செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மே தின சிந்தனைகள்


மே தின சிந்தனைகள் 



மே தின வாழ்த்துக்கள் 
நல்ல நிலையில் உள்ள 
அமைப்பு சார்ந்த தொழிலளர்களுக்கு. 

ஆனால் பண முதலைகளால் 
சுரண்டப்பட்டு சாலையின் ஓரங்களிலும், 
சாக்கடையாக மாறிவிட்ட நதிகளின் கரைகளிலும் 
தங்கள் வாழ்வை தொலைக்கின்ற 
கோடிக்கணக்கான அமைப்பு சாரா 
தொழிலாளர்களை  வாழ்த்துவார் யார்?

அவர்கள் வாழ்வு வளம் 
பெற வழி காணுவார் யார்?

அவர்களுக்கு கிடைக்கவேண்டிய 
அடிப்படை கூலியை கிடைக்க 
வழி செய்வார் யார்?

தாய் மண்ணை விட்டுவிட்டு  
பிழைக்கும் வழி தேடி பிற மாநிலங்களுக்கு 
வந்தவர்கள் படும் பாட்டை நீக்க 
வழி தேடுவார் யார்?

கல்வி கற்கும் வயதினிலே 
குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய 
குழந்தை தொழிலாளார்களின் 
நலனை கவனிப்பார் யார்?





சட்டங்கள் பல உண்டு

போராட கட்சிகள் 
பல உண்டு இந்நாட்டில்

ஆனால் இந்த கேள்விகளுக்கு
 பதில் இல்லை
தீர்வும் இல்லை

தொடரும் இந்த அவலம் 
ஆண்டாண்டு காலமாக 

இவர்கள் என்று 
வளம் பெறுகிறார்களோ
தங்கள் அடிப்படை 
உரிமைகளை பெறுகிறார்களோ 
அதுவரை கொண்டாடப்படும் 
 மே தின கொண்டாட்டங்கள் 
முழுமை பெறாது. 

அவர்களுக்கும் நன்மை 
விளைய அனைவரும்
 பாடுபடுவோம்.



திங்கள், 29 ஏப்ரல், 2013

திருக்குறள் விளக்கம் என் பார்வையில்


திருக்குறள் விளக்கம் 
என் பார்வையில் 

குறள் 35: 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.
மு.வ உரை:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்



தற்காலத்தில் எல்லோரும் அறத்திற்கு 
புறம்பான செயல்களை ஒரு பக்கம் செய்துகொண்டு 
விளம்பரத்திற்காக அற  செயல்களையும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் விளம்பரமில்லாமல் 
அற செயல்களை செய்து கொண்டு வருகிறார்கள்.

பலர் பலரறறிய அற செயல்களை செய்வதுடன் 
அதன் மூலமாக பல ஆதாயங்களை 
தேடிக்கொள்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். 

அவர் செய்யும் அற செயல்களுக்காக 
ஆகும் செலவை விட அதை விளம்பர படுத்துவதற்காக 
ஆகும் செலவு பன்மடங்காக இருக்கும். 

சிலர் தன் எதிரி அறத்திர்க்காக செலவு செய்தால் 
அவர் மீது பொறாமை கொண்டு ,
அவர்மீது கோபம் கொண்டு, அவரை விட 
அதிகமாக செலவு செய்து  
சுய லாபத்திற்காக செய்வது 
இந்நாளில் அதிகம்

சிலர் சில குறிப்பிட்ட நபர்களுக்கு
 மட்டும் தான் உதவுவர். மற்றவர்கள் 
வந்தால் கோபம் கொண்டு கடும் சொற்கள் 
பேசி விரட்டியடிப்பார்.


இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமலும்,
 உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு 
அன்புடனும் பரிவுடன்,பாசத்துடன், 
பலன்மீது ஆசை இல்லாதிருத்தல் ,
அதன் பயனை  எதிர்பாராமல் உதவுவதுதான் அறம் 
எனப்படும் என்றும் திருவள்ளுவர் 
இந்த குறளில் வலியுறுத்துகிறார். 


சீரடி சாயீனாதன் பிச்சை கேட்டு 
வருபவர் யாரையும் கடும் சொல் 
பேசி விரட்டாதீர் என்றும் 
விருப்பமிருந்தால் பிச்சையிடுவீர். 

ஏனென்றால் உனக்கு அந்த நிலை
வந்தாலும் வரலாம் என்று எச்சரிக்கின்றார்.

சில நேரங்களில் நானே உன்வீட்டின்
 கதவை தட்டுவேன்
 உன் வினைகளை போக்க  என்கிறார்

யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் 
அந்த வடிவத்திற்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறார் 
என்பதை நாம் எப்போதும் நினைவில் கொளவேண்டும். 



என்றுதான் திருந்துமோ?


என்றுதான் திருந்துமோ?


தவறுகள் செய்வதற்கு
அஞ்சுவதில்லை
இந்த மானிடர் கூட்டம்

ஆனால்  அதன்விளைவுகளுக்கு
மட்டும் அஞ்சி நடுங்குது
இந்த அற்பக்கூட்டம்.

மனதிலும் மண்டிக்கிடக்குது கழிவுகள்
அகற்ற யாரும் முன்வருவதில்லை

தவற்றினை அனைவரும்
கூட்டு சேர்ந்து செய்கின்றார்

ஆனால் தன் குற்றத்தை மறந்து
பிறர்மீது  குற்றம் சுமத்துகின்றார்

புறவுலகிலும் கண்டவிடமெல்லாம்
கொட்டி மகிழ்கிறார்
குப்பைகளையும்கழிவுகளையும்



















திசுக்களை குதறி குருதி குடிக்கும்
கொசுக்களுக்கு சாக்கடை
பண்ணைகளை அமைத்து தருகின்றார்
இலவசமாக

அவைகளை அழிக்க மாதம்தோறும்
காசை தொலைக்கிறார்கள்
ஆயிர ஆயிரமாக

கொசுகடியால் வரும்
நோய்கள் கோடிகோடி
நோய் தீர்க்க மக்கள் கூட்டம் ஓடுது
மருத்துவரை நாடி நாடி

துன்பத்திற்கு வித்திட்டு
உழைத்த காசையெல்லாம்
ஊதாரிதனமாய் செலவிட்டு
கடன் தொல்லையில்சிக்கி மாயுது
அறிவிலா மக்கள் கூட்டம்.

என்றுதான் திருந்துமோ
செய்யும் தவற்றிற்கு வருந்துமோ
இந்த மூடர் கூட்டம்.





ஆத்திரம் அழிவுக்கு வழி வகுக்கும்


ஆத்திரம் அழிவுக்கு 
வழி வகுக்கும்

























எத்தனை சாத்திரங்கள் படித்தாலும்
ஆத்திரத்தை அட்க்காவிடில் 
அழிவுக்குத்தான் செல்லவேண்டும்

இன்று உலகில் நடக்கும் பல 
கொடுமைகளுக்கும்,தீமைகளுக்கும்,
இழப்புகளுக்கும். 
ஆத்திர குணம்தான் காரணம்

ஆத்திரகுணம் எதிராளிகளை 
மட்டும் அழிப்பதில்லை 
அந்த குணத்தை கொண்டவரையும் 
சேர்த்து அழித்துவிடும் தன்மை கொண்டது.

ஆத்திரத்தினால் அறிவிழந்து 
கண்ணிமைக்கும் நேரத்தில் 
கொடிய செயல்களை செய்துவிட்டு 
ஆயுள் முழுவதும் துன்பத்திலும், 
துயரிலும் வாழம் மனிதர்கள் கோடி கோடி 

பொறுமை கடலினும் பெரிது. 

வீரம் என்பது விவேகத்துடன்  
கூடி செயல்படும்போது 
நன்மையை தரும். 

விவேகமற்ற வீரமே ஆத்திரம் 
என்னும் கொடுநோய். 

எனவே பொறுமையை கைகொண்டு ,
விவேகத்துடன் எந்த பிரச்சினையையும் 
கையாண்டால் துன்பம் விளையாது. 

சனி, 27 ஏப்ரல், 2013

வாலி புராணம்


வாலி புராணம்



தன்னை எதிர்ப்போரின் பலத்தில்
பாதியை உறிஞ்சிவிடுவான் 
ராமாயணகால வாலி


தன் கவிதைகளினால் 
அனைவரையும் மிஞ்சிவிடுவான் 
இந்த கலி கால வாலி

முதுமையினால் உடல் தளர்ந்தாலும்
கவிதை உவமையினால் என்றும்
இளமை காப்பான் இந்த வாலி 

அவனுக்கு நிகர் அவனே 
சிந்தையில் நின்றாடும் 
சிந்திக்க வைக்கும் பாடல் 
வரிகளையும்  தருவான் 
சித்தமிழந்து கூத்தாடவைக்கும்
சிங்கார ரசம் சொட்டும் 
ஆடல் வரிகளையும் அள்ளி தெளிப்பான் 


மாலவன் புகழுரைக்கும் 
பாட்டுகள் எழுதுவான் ஒருபக்கம் 

மசாலா படங்களுக்கும் 
பாட்டெழுதுவான் 
மறுபக்கம். 

அன்றும் இன்றும் என்றும் 
இருப்பான் வாலி இசையிலும்
ஓசையிலும் காற்றில் கலந்து 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தமிழ் தாயே நீ வாழ்க


தமிழ் தாயே நீ வாழ்க 





தமிழை வளர்க்க முயன்றவர்கள் 
அன்று பல கோடி 

பல தியாகங்களை செய்தார்கள் 
தமிழை நாடி

அவர்களை நெஞ்சில் வைத்து 
போற்றுவோம் 

இன்றோ தமிழை வைத்து 
வயிறு வளர்க்கின்றார் 
பலர் 

தமிழ் மொழியின் சுவையை 
அறிந்தோரே அறிஞர்கள்

மற்றவர்கள் எல்லாம் வெறும்
உரைஞர்கள் 

தமிழுக்கு 
பெருமை சேர்த்தவர்கள்
எவ்வினத்தாயினரும் 
அவர்கள் தமிழர்களே

தமிழரில் சாதிகள் பலஉண்டு
விதவிதமாய் மணம் வீசும் 
பலவிதமான மலர்களைப்போல 

அவையனைத்தும் மாலையாய் 
தொடுக்கப்பட்டு தமிழ் தாயை 
அலங்கரிக்கப்படும் நாள்
என்று வருமோ நானறியேன்?

சாதிகள் இருப்பதில் தவறில்லை
சாத்திரங்கள் இருப்பதில் தவறில்லை
ஆனால் மக்கள் மனதில் சாதிகளை பற்றிய
பீதிகள் தேவைதானா ?

அவரவர் அவரவர் வந்த வழி 
பற்றி நடக்கின்றார்
இதில் உயர்வு தாழ்வு 
கருதல் வீணென்று இந்த உலகம்
உணரும் காலம் எப்போது வரும்? 

சைவமோ ,வைணவமோ எந்த 
சமயமாயினும் ஆன்மீகம்தான் தமிழை
காலத்தால்அழியாமல் காப்பாற்றி 
வைத்துள்ளது என்பதை மறவாதீர். 

தமிழ்உயர்வு பெற பாடுபட்டவர்களின்
வரலாறுகளை அறிந்து கொள்வீர் 

காலத்தால் மக்கள் மனதிடையே 
புகுந்துகொண்ட அவநம்பிக்கைககளை 
களைகலென களைவீர் 
தன்னிகரற்று வாழ்வீர்.