ஞாயிறு, 31 மே, 2015

இறைவன் நமக்கு அளித்த உயிர் எதற்காக?

இறைவன் நமக்கு அளித்த உயிர் எதற்காக?

ஜடமாய் கிடந்த நமக்கு 
இறைவன் நம் மீது கருணை கொண்டு 
உயிர் தந்தான் உயர்வான வாழ்க்கை  வாழ்ந்திட 


அற  வழியில் பொருளீட்டி 
தன்னலம் கருதாது வாழ்ந்து 
அன்போடு அனைவருடன் பழகி 
ஆனந்தம் அடைவீர் என்றான் இறைவன் 

அந்தோ பரிதாபம் !
இன்று  நடப்பதென்ன ?

இந்த பூமியில் அன்புமில்லை பண்புமில்லை, 
ஒழுங்குமில்லை 
ஒழுக்கமும் இல்லை 
எங்கு பார்த்தாலும் ஒரே அவல ஓலம்தான் 
விண்ணிலும் மண்ணிலும். 

மானிட பிறவியின் நோக்கமே 
தன்னை அறிந்துகொண்டு தன் 
தலைவனை அறிவதற்கே என்பதை 
மறந்து போனது இந்த மானிடம்.

பிறரை சுரண்டி சொத்து சேர்ப்பதும், 
இன்பம் தரும் இயற்கையை மாசுபடுத்துவதும் 
துன்பம் தரும் செயற்கையில் மூழ்கி அழிவதும்தான் 
இவன் தேடிய வழி 

யாருடனும் இசைந்து வாழான் 
எதனுடனும் அனுசரித்து போகான் 

அனைவரிடமும் பகைமை அதனால் 
எங்கும் அமைதியின்மை 
உள்ளத்தில் அமைதியில்லை 
அதனால் உலகினிலும் 
அமைதியில்லை 

தன்னை அடக்க வழியறியாமல் உலகில் திரியும் போலி 
காவி துறவிகளிடம் அமைதி பற்றி பாடம் கேட்க அலைகின்றார் 
அந்தோ பாவம் ! இருவரும் சேர்ந்து கூட்டாக 
இவ்வுலகில் ஆட்டம் போட்டு அழிகின்றார். 

கூட்டம் சேர்த்துக்கொண்டு 
கூப்பாடு போட்டு ஆர்பாட்டம் செய்தால் 
அனைத்து பிரச்சினைகளும்  தீர்ந்து விடும் என்று 
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் 
கும்பல் பெருகிவிட்டது இந்நாட்டில்.

அதனால் ஆதாயம் அடைந்தவர்கள்
கூட்டம் போட்டவர்கள்  மட்டுமே 
கூடியவர்களின் பிரச்சினைகள்  
எதுவும்  தீர்ந்தபாடில்லை. இதுநாள் வரை. 

நாவில் இருக்குதடா நயம் என்றார் அறிவுள்ளோர்.
நாவின் மூலம் நட்புறவை வளர்த்து நன்மை அடையாமல்  
மக்களிடையே நஞ்சை விதைத்து நாசமாய்ப் போகின்றார் 

உழைப்பவர்களின் நலனுக்காக உரக்க பேசுகின்றார் 
ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவன் உதிரத்தை சுரண்டி 
கொழுக்கின்றார் .

பிறப்பு முதல் இறப்பு வரை ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள் 
மதத்தின்  பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் 
இது போதாதென்று வர்த்தகத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால் 
அம்மம்மா !போதுமடா சாமி ! எதற்காக பிறந்தோம் என்று 
நினைக்க தோன்றுகிறது.

மனதில் உரம் உள்ளவன் அனைத்தும் சரியாகும் 
என்று தொடர்ந்து முயற்சி செய்கிறான் 

உரமில்லா கோழை மனம் கொண்டவன் 
உரம் இல்லா பயிர்கள் 
செத்து மடிவதைபோல் 
தன்னை மாய்த்து கொள்கிறான். 

அரிதாய் கிடைத்த உயிரை 
அழித்துக் கொல்வது   மடமை.

அது இறைவன் நமக்கு அளித்த கொடை 
இந்த உடல் உயிருக்கு ஆடை 

உயிர் இறைவனின் உடைமை 
அதை நன்றாக காத்து 
நம்மைமேம்படுத்திக்கொள்வது 
நம்  அனைவரின் கடமை, 




2 கருத்துகள்:

  1. "மனதில் உரம் உள்ளவன் அனைத்தும் சரியாகும்
    என்று தொடர்ந்து முயற்சி செய்கிறான்" என்ற
    உண்மையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு