வியாழன், 25 ஆகஸ்ட், 2016

என்ன தவம் செய்தேனோ !

என்ன தவம் செய்தேனோ !


என்ன தவம் செய்தேனோ !

என்ன தவம் செய்தேனோ 
ராம பக்தனாய் பிறப்பதற்கு !

என்ன புண்ணியம் செய்தேனோ 
எந்நேரமும் உன்னை நினைப்பதற்கு !

உருவமற்ற பரம்பொருளாய்
அண்டமெங்கும் நிறைந்தவனே!

உத்தம பக்தருக்காய் உருவெடுத்து
காண்போர் உளம் மகிழ
காட்சி தந்த  அழகு சுந்தரனே !

கானகத்தில் உன்னை நினைந்து
கடும் தவம் செய்யும் தவசிகள்
அரக்கர்களால் அடைந்த இன்னல்
போக்கி  இன்பம் அளித்தாய் !

வானகத்தில் வாழும் தேவர்களின்
இடர் தீர்த்து இதமளித்தாய் !

வடிவம் இழந்த அரக்கர் கூட்டம்
விருப்பு வெறுப்பு என்னும்  வடிவம் எடுத்து
அகந்தை என்பவனை தலைவனாய்க் கொண்டு
மாந்தர் தம் மனதில் புகுந்துகொண்டு
மாளாத துயரத்தில்தள்ளிவிட்டு
அல்லல்படுத்துவதை நீ அறியாயோ?
நீ அறியாயோ?

பணியின்  சுமையால் தத்தளிக்கும்  மாந்தர் ஒருபுறம்
பிணியின் தாக்குதல் கண்டு பரிதவிக்கும் மாந்தர் ஒருபுறம்
ஆசை என்னும் பேய்கள் விரிக்கும் வலையில்
சிக்கி தாபத் தீயில் விழுந்து மாய்வது மறுபுறம்
என்று நீள்கிறது உலக வாழ்வு

விடுதலை வேண்டும் என்று விழைகிறது மனம்
அதை அடையும் வழி அறியாது இங்குமங்கும்
அலைகிறது தினம் .

உன் திருவடியில்அமர்ந்து
பூஜை  செய்ய உடலில் சக்தியில்லை
சிதறுண்ட மனதினால் உன்னை ஒருமனதாக
பக்தியுடன்  நினைத்து வணங்க இயலவில்லை.

எந்நேரமும் எளிதில் நினைத்து பக்தி செய்து
அனைத்தையும் அளிக்கும் கற்பக விருட்ஷம் போல்
உன் "ராம " நாமம் இருக்க அதை நாடாது இந்த உலக
மாந்தர் அற்ப பொருளுக்காக யார் யாரையோ நாடி
ஓடி திரிந்து ஆயுளை வீணாக்குகின்றனரே !

அல்லல்கள்  நிறைந்த வாழ்வில் அல்லும்  பகலும்
ராம நாமம் உரைத்ததினால் அலை பாயும் மனம்
அடங்கிவிட்டது .

அனைத்தும் உன் செயல்
என்ற எண்ணம் வந்துவிட்டது.

ஆனாலும் அகந்தை பிசாசு மட்டும் தன் இடத்தை
உனக்கு விட்டுத் தர  மறுக்கிறது

என் செய்வேன் !
உத்தமான உன் மற்ற பக்தர்களை போல்
இவன் பக்தி  இல்லை என்று தள்ளிவிடாதே
இவனை தவிக்க விட்டுவிடாதே!


                                                        ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்



இதயத்தில் உன் திருவடிவத்தை நிறுத்தி வைத்தே
பல கோடி முறை ஜெபித்தேன் உன் நாமமதை
இன்னும் தொடர  அருள் செய்வாய் உன்
இன்னருள்  இவனுக்கு கிட்டும் வரை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக