வியாழன், 5 நவம்பர், 2015

உயிருக்குயிரான இறைவனை உணர்ந்து கொள்ளாவிடில்...

உயிருக்குயிரான இறைவனை
உணர்ந்து கொள்ளாவிடில்...



ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்

அதற்குள் நம்முள் உறையும்
இறைவனை அறிந்துகொள்ளா விடில்
உடலை விட்டு நீங்கிய உயிர்
எங்கே போய்  தங்கும் ?

உடலில் உயிரோடு இருக்கையிலே
நம் உள்ளே நம்மோடு இருக்கும்
உயிருக்குயிரான இறைவனை
உணர்ந்து கொள்ளாவிடில்
உலகில் மனிதராய் பிறவி
எடுத்ததின் பயன் ஏது ?

உண்மைதான் கடவுள் என்று
ஊரறிய முழங்குகிறார் மேடையிலே
ஆனால் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில்
ஒன்றுமாய் நடந்து கொள்கிறார்
வாழ்க்கை பாதையிலே

வேரின்றி பூமியில் நில்லாது
மரம்,செடி,கொடி தாவரங்கள்

உயிரின்றி எவ்வுயிரும் இயங்க
இயலாது இந்த நிலவுலகில்

அதுபோன்று ஒன்றோடொன்று
மோதிக்கொண்டு சிதையாமல் சுழலுகிறது
அண்டத்தில் கோள்களின் கூட்டம்

அனைத்திற்கும் ஆதார சக்தியாய்
விளங்குவது எண்ணற்ற கோடி
ஆண்டுகளுக்கு முன் அந்த ஒருவன்
போட்ட திட்டம்

எங்கும் பரந்துள்ள அந்த பரம் பொருள்
நம்முள்ளும் இருப்பதை உணர்ந்துகொள்ள
கொள்ளவேண்டும் நாட்டம்

நம் புலன்களுக்கு எட்டாத பொருளான
அந்த பொருளை முயன்று
அறிந்து கொள்ளாது போனால்
நமக்குதான் நட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக