ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும்(5)

புச்சுக் குட்டியும் நானும்(5)

இறைவன் படைப்பில் எல்லாமே
அழகோவியங்கள் தான்
நாம்தான் அவைகளை
அழகானவை,அழகற்றவை
என நம் மனதில் தோன்றும்
எண்ண பேதங்களினால்
பிரிவுபடுத்தி . வெறுப்பை விதைத்து
வேதனையை அறுவடை செய்கிறோம்.

பூனைகள் தூங்கும்போது  காண்பதற்கு
அழகாக இருக்கும். அதன்  கள்ளம்
கபடமற்ற முகத்தை நான் வெகுவாக ரசிப்பேன்.
அப்படியே கட்டி முத்தமிட நினைக்கத் தோன்றும்.
ஆனால் அது எப்போதும் நாக்கினால் உடல் முழுவதையும்
நக்கிகொண்டே இருப்பதை கண்டதும் அந்த எண்ணத்தை
அடக்கிக் கொள்வேன் .அவற்றில் சில படங்களை எடுத்தேன்.

ஒவ்வொன்றும் காமிரா கவிதைகள்


இன்னும் தூக்கம் தெளியவில்லை. சூரிய ஒளியின் இதமான சூட்டில் குளிர் காய்கின்றன 



இருட்டில் ஒளிரும் கண்கள் 




தன் இரண்டு தம்பிகளும் உறங்கையிலே அண்ணன் 
காவல் காக்கின்றான். 





புச்சுக் குட்டியும் நானும்(4)

புச்சுக் குட்டியும் நானும்(4)

 இப்படியாக எங்களுக்குள் ஒரு 
பந்தம் தொடர ஆரம்பித்துவிட்டது 

காலையில் முதலில்புச்சுக் குட்டிகளை 
பார்த்து குசலம் விசாரித்தபின்தான் 
நான் என் வேலைகளை கவனிக்க செல்வேன். 

அதோடு இரவு வீடு திரும்பியதும் அவைகளைப் பார்த்து ஏதாவது சாப்பிடப் போடுவேன் அவைகளும் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போய்விடும் 

ஒருநாள் இருட்டில் பார்த்தேன் அவைகள் தூங்கி கொண்டிருந்தன. 

தன்   தம்பி பூனையை அண்ணா பூனை  பாந்தமுடன் அணைத்துக்கொண்டு 
தூங்கும் காட்சி என் மனத்தைக் கவர்ந்தது. அப்படி ஓர் அழகு .பார்த்துக்கொண்டே இருக்கலாம் 

உடனே படம்பிடித்தேன். 
அந்த படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று 
7 ஆண்டுகளாக என்னுடைய கணினியில் பத்திரமாக உள்ளது. 

அதை எப்போது பார்த்தாலும் என்னுள்ளத்திலும் பாசம் ஊற்றெடுக்கும் . ஆனால் 
அதை யாரும் புரிந்துகொள்வதில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம். 

அந்த படம் உங்கள் பார்வைக்கு. 




மனித சகோதரர்களும் அவைகள்போல் 
பாசமுடன் இருந்தால் எவ்வளவு  நன்றாக இருக்கும்? . 

சனி, 6 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும்(3)


புச்சுக் குட்டியும் நானும்(3)

காலையில் எழுந்தவுடன்
சமையலறைக் கதவை  நான் திறக்க
தாழ்ப்பாளை நீக்கும் ஓசை  கேட்டவுடன்
மூன்று  பூனைக் குட்டிகளும்
ஒரே  நேரத்தில் "மியாவ் " என்று   கத்திக்கொண்டு
அழகாக  நிற்பது பார்க்க பரவசமாக இருக்கும்.

ஒரு குச்சியை எடுத்து   விரட்டினால் சற்று  தள்ளிப் போய்
நின்று கொண்டு   ஏக்கமாய் ஒரு பார்வை பார்க்கும்

உடனே ஒரு  தட்டில் பாலை ஊற்றி வைத்தவுடன்
பார்க்கும் . திரும்பவும் விரட்டுவேனோ என்று பயம்.

நான் உள்ளே சென்றவுடன்  பாலைக்  குடித்துவிட்டு
விளையாட  செல்லும்

ஒருநாள் மூன்றும்  மதிய உணவை  
உண்டுவிட்டு நிழலில் இளைப்பாறிகொண்டிருந்தன.

எடுத்தேன் காமிராவை.
உடனே போஸ் கொடுத்தன .

அந்த  படம்   இதோ






வெள்ளி, 5 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும் (2)

புச்சுக் குட்டியும் நானும் (2)

பூனைக் குட்டிகளுக்கு ஒரு நாள்தான் 
பால் தட்டில் ஊற்றி வைத்தேன்.
அவைகள் அதை அவசரம் அவசரமாக 
ரோஸ்  நிற நாக்கால் நக்கிக் குடித்து 
தட்டை காலி செய்து விட்டன. 

அப்புறம் என்ன,வாலை  தூக்கிக்கொண்டு
ஒரு சோம்பல் விட்டுவிட்டு 
என்னை ஒரு பார்வை. பிறகு கிணற்று சுவர் 
ஓரமாக போய்  விளையாட 
தொடங்கின. 





அவைகள் ஒன்றுக்கொன்று
கொஞ்சிக்கொண்டு பாசமாக 
விளையாடுவதை பார்ப்பதே
இன்பமாக இருந்தது. 

நான் அவைகளைக் கவனிப்பதைப் பார்த்ததும் 
இரண்டு பூனைக்குட்டிகள் அழகாக போஸ் 
கொடுத்தன 

அந்த படம்தான் கீழே. 






மன அழுத்தம் நீங்க மாத்திரைகள்
விழுங்கத் தேவையில்லை

பூனைகுட்டிகளுடன் சிறிது நேரம்
இருந்தால் போதும்
மனம் லேசாகிவிடும்.

இன்னும் வரும் 

வியாழன், 4 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும் (1)

புச்சுக் குட்டியும் நானும் (1)

புச்சுக்குட்டி என்றால்
என்னவென்று குழம்ப  வேண்டாம்.
பூனைக்குட்டிகளுக்கு
நான் வைத்த செல்லப் பெயர்.

எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.
இருந்தாலும் பூனைகள் என்றாலே
ஒரு பயம், ஒவ்வாமை வந்துவிடுமோ அல்லது
தன்  கூறிய  நகங்களினால் பிராண்டிவிடுமோ என்று பயம்.

எல்லாவற்றிற்கும் மேலாக பூனை உடலிலிருந்து
ஒரு மயிர் விழுந்தால்கூட அது பெரிய பாவம் என்று புராண கதைகளில் படித்தது .இவை எல்லாம் சேர்ந்து ஒரு குழப்பம் இருந்தது.

அதனால் பூனைகள்.  என்னிடம்
ஒட்டிக்கொள்ள வந்தால்கூட அதை துரத்தி விடுவேன்.

இருந்தாலும் விதி யாரை விட்டது.
என் வீட்டு தோட்டத்தில் கிணற்றில் ஓரத்தில் மூன்று பூனைக்குட்டிகள். மியாவ் மியாவ் என்று அழகாக கத்திக்கொண்டிருந்தன.




அப்போதுதான் இந்த உலகத்திற்கு வந்துள்ளது. போலும்.
பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.
அதன் தாய் இரை தேடப் போயிருந்தது

மனது கேட்கவில்லை .
ஒரு தட்டில் பால்  ஊற்றி வைத்தேன் .
அந்த மூன்று குட்டிகளும்  குடிப்பதை
பார்க்க இன்பமாக இருந்தது.

இப்படியாக பூனைக்குட்டிகளுடன்
ஒரு பந்தம் ஏற்ப்பட்டுவிட்டது.

அப்போதுதான் புதியதாக
ஒரு டிஜிட்டல் காமிராவாங்கியிருந்தேன்
.
அவைகளின் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடிக்க தொடங்கினேன்.
(தொடரும்)






செவ்வாய், 2 செப்டம்பர், 2014

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ? நாயைக் கண்டால் கல்லைக் காணோம்?

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ?
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்?

கல்லையும் நாயையும் மனிதர்களிடமிருந்து
பிரிக்க முடியாது  போலும்!

ஒரு நாய் தெருவில் ஓயாமல்
குரைத்துக் கொண்டிருந்தது,




அது போடும் இரைச்சல் மிகவும்
சகிக்க முடியாமல் இருந்தது,

அதை துரத்த கீழே குனிந்து ஒரு
கல்லை எடுத்து அதன் மீது வீச முனைந்தபோது
அந்த நாயை அங்கு காணோம், அது எங்கோ
ஓடிவிட்டது,

ஆனால் சிறிது நேரம் கழித்து அது மீண்டும்
குரைக்கத்  தொடங்கியது,

மீண்டும் அதே கதைதான், கல்லிருக்கும்போது போது நாயைக் காணவில்லை,
நாயிருக்கும்போது கல்லைக் காணவில்லை.

இந்த கண்ணாமூச்சி ஆட்டம்  தினமும் எல்லோர்  வாழ்விலும் நடக்கிற து, எனவே அதுவே ஒரு பழமொழியாக புழங்கத் தொடங்கிவிட்டது

உண்மையில் நாய் என்பது நம் மனம்தான்

அது ஏதாவது ஒரு பிரச்சினையைப் பிடித்துக்கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கிறது அதிலிருந்து விடுபட மனதை திசை திருப்ப கோயிலுக்கு சென்றுகல்லாய் நிற்கும் தெய்வ வடிவம் முன்பு நின்று பிரார்த்தனை செய்கின்றோம், அப்போது அந்த மனம் காணாமல் போகிறது, கோயிலுக்கு வெளியில் வந்ததும் அந்த மனம் மீண்டும் அதே பிரச்சினையைக் கிளப்புகிறது,

ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் இந்த சம்பவம்தான் ஒரு பழமொழியாக உருவெடுத்தது,

இதிலிருந்து ஒரு உண்மையைபுரிந்து கொள்ளவேண்டும்

பிரச்சினையிலிருந்து விடுபடவேண்டுமென்றால் அந்த பிரச்சினையுடன் நம்மை இணைத்துக்கொள்ளாமல் தனியாக நின்று அதை ஆராய்ந்தால் அதற்கான தீர்வு கிடைக்கும். அல்லது அந்த பிரச்சினையிலிருந்து மனதை திசை திருப்பினால் மனதிற்கு அமைதி உடனே கிடைக்கும்

எப்படிஎன்றால் தலைவலியின் கடுமையிலிருந்து மனதை திசை திருப்ப வலி வலிநிவாரணிகள்  பயன்படுத்துவதைப்போல்

நிவாரணியின்  வீரியம் குறைந்தவுடன் வலி மீண்டும் வந்துவிடும்.

வலிக்கான காரணத்தைகண்டறிந்து அதை  தீர்த்துவைத்தால் மீண்டும் வலி வராது ,அதுபோல் பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதை சரிசெய்தால் மனம் அமைதி அடைந்துவிடும்.


திங்கள், 1 செப்டம்பர், 2014

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து ?

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து ?

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து என்று அடிக்கடி
ஒரு கூக்குரல் ஏதாவது ஒரு அரசியல் கட்சியால்
தமிழ்நாட்டில் இடைவிடாமல் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்
ஒரு அபாய சங்கு.

தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கும்
அரசியல் கட்சிகள் தங்கள்
சுய லாபத்திற்காக தனித் தனியாக
அமைப்புக்களை வைத்துக்கொண்டு
தமிழர்களை ஒன்று சேர விடாமல்
பிரித்து வைத்துகொண்டு தமிழர்களை
அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன

மத்திய அரசு அல்லது மாநில அரசுகள்
மக்கள் நலம் கருதி எந்த திட்டத்தை
கொண்டு வந்தாலும், அதற்கு,அரசியல், மொழி, ஜாதி, இனம் என
சாயம்பூசி அதை தடுப்பதிலேயே பொதுவான
குறிக்கோளாய் வைத்திருக்கின்றன

தமிழர்களை பாதிக்கும் எந்த பிரச்சினைக்கும் ஒருமித்த
குரலை எழுப்புவது கிடையாது. மாறாக ஒருவர்மீது ஒருவர்
குறை கண்டுகொண்டிருப்பதால் தமிழ் மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினைக்கும் முடிவு ஏற்படாமல் அப்படியே கிடப்பில்
போடப்பட்டுள்ளன

தமிழர்கள் ஏற்கெனவே சுதந்திரமாக இருப்பதுபோலவும்
மற்றவர்கள் அவர்களை அடிமையாக்கி விடுவதுபோலவும் சுயநல அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு மாயையை உண்டாக்கி வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் சோம்பலை தங்கள் வாழ்வின் அடிப்படை கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அதனால்தான் வெளி மாநிலங்களிலிருந்து வரும்
லட்சக்கணக்காண  மக்களுக்கு இங்கு அபரிமிதமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

வெளிமாநில மக்கள்தான் தங்கள் புத்திசாலித்தனத்தாலும், உழைப்பாலும்
தமிழ் நாட்டில் வசதியாக வாழ்கிறார்கள்

அவர்கள்தான் பெரிய தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். இங்கிருப்பவன் அவர்களிடம் கூலிக்கு  மாரடிக்கிறான். மெத்தப் படித்த சிலரோ வெளி நாடு சென்று விடுகின்றனர்.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் திறமை இன்மை, லஞ்சம், நாணயமின்மை கொடி கட்டிப்பறக்கிறது.

தமிழ் நாட்டு கனிம வளங்கள்,நதி நீர், நிலம்,வன கடல் வளங்கள் தனியார்களால் சுரண்டப்படுகின்றன , தட்டிக்கேட்க ஆளில்லை.

அடித்தட்டு மக்கள் அரசு அறிவிக்கும் இலவசங்களுக்கும், அரசு விற்கும்
மதுவுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

அவர்களது   வாழ்வும், எதிர்காலமும் அவர்களின் உடல்நலமும் நாசமாகிகொண்டிருக்கிறது. அரசுக்கு அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும், சுகாதார பிரச்சினைகளும் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன .நாடு முழுவதும் புற்றீசல்போல் பெருகிவரும் மருத்துவ மனைகளே இதற்கு சான்று.

சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் தமிழ் மக்களுக்கும் வெகு தூரம்.
அரசு கோடிக்கணக்கான  ரூபாய் செலவில் கிராமந்தோறும் கட்டிகொடுத்த
அனைத்து கழிவறைகளும் பாழ். ஒரு குட்டிசுவர்,பள்ளி சுற்றுசுவர், பேருந்து நிலையம், கோயில் சுற்றுசுவர், ரயில் நிலையங்கள், கடற்கரை என எந்த இடத்தையும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்காமல் அவர்களால் இருக்க முடியாது

அதனால்தான் ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி  சொன்னார். இந்திய நாடு ஒரு திறந்த வெளிக்  கழிப்பிடம் என்று.
அவர் சொன்னதில்  சிறிதும்  தவறில்லை.

எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பொது சொத்துக்களை
சூறையாடுவதில் அவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள்.அல்லர்

வாய்சொல்லில் வீரர்கள் பாரதியார் அன்றே பாரதியார் எழுதி வைத்தார்.

எந்த செயலை செய்வதற்கு முன்பும் அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது கிடையாது அதனால்தான் மிக எளிதாக அனைவராலும் ஏமாற்றப்படுகிறார்கள்


 அயல் நாட்டில் வேலைக்கு செல்வதாகட்டும். குறுக்கு  வழியையே
தேர்ந்தெடுத்து அயோக்கியர்கள் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்க்கையை  தொலைப்பது  வாடிக்கையாக உள்ளது

அதுபோல்  ,சேர்த்த பணத்தை முதலீடு செய்வதாகட்டும். முன் பின் யோசியாமல் ஏமாற்றுப்பேர்வழிகளின் வாய் ஜால பேச்சுக்களை  நம்பி லட்சக்கணக்கான தமிழர்கள் ஏமாந்தது கணக்கில்லை என்பது அனைவருக்கும் தெரியும்

இருந்தும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை  என்பது அன்றாடம் தொடரும் அவலங்கள். காட்டும்.

தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை முறையாக, பிழையறக் கற்பதுமில்லை,பேசுவதுமில்லை,எழுதுவதுமில்லை, ஆனால் தமிழ் மீது பற்று இருப்பதுபோல் நடிக்கிறார்கள். தமிழை . இவர்களே  கொஞ்சமாக அழித்துவிடுவார்கள்

வீரம் தேவைதான். ஆனால் விவேகம் ,சமயோசித புத்தி,  இல்லாவிட்டால் அனைத்தும் பாழ் என்பதை கண்கூடாக கண்டும் இன்னும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கும் இந்த சமூகம்  எப்போது விழிக்கப்போகிறதோ?

தங்களின் இந்த நிலையை தமிழன் என்று புரிந்துகொள்ளப்போகிரானோ?