத்திற்கு நம் கண் முன்னே
தினமும் காணும் சூரியனும் சந்திரனும்
அவைகள் எந்த ஆர்பாட்டமும்  செய்வதில்லை

ஆனால் அவைகளை காண்ட மாத்திரத்தில்
இந்த உலகத்தில் உள்ள உயிர்கள்
இயங்குகிறது

மண்ணில் விழுந்த  விதை
முளைப்பதும் தெரியவில்லை,வளர்வதும் தெரியவில்லை
பூத்து காய்த்து,கனிந்து  மீண்டும் விதைகளை
விட்டு செல்வதும் தெரிவதில்லை.

இது போன்று கணக்கற்ற  நிகழ்வுகள்.
இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு
ஆர்பாட்டமில்லாது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் மனிதன் மட்டும் தான்
தான் செய்யும் ஒவ்வொரு  அற்ப செயலையும்
வெளிச்சம் போட்டு காட்டி சுய தம்பட்டம்
அடித்துக்கொண்டு ஆனந்தம் அடைகிறான்.

பரம்பொருள் என்ற சொல்லை பரம் + பொருள் 
என இரண்டாக பிரித்து பார்த்தால் அதன் 
உண்மை தெரியும். 

பரம் என்றால் ENERGY
பொருள் என்றால் MATTER
இரண்டும் தனி தனியாக இருக்கும்போது
சும்மா கிடக்கும்

இரண்டும் ஒன்று சேரும் போது
இயக்கம் நடைபெறுகிறது

இதைத்தான் சிவம் என்றும்
சக்தி என்றும் அடையாளம் காட்டினார்
நம் முன்னோர்கள்.

அதனால்தான் சக்தியில்லையேல்
சிவம் போல் கிட  என்று விளங்க வைத்தனர்

சிவமும் சக்தியும் இணைந்தால்தான்
இவ்வுலகிலும் அண்டத்திலும் இயக்கங்கள்
உண்டாகும் என்பதை அர்த்த நாரீஸ்வர
வடிவத்தில் நமக்கு உணர்த்தினார்.

இந்த தத்துவம்தான் கணக்கற்ற புராணங்களாக
வடிவெடுத்து காலந்தோறும்  மனிதர்களுக்கு
பரம்பொருளின் தத்துவத்தை.  உணர்த்தி வந்து
கொண்டிருக்கின்றன.

ஆனால் தத்துவங்களை புரிந்துகொள்ளாது
மனிதர்கள்தத்து  பித்தென்று உளறிக்கொண்டு
ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்து
கொண்டிருக்கின்றனர்.

அன்பு ஒன்றுதான் அனைவரையும் 
இணைக்கும் பாலம். அதை விடுத்து 
அனைவரிடம் சாத்திரங்களையோ 
நூல்களையோ காட்டி பேதம் காண்பது
உள்ளத்திலும் உலகிலும் 
அமைதியையும் ஆனந்தத்தையும் 
என்றும் தராது 
என்பதை அனைவரும்
 புரிந்துகொள்ள வேண்டும் 

1 கருத்து: