ஞாயிறு, 31 மே, 2015

உண்மையும் புளுகும்

உண்மையும் புளுகும் 

உண்மைதான் கடவுள்
பொய் அந்த கடவுளை மறைக்கும்  திரை

உண்மையை காண வேண்டுமென்றால்
பொய் என்னும் திரை விலக வேண்டும்.

உள்ளத்தில் உண்மை என்னும் ஒளி
எப்போதும் இடைவிடாமல்
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது.

அது வெளியிடும் ஒளியைக் கொண்டுதான்
மனத் திரையில் பொய்கள் நாட்டியமாடுகின்றன

நாம் அனைவரும் அந்த நிழல் வடிவங்களை
உண்மையென்று நம்பிக்கொண்டு நாட்களை
கடத்திக் கொண்டிருக்கிறோம்.

உண்மையை உண்மையால்தான்
அடையமுடியும்.

பொய்க்கு அந்த வாய்ப்பு என்றும் கிடையாது.

ஆனால் நாம் இவ்வுலகில் கால் வைத்த
கணம் முதல் பிணமாகும் வரை உண்மையே
பேசுவதும் கிடையாது மற்றவர்களையும்
பேச விடுவதும் கிடையாது.

காலையில் கண் விழித்தது முதல்
இரவில் கண்மூடும் வரை பொய்களையே
அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்கள்
சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டு விட்டோம்.

அதனால் உண்மை என்ற ஒன்று இருப்பதையே
மறந்து விட்டோம்.

நம் தவறை பிறர் காணாமல் இருக்க பொய்
பேச தொடங்கிய நாம் அது தொடர்கதையாக
மாற அனுமதித்து உண்மையை தலை தூக்க விடாது
செய்துவிட்டோம்.

தவறுகள் செய்வது மனித இயல்பு.
அதை ஏற்றுக்கொண்டு உணர்ந்து மீண்டும் அந்த
தவற்றை செய்யாது இருக்க முயற்சி செய்தால்
உண்மை உள்ளிருந்து வெளிப்பட்டு நம்
வாழ்வை வளமையாக்கும்.


2 கருத்துகள்:

  1. முடிவில் சொன்னதே சிறப்பான தீர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  2. உண்மை என்ற ஒன்று
    இருப்பதையே மறந்து விட்டு - நாம்
    ஒரு பொய்யை மறைக்க
    ஓராயிரம் பொய்கள் கூறி
    பயனில்லைக் காணும்!

    பதிலளிநீக்கு